perarasu latest speech

'திறந்திடு சீசே' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுரளி பாலு இசையமைத்திருக்கும் இப்படம் 2கேகிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தை எஸ்.எஸ்.பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது.‌

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அப்போது மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேரரசு பேசுகையில், ''இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள், நடிகைகள் மீது தயாரிப்பாளர் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்து வைத்துக் கொண்டு, இதுபோன்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு வழங்க வேண்டும். இதனை ஒரு ஆலோசனையாக முன் வைக்கிறேன்.

Advertisment

இப்படத்தின் விழாவில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநரை, இயக்குநர் சங்கத்திற்கு வரவழைத்து பேசினோம். அவர் சிக்லெட்ஸ் படத்தின் கதையை விவரித்தார். உடனே இதுபோன்ற படத்தின் விழாவிற்கு அவசியம் செல்ல வேண்டும் என்று நினைத்துஇங்கு வருகை தந்திருக்கிறேன். இந்தப் படத்தில் பிள்ளைகளின் விசயத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படத்தை பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் தங்களது பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டு, ஏமாளிகளாக இருக்கிறார்கள். இதனால்தான் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது.

இன்றைக்கு விவாகரத்து அதிகரித்துவிட்டது. அதற்காக பெற்றோர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. இன்று ஒரே வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பேசாமல் பல ஆண்டுகளாக கணவன் - மனைவி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களுடைய பிள்ளைகளுக்காகத்தான் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய இளம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அப்பா அம்மா என்பது ஒரு பிராப்பர்ட்டி ஆகிவிட்டது. இதுபோன்ற சூழலில் 'சிக்லெட்ஸ்' போன்ற படங்கள் வெளிவருவது அவசியம்'' என்றார்.

Advertisment