ADVERTISEMENT

“விளையாட்டுல மதத்தை கலந்திருக்கீங்க...” - அரசியல் பேசும் ரஜினி

11:19 AM Nov 12, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லால் சலாம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த டீசரில், கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆக்சன் மற்றும் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசரின் ஆரம்பத்தில் வரும் “இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்த்து இருக்கீங்களா; நமது ஊரில் நேரடியாக பார்க்கப் போறீங்க..” வசனத்தில் இருந்தே படத்தின் அரசியல் எதை நோக்கிச் செல்கிறது என்று தெரிய வருகிறது. மேலும், விளையாட்டில மதத்தை கலந்துருக்கீங்க; குழந்தைங்க மனசுல கூட விஷத்த விதச்சிருக்கீங்க..” என்று ரஜினி பேசும் வசனம் பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அண்மையில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சிலர் முழக்கமிட்டதும், பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்டதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT