ADVERTISEMENT

"லட்ச லட்சமாக சம்பாரித்தேன், என் தாய் கேட்டதோ..." - இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி நினைவு

06:07 PM Mar 19, 2019 | santhoshkumar

இசைஞானி இளையராஜா சமீபகாலமாக கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகிறார். மாணவ மாணவிகளிடம் இசையின் முக்கியத்துவத்தை பற்றியும், அதன் வல்லமை பற்றியும், அவர் கடந்து வந்த பாதை குறித்தும் எடுத்துரைக்கிறார். மாணவர்களிடம் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என கட்டாயமாக வலியுறுத்துகிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்த வகையில் சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது இளையராஜாவிடம் உங்கள் அம்மாவின் சிறந்த பண்பாக எதை சொல்வீர்கள் என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இளையராஜா, “என் தாயை போல வேறு எந்த தாயும் இல்லை. நானும் என் அண்ணனும் சென்னை கிளம்ப வேண்டும் என முடிவெடுத்தோம். அம்மாவிடம் சென்னை செல்வதற்கு பணம் தாருங்கள் என்று கேட்டோம். நாங்கள் சென்னை கிளம்புவதற்காக எங்கள் அம்மா வீட்டிலிருந்த விலை உயர்ந்த ரேடியோ பெட்டியை விற்றார். ரூ.800 விலையுள்ள ரேடியோ பெட்டியை வெறும் ரூ. 400க்கு விற்று, எங்களிடம் அந்த ரூ. 400 பணத்தையும் கொடுத்தார். அந்த சமயத்தில் வீட்டில் காசு பற்றாக்குறை இருந்தது. ஆனாலும் அவர் ரூ. 400 இல் தனக்கென பணம் எடுத்துகொண்டு எங்களிடம் தரவில்லை. முழு பணத்தையும் கொடுத்துவிட்டு, இது போதுமா? என்று எங்களிடம் கேட்டார். நாங்களும் அவரிடம் ஐம்பது ரூபாய் கூட அதிலிருந்து எடுத்துக் கொடுக்காமல், அந்த பணத்தை முழுதாக வாங்கி வந்துவிட்டோம். அவருக்கும் எங்களிடம் பணம் கேட்க வேண்டும் என்கிற உணர்வு இல்லை. இந்த பண்பை எந்த கல்லூரி கொடுத்துவிடும்! இதுதான் பண்பு. இதுதான் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது. அது என் அம்மாவிடம் நிறையவே இருந்தது.


அப்படிப்பட்ட தாயை என் மனைவி கவனித்துகொண்டிருந்தபோதும், என் அம்மாவிற்காக லட்ச லட்சமாக சம்பாதித்துகொண்டிருந்த நேரத்தில்கூட அவருக்காக நான் சின்ன நகையோ, நல்லப் புடவையோ எதையுமே எடுத்துக் கொடுக்கவில்லை. அவரும் என்னிடம் கேட்டதுக்கூட இல்லை.


ஒருமுறை என் அம்மா என்னிடம் வந்து கொஞ்சம் பணம் வேண்டுமேப்பா என்று தயங்கி தயங்கி கேட்டார். நான்கூட பெரிய தொகையாக கேட்க போகிறார்கள் போல என்று மனதிற்குள் நினைத்துகொண்டிருந்தேன். பின்னர், அவர் அவ்வளவு தயங்கி கேட்ட பணம் ரூ.2000 தான். ஆனால், நான் வேண்டும் என்றே அவரிடம் அவ்வளவா என்று பயமுறுத்தினேன். அம்மா உடனே நிறைய கேட்டுவிட்டேனாப்பா என்றார். இல்ல அம்மா என்று சிரித்துகொண்டே பணத்தை கொடுத்தேன். இதுபோல ஒரே ஒருமுறைதான் என்னிடம் அவர் கேட்டிருக்கிறார்.


இதனால் என் மனைவியை குறித்து அவர் ஒருமுறைக்கூட குறை சொல்லியதில்லை. நான் இருக்கும்போது எதற்கு உன் மனைவி வீட்டை பார்த்துக்கொள்கிறார். நானே பார்த்துக்கொள்கிறேன் என்று ஒருமுறை கூட சொல்லியதில்லை. அந்த பண்புதான் என் அம்மா. என் அம்மா உயிருடன் இருந்தபோதே, ஒரு படத்தில் அம்மா மறைந்ததற்கு டியூன் கேட்டார்கள். நான் ‘உன்னபோல ஆத்தா, என்ன பெத்துபோட்டா’ என்ற பாடலுக்கு இசை அமைத்து, ரெகார்ட் செய்து அவர் உயிருடன் இருக்கும்போதே என் போட்டுக்காட்டினேன். அந்த பாடலை கேட்டு அவர் கண்ணில் கண்ணீராக கொட்டியது. இந்த மாதிரியான தாய் உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது” என்றார்.


இறுதியாக கல்லூரியில் சிறப்புரையை கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளை பார்த்து, “ மாணவிகளே நீங்கள் அனைவருமே எனக்கு தாய்தான். நீங்களும் ஒருநாள் தாயாக போகிறீர்கள் அல்லவா? ” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT