ADVERTISEMENT

ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு ராகவா லாரன்ஸ் அதிரடி பதில்...

12:54 PM Jul 30, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

தெலுங்கு பட உலகில் கிளப்பிய புயலைத் தொடர்ந்து தற்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பாக பாலியல் புகார் கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி 'தமிழ் லீக்ஸ்' என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்... "என்னைப் பொறுத்தவரை ஸ்ரீரெட்டி விவகாரம் ஒரு பெரிய விஷயம் அல்ல. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால், இந்த சர்ச்சை குறித்து பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டார்கள். அவர்களுக்கு பதிலளிக்க, இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். நான் தெலுங்கில் 'ரெபல்' படத்தை இயக்கிய சமயம் ஒரு ஹோட்டலில் என்னை சந்தித்ததாக ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். அப்படிப் பார்த்தால், நான் அந்தப் படத்தை இயக்கி 7 வருடங்கள் ஆகிறது. இந்த 7 வருடங்கள் என் மீது புகார் கூறாத ஸ்ரீரெட்டி, தற்போது கூறுவது ஏன்?

நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அவர் வந்ததாகவும், அங்கு வைத்து நான் அவரை தவறாக பயன்படுத்தியதாகவும் கூறினார். மேலும் அந்த ஓட்டல் அறையில் கடவுளின் புகைப்படம் மற்றும் ருத்ராட்ச மாலையை பார்த்ததாகவும் கூறியிருக்கிறார். ஓட்டல்களில் ருத்ராட்ச மாலையை எடுத்துச் செல்ல, பூஜை செய்ய நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நான் அவருக்கு எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை என்பது எனக்கும், கடவுளுக்கும் தெரியும் என்பதை ஸ்ரீரெட்டியிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதற்குப் பிறகும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை. உங்களது அனைத்து பேட்டிகளையும் பார்த்து உங்கள் மீது பரிதாபப்படுகிறேன். உங்கள் பிரச்சனைதான் என்ன? வாய்ப்பு தருவதாக கூறி அனைவரும் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்பதுதானே? நீங்கள் ஒரு சிறந்த நடிகை என்று கூறிகிறீர்கள். நாம் இருவரும் செய்தியாளர்களை நேரில் சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு காட்சியோ வசனமோ கொடுக்கிறேன். சில டான்ஸ் ஸ்டெப்களும் தருகிறேன். நீங்கள் ஆட வேண்டும். கஷ்டமானதாகத் தந்து உங்களை தோற்கடிப்பேனென்று நினைக்க வேண்டாம். ஈஸியாகத்தான் தருவேன். உங்களிடம் திறமை இருப்பதை செய்தியாளர்கள் முன்பே நீங்கள் நிரூபித்து உங்களது நடிப்பும், நடனமும் என்னை திருப்திப்படுத்தினால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதற்கான முன்பணத்தையும் உடனே வழங்குகிறேன்.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை, எனவே உங்களை நேரில் சந்திப்பதில் எனக்கு பயமில்லை. எனது படத்தில் நீங்கள் நடிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அனைவர் முன்பும் நடித்துக் காட்ட விருப்பமில்லை எனில், எனது மேனேஜரைத் தொடர்பு கொண்டு, உங்களது வழக்கறிஞர்கள் மற்றும் உங்களது நலம் விரும்பிகளுடன் வந்து நடித்துக் காட்டுங்கள். நான் கண்டிப்பாக வாய்ப்பு வழங்குகிறேன். உங்களுக்கு பயந்து இந்த அறிக்கையை நான் வெளியிடவில்லை. நான் பெண்களை மதிப்பவன், அதனாலேயே எனது தாய்க்கு கோவில் கட்டியுள்ளேன், அதை அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பித்துள்ளேன். நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம். உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்" என இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகக் கூறியுள்ளார். ஸ்ரீரெட்டி இதற்கு பதில் தருவாரா அல்லது அடுத்த பட்டியலை வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT