ADVERTISEMENT

“ஸ்டாலின் சார் ஒருமுறை முதல்வராக வந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தேன்”- ரஜினி அரசியல் வருகை குறித்து லாரன்ஸ்

03:23 PM Dec 09, 2019 | santhoshkumar

சமீபத்தில் ரஜினி நடித்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான லாரன்ஸ் கலந்துகொண்டார். அப்போது ரஜினியின் அரசியல் வருகையை விமர்சிப்பவர்கள் குறித்து பேசினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதில், “ரஜினி சார் அரசியலுக்கு வருகிறேன் என்று ஒரு மேடையில் அறிவித்தார். அந்த மேடையில் மற்றவர்களைப் புகழ வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லவே இல்லை. ஸ்டாலின் சார் தொடங்கி இன்னொருவர் வரை, அவர் பெயரைச் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை. அந்த மேடையில் இதர அரசியல் தலைவர்களைப் புகழ வேண்டிய அவசியமே இல்லை. அவர் இரண்டு வார்த்தைப் பேசினாலே, அது தான் அன்றைய செய்தியாக இருக்கிறது.

அனைவரும் அரசியல் பேசுகிறார்கள். ரஜினி சாருக்கு அரசியல் தெரியாது என்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரட்டும் பார்த்துக்கலாம். அவருக்கு வயதாகிவிட்டது என்கிறார்கள். அதை அவர் நடக்கும் போதே தெரிந்துக்கொள்ளலாம். 1996ஆம் ஆண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிறார்கள். அவர் அப்போது அரசியலுக்கு வர விரும்பவில்லை. இந்த வயதில் அவருக்குப் பணம், புகழ் வேண்டுமா?. பலரும் அவரை வீட்டில் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள்.

ரஜினி சாரை பலருமே பப்ளிசிட்டிக்காக பேசுகிறார் என்கிறார்கள். பப்ளிசிட்டிக்கு பெயரே சூப்பர் ஸ்டார் தான். அவருக்குப் பணம், புகழ் எல்லாம் தேவையில்லை. இந்த மேடையில் கூட குடும்பத்தினரை முதல் வரிசையில் உட்கார வைக்கலாம். ஆனால், இரண்டாம் வரிசையில் உட்கார வைத்த ஒரே தலைவர் ரஜினி மட்டுமே. இந்த வயதில் ஏன் அரசியலுக்கு வருகிறார் என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

கலைஞர் மறைந்த போது, கடுமையாகப் போராடி இடம் வாங்கினார் ஸ்டாலின் சார். அப்போது அவர் கண்கலங்கியதை பார்க்கையில் ஸ்டாலின் சார் ஒருமுறை முதல்வராக வந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தேன். அது தான் ரஜினி சார் ரசிகனின் மனது. எடப்பாடி ஐயா எப்படி முதல்வர் என்று நினைத்தேன். பின்பு உடனுக்குடன் வேலை செய்வதைப் பார்த்து மகிழ்ந்தேன். இவர்கள் எல்லாம் தவறாக அரசியல் பண்ணுவதில்லை, மேடையில் நாகரீகம் இல்லாமல் பேசுவதில்லை. அவர்களுடைய உழைப்பில் ஒவ்வொருவரும் நன்றாக வந்துள்ளார்கள்.

ஆனால், அரசியலில் ஒரு சிலர் நாகரீகமே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் ரஜினி சாரிடம் பதவிக் கேட்கவில்லை, இந்த மேடைக்குப் பேச்சுக்குப் பிறகு ரஜினி சார் என்னிடம் பேசாமல் இருந்தால் கூட கவலையில்லை. அரசியல் தலைவர்கள் பலரும் நாகரீகமாகப் பேசுகிறார்கள். ஒரு தலைவர் மட்டும் தான் அநாகரீகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் தான் இந்த நாட்டுக்கே கேடு எனச் சொல்வேன். அரசியலிலேயே அது தவறான விஷயம். அது பெரிய ஆபத்து.

ரஜினி சாரைப் பேசி அதன் மூலம் வரும் விளம்பரத்தால் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். என் தலைவரின் மேடையில் யாரையும் திட்டிப் பேசினால் அவருக்குப் பிடிக்காது. இங்குச் சிலர், அரசியலுக்கு யார் வந்தாலும் தவறாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் ரஜினி சாரை பற்றி யாராவது தவறாகப் பேசினால், நான் திரும்பப் பேசுவேன். அரசியலை அரசியலாகப் பேசுங்கள். இங்கு என்னோட உணர்ச்சியை அடக்க முடியாமல் பேசிவிட்டேன். எனக்கு அரசியல் ஒன்றுமே தெரியாது. அரசியலில் நான் ஜீரோ. தயவுசெய்து மறுபடியும் என்னைச் சீண்டி கற்றுக் கொள்ள வைத்துவிடாதீர்கள்” என்று பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT