தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் ஜெயம் ரவி - அஹ்மத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தியில் ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் 'ஜவான்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதிக்கிறார். இதனைத் தொடர்ந்து நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்திலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கிறார். இதில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் நயன்தாராவின் 75வது படமாக உருவாகிறது. படப்பிடிப்பு அண்மையில் ரஜினிகாந்தின் ஆசியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நயன்தாரா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை 'விக்ரம் வேதா', 'தமிழ் படம் 2' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் சசி காந்த் தயாரித்து இயக்குகிறார். இப்படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தில் மாதவன் மற்றும் சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'டெஸ்ட்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கான மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.