ADVERTISEMENT

விஜய் சிம்மாசனத்தில் இருக்கிறார்... அஜித் எம்.ஜி.ஆரைப் பார்த்து கத்துக்கணும்... - இயக்குனர் பேரரசு பேட்டி

03:59 PM Mar 11, 2019 | george@nakkheeran.in


பக்கா கமெர்ஷியல் படங்களுக்கு முகவரியான சில இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் பேரரசு. தனது படங்களில் ஹீரோவுக்கு நிகராக பில்டப் வசனங்களுடன் ஒரு காட்சியிலாவது திரையில் தோன்றி அரங்கத்தை தெரிக்கவிடுவார். விஜய், அஜித் இருவருக்கும் காமெடி, சண்டை, சென்டிமென்ட் என கமெர்ஷியல் டெம்லட்டில் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். அவருடன் நடத்திய உரையாடலில் விஜய், அஜித் பற்றி கூறிய சுவாரசியமான தகவல்களின் தொகுப்பு...

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஜயின் 40 வது படமான திருப்பாச்சி படத்தை நீங்கள்தான் எடுத்தீங்க. அப்போ அவரது மாஸ் வேல்யூ எப்படி இருந்துச்சு? அவரிடம் கதைச் சொன்ன முதல் அனுபவம் எப்படி இருந்தச்சு?

அப்போதுதான் விஜய் ஆக்‌ஷன் படங்களுக்குள் நுழைகிறார். அதற்குமுன் லவ் டுடே, ப்ரண்ட்ஸ் மாதிரியான காதல் படங்களில் நடித்துப் பெரிய ரசிகர் கூட்டத்தைச் சேர்த்துவைத்திருந்தார். நான் கதைச் சொன்ன பிறகுதான் திருமலை, கில்லி ஆகிய படங்கள் வெளியாகின. முதலில் நான் விஜய்காக திருப்பாச்சி கதையை எழுதவில்லை. சவ்திரி சார் கதைக் கேட்கப்போகிறார், எதாவது வித்தியாசமாக சொல்லிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர், விஜயின் கால் ஷீட் இருக்கு, அவருக்கு ஏற்றமாதிரி கதை இருந்தால் சொல்லுங்கள் என்றார். நல்லவேலையாக திருப்பாச்சி கதை வைத்திருந்தேன். அதை விஜயிடம் சொன்னேன். அவரிடம் முழுமையாக ஒரு கதையைச் சொல்வது சாதாரணக் காரியம் இல்லை. நான் போயிருந்த போது என்னைப் பற்றி எதுவுமே விசாரிக்காமல் நேராக கதைக் கேட்டார், எனக்கு ஜர்காகிவிட்டது. இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு கதைச் சொல்ல துவங்கினேன். தொடங்கியதிலிருந்து முடிகிறவரை அவரின் ஃபேஸ் ரியாக்‌ஷன் மாறவேயில்லை. நான் காமெடி சீன் சொன்னாலும், சென்டிமென்ட் சீன் சொன்னாலும் ரியாக்‌ஷன் ஒரேமாதிரி இருக்கு. சொல்லி முடித்ததும் 2 செகண்ட் கேப் விட்டு 5 நிமிடம் வெளியில் வெயிட் பண்ணச் சொன்னார். சூட்டிங்குக்கு எப்படி சரியான நேரத்தில் வருவாரோ அதேபோல் 5 நிமிடத்தில் வந்தார், அப்போதும் அதிகமாக பேசவில்லை. நல்லாயிருக்கு, பண்ணலாம் என்று மூன்று மணி நேரம் கதைச் சொன்னதுக்கி இரண்டுவார்த்தைகளில் பதில் சொன்னார்.

திருப்பாச்சி படத்தில் எந்த விஷயம் அவருக்குப் பிடித்தது? விஜய் நடிக்கிறார் என்பதால் நீங்க எதையெல்லாம் அவருக்காக சேர்த்தீங்க?

அதுவரை விஜய் காதல் படங்களில் மட்டும்தான் நடித்திருந்தார், திருமலை, கில்லி ஆகிய படங்கள்கூட காதலோடுச் சேர்ந்த ஆக்‌ஷன் படங்கள்தான். அதனால், திருப்பாச்சியில் இருந்த தங்கச்சி சென்டிமென்ட் அவருக்கு ரொம்ப பிடிச்சது. அவரும் தங்கச்சியை சிறுவயதிலேயே இழந்தவர். அவரின் சொந்த வாழ்க்கையின் பாதிப்பு நடிக்கும்போதும் அவரிடம் தெரிந்தது. “என்ன தவம் செஞ்சுப்புட்டோம், அண்ணன் தங்கையாகிப்புட்டோம்”பாடலில் விஜய் நடிப்பைப் பார்த்து எல்லொரும் கண் கலங்கினார்கள். முதலில் சாதாரண கதையாகதான் திருப்பாச்சி இருந்தது. இண்ட்ரோ பாடலெல்லாம் நான் வைக்கவில்லை. விஜய் நடிக்கிறார் என முடிவான பிறகுதான் அய்யனார் கோவில் திருவிழா, அதற்கு விஜய் அரிவாள் செய்கிறார் போன்ற காட்சிகளும், “என் அண்ணன் சாதாரண அரிவாளுக்கே அந்தளவுக்குப் பவரேத்தும், இது அய்யனார் அரிவாள், எந்தளவுக்கு பவரேத்துதோ”அப்படிங்க்குற பில்டப் டையலாக் எல்லாம் வச்சு விஜய்க்கு இண்ட்ரோக் கொடுத்தோம். அதுபோல, சந்தனம் பூசிய சண்டைக் காட்சியெல்லாம் அவருக்காக மாற்றி அமைக்கப்பட்டது. வெறும் அரிவாளால் வெட்டுனாதான் கொலை, இப்போ இது வதம் என்று அரிவாளில் எலுமிச்சைப் பழம் சொருகுற காட்சியெல்லாம் அவருக்காக சேர்த்ததுதான்.

இளையதளபதி விஜய் இப்போது தளபதி விஜயாக மாறியிருக்கிறார். அப்போ இருந்த விஜய்க்கும், இப்போ நீங்கள் பார்க்கிற விஜய்க்கும் என்ன வித்தியாசம். அதோடு இப்போ விஜயுடன் நீங்கள் படம் எடுத்தால் அது எந்த மாதிரியான கதையாக இருக்கும்?

அவரின் வெற்றிக்குக் காரணமாக நான் பார்ப்பது கதைக் கேட்பதுதான். பெரிய இயக்குனர் சிறிய இயக்குனர் என்றெல்லாம் பார்க்காமல் எல்லோரிடமும் கதைக் கேட்டுதான் முடிவெடுப்பார். அதுவும் கதைக் கேட்கும்போது விஜயாக இல்லாமல் அவரின் ரசிகர்களை மனதில் வைத்தேக் கேட்பார். திருப்பாச்சிக்கு முன்பு அவர் எப்படி இருந்தாரோ அதேபோல் எதற்கும் அலட்டிக்கொள்ளாமல், ஆணவம் எதுவும் இல்லாமல் இப்பவும் இருக்கிறார். அதுபோல, அவரின் உதவி மனப்பான்மை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் உதவி செய்வது வெளியில் தெரியாது, யாகுக்கும் தெரியக்கூடாது என்றுச் சொல்லியேக் கொடுப்பார். நான் சிவகாசி படத்திற்காக கதைச் சொல்ல சென்றிருந்தபோது உட்கார இடமில்லாமல் ஆபிஸ் முழுக்க நோட் புத்தகங்கள் நிறைய அடுக்கியிருந்தது, விசாரித்தபோது அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அனுப்புவதற்காக விஜய் அதையெல்லாம் வாங்கி வைத்திருக்கிறார். இதுபோன்ற உதவிகளை இப்போதும் நிறைய செய்துகொண்டிருக்கிறார். பல நடிகர்கள் வளருவார்கள், அப்புறம் திடிர்னு காணாமல் போயிடுவாங்க. ஆனால் விஜய் வளர்ந்து தனக்கான ஒரு சிம்மாசத்தில் உட்காட்ந்துவிட்டார். எனவே, நான் இப்போது விஜயுடன் படம் பண்ணவேண்டுமென்றால் திருப்பாச்சி, சிவகாசி படங்களில் இருந்ததுபோல் தங்கச்சி, அம்மா சென்டிமென்ட் வைத்தெல்லாம் ஒப்பேற்ற முடியாது. இப்போது அவரின் உயரத்திற்குத் தகுந்ததுபோல் ஒரு சமூக பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய கதையைத்தான் படமாக எடுப்பேன்.

விஜய்கூட இரண்டு படம் பண்ணிட்டு அடுத்து அஜித் கூட திருப்பதி பண்ணுறீங்க. அதுல அஜித்தின் கெட்-அப் ‘நான் கடவுள்’ படத்துக்காக ரெடியானது. ஆனா உங்க படத்தில் நடித்தாரே?

எல்லா நடிகர்களுக்கும் பாலாவின் படத்தில் நடிக்கணும் என்கிற ஆசை இருக்கும். அப்படித்தான் அஜித்தும் நினைத்திருந்தார். பாலாவின் நான் கடவுள் படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது, அதற்காகதான் உடல் இளைத்து, நீளமாக முடி வளர்த்திருந்தார் அஜித். ஆனால், கதை இன்னும் தயாராகவில்லை, மூன்று மாதங்கள் ஆகும் என பாலா கூறிவிட்டார். அந்த மூன்று மாதத்தில் நான் திருப்பதி படத்தை முடித்துவிடலாம் என்று சூட்டிங் தொடங்கினோம். அதில் எனக்கு இரண்டு சவால்கள் இருந்தன. ஒன்று, ஏப்ரல் 14ல் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும். இன்னொன்று, அஜித் அடுத்து பாலாவிடம் நடிக்கப்போகிறார், அதற்கு இடைஞ்சல் வரக்கூடாது. எனவே இரவு பகலாக வேலை செய்தோம். ஜனவரியில் சூட்டிங் தொடங்கி மார்ச் மாதம் இறுதியில் முதல் பதிப்பை தயாரிப்பாளரிடம் ஒப்படைத்தேன், ஏப்ரல் 5ல் படம் சென்சார் செய்யப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு பாலா படத்தில் அஜித் நடிக்கவில்லையென செய்திகள் வந்தது. அது ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. இது முன்பே தெரிந்திருந்தால் கொழு கொழு அஜித்தை பயன்படுத்தியிருக்கலாம் என்ற வருத்தம் எனக்கு இருந்தது. மற்றபடி திருப்பதி படம் சரியா ஓடவில்லையென்பது தவறான செய்தி. திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களை ஒப்பிடும்போது வெற்றி சதவீதம் குறைவாக இருக்கலாம் ஒழிய திருப்பதி எனக்கு ஹிட் படம்தான், அஜித்துக்கும் அது ஹிட் படம்தான். 107 நாட்கள் படம் ஓடியது. ஏ.வி.எம்-ல் நூறாவது நாள் வெற்றிவிழாவும் கொண்டாடினார்கள்.

அஜித் பொது நிகழ்வுகளில், சினிமா விழாக்களில் கலந்துகொள்வதில்லை, அவருடைய படங்களுக்கே இசை வெளியிட்டு விழாவோ, பத்திரிக்கை சந்திப்பொ வைப்பதில்லை. அதற்குக் காரணம் என்ன?

பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ஏதேனும் பேசவேண்டியிருக்கும் அதனால் ஏதேனும் சர்சைகள் வரலாம் என்பதற்காக அவர் எதிலும் கலந்துகொள்ளாமல் இருக்கலாம். அல்லது அடிக்கடி தன்னை வெளிக்காட்டிக் கொள்வதால் தனது மாஸ் குறைந்துவிடும் என்று நினைத்திருக்கலாம். அப்படி நினைத்திருந்தால் அது தவறான விஷயம். எம்.ஜி.ஆர்-ஐ விட மக்களிடம் மாஸ் இருந்த நடிகர் வேறு யாரும் இல்லை. நடித்தவரைக்கும் அவர்தான் சூப்பர் ஸ்டார், இறக்கும் வரையில் அவர்தான் முதல்வர். இருந்தும், அவர் சந்தித்த அளவுக்கு மக்களை அதிகமாக சந்தித்த நடிகர் அப்போது யாரும் இல்லை. எவ்வளவு அதிகமாக மக்களைச் சந்திக்கிறோமோ அந்தளவுக்கு மக்கள் நம்மை நேசிப்பார்கள். இருந்தாலும் பொது நிகழ்விகளில் கலந்துகொள்வது அஜித்தின் தனிப்பட்ட விருப்பம். ஏன் வரவில்லை, ஏன் வந்தார் என யாரும் கேள்வி கேட்க முடியாது.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT