ADVERTISEMENT

“நான் எம்.ஜி.ஆர் வழிவந்தவன், எனக்கு இதெல்லாம் பிடிக்காது” - நடிகர் ராமராஜன்

05:46 PM Sep 20, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

80 களில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜன் ’சொர்க்கமே என்றாலும்’, ’எங்க ஊரு பாட்டுக்காரன்’, ’கரகாட்டக்காரன்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த ராமராஜன் தற்போது சாமானியன் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ராமராஜன், “நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்பது போல இப்போது மீண்டும் ஹீரோவாகவே திரும்பி வந்துள்ளேன். இந்த படத்தில் நான் ஹீரோ என்பதைவிட கதையும், திரைக்கதையும்தான் ஹீரோ என்று சொல்லலாம். இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு ராமராஜன் துப்பாக்கி புடிச்சு என்ன பண்ணப் போறார் என்றுதான் பலரும் கேட்பார்கள் அதற்கான விடை இந்த படத்தில் இருக்கிறது.

இத்தனை வருடங்களில் எத்தனையோ கதைகள் கேட்டேன். சரியாக அமையவில்லை. ஆனால் எவ்வளவு கோடி கொடுத்தாலும் தரம் கெட்டுப்போய் மோசமான படங்களில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் நான் பின்தொடர்வது எம்ஜிஆரின் பாதையை. அதனால்தான் தம் அடிக்கவும், தண்ணி அடிக்கவும் எனக்கு பிடிக்காது. இந்த 45 வருடங்களில் 45 படங்களில் நடித்து விட்டேன் சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போதுவரை நான் தாடி வைத்ததே இல்லை இந்த படத்திற்காக முதல் முறையாக தாடி வைத்து நடிக்கிறேன். இந்தப்படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூறியபோது அவர் சொன்ன இன்டர்வல் காட்சியை கேட்டு திகைத்து விட்டேன்.

இதுவரை தமிழ் சினிமாவிலேயே வந்திராத அப்படி ஒரு இன்டர்வெல். அதுமட்டுமல்ல இந்த படத்தின் டைட்டில் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. ஒரு படத்தின் டைட்டில் என்பது படத்திற்கு உயிர் போன்றது. படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும்போது கூட அதற்கென தனியாக ஒரு டைட்டில் வைக்க வேண்டும். முதல் குழந்தை பிறந்தபோது நாள் நேரமெல்லாம் கணித்து அலசி ஆராய்ந்து கண்ணன் என பெயர் வைத்துவிட்டு, இரண்டாவது குழந்தை பிறக்கும் போது கண்ணன் 2 என யாராவது பெயர் வைப்பார்களா..? என்னிடம் கூட ஒரு சிலர்‘கரகாட்டக்காரன் 2’ எடுக்கலாமா என கேட்டபோது அப்படியே அவர்களை ஆஃப் பண்ணிவிட்டேன். இயக்குநர் விஜய் மில்டன் ’கோடீஸ்வரன் 2’ வில் நடிக்கிறீர்களா என கேட்டு வந்தபோது மறுத்துவிட்டேன்

50 படம் நடித்துவிட்டு அதன்பிறகு டைரக்ஷன் பக்கம் போய்விடலாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் சூழ்நிலை அப்படியே மாறிவிட்டது. இப்போது 45 படம்.. இது போதும் எனக்கு.. முதல் முறையாக எனது படம் 5 மொழிகளில் வெளியாகிறது என்பதை இப்போது நினைத்தாலும் இது கனவா இல்லை நனவா என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் ராகேஷை பார்க்கும்போது என்னை முதன்முதலாக நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் வி.அழகப்பன் போன்றே எனக்கு தோன்றுகிறார். இந்த நேரத்தில் எனக்கு இப்படி ஒரு படத்தை கொண்டு வந்ததற்காக தயாரிப்பாளர் மதியழகனுக்கும், இயக்குநர் ராகேஷுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT