ADVERTISEMENT

வெற்றி துரைசாமி குடும்பத்தாருக்கு ரஜினி நேரில் ஆறுதல்

04:33 PM Feb 14, 2024 | kavidhasan@nak…

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் விதார்த்தை வைத்து ‘என்றாவது ஒரு நாள்’ படத்தை இயக்கியிருந்தார். 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 40க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் இமாச்சலப்பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தார். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் சிக்கிப் பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் வெற்றி துரைசாமி மாயமானார். அவரைக் கண்டுபிடிக்க மத்தியப் பிரதேச போலீசார், ராணுவ வீரர்கள், ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் மூலம் தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. பின்பு 8 நாட்கள் கழித்து வெற்றி துரைசாமியின் உடல் கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, அது முடிந்தவுடன் வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து நேற்று (13.02.2024) சென்னை கொண்டு வரப்பட்டது.

ADVERTISEMENT

சென்னையில் சிஐடி நகரில் உள்ள வெற்றி துரைசாமியின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அஜித் தனது குடும்பத்தாருடன் நேரில் சென்று வெற்றி துரைசாமியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். நடிகரும் தவெக தலைவர் விஜய் அஞ்சலி செலுத்த வந்து, பின்பு கூட்டம் அதிகமான காரணத்தால் திரும்பி போனதாக கூறப்படுகிறது. அவரது சார்பில் அவரது கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட சில நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மேலும் முதல்வர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்பு தியாகராய நகரில் உள்ள மயானத்தில் வெற்றியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ரஜினிகாந்த், வெற்றி துரைசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள வெற்றி துரைசாமியின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT