ADVERTISEMENT

‘மனிதர் உணர்ந்து கொள்ள...’ - மஞ்சும்மல் பாய்ஸின் ஓடிடி அப்டேட்

03:15 PM Apr 27, 2024 | kavidhasan@nak…

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் முக்கியமான இடத்தில் பயன்படுத்தியிருந்தது. அது தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிட திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இதனிடையே கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்து ரஜினி, தனுஷ், விக்ரம், சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் இயக்குநர் சிதம்பரத்தை அழைத்து பாராட்டியிருந்தனர்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் இப்படம் பேசுபொருளாகவே மாறி, இப்படத்தின் தாக்கத்தினால் சுற்றுலா விரும்பிகள் பலரும் குணா குகையை நோக்கிப் படையெடுத்தனர். இதையடுத்து உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனை படைத்தது. இதையடுத்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு கடந்த 6ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. மே 5 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT