ADVERTISEMENT

ஆஸ்கருக்கு செல்லும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’

04:39 PM Jan 10, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்வுக்காக அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியா சார்பில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' (Chhello Show) படம் அனுப்பப்பட்டது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படமும் படக்குழு சார்பில் தனிப்பட்ட முறையில் 15 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாமினேஷனுக்கான முந்தைய இறுதிச்சுற்று பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அதில் சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 'செல்லோ ஷோ' படமும், சிறந்த பாடல் [Music (Original Song)] பிரிவில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலும் இடம் பெற்றது. மேலும், ஆல் தட் ப்ரீத்ஸ் மற்றும் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படங்கள் சிறந்த ஆவணப்படம் மற்றும் ஆவண குறும்பட பிரிவுகளில் இடம்பெற்றன.

இந்த நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு ஆஸ்கர் விருதுக்கு தகுதியான 301 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்', அலியா பட் நடித்த 'கங்குபாய் கத்தியவாடி', இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட குஜராத்தி படம் 'செல்லோ ஷோ', மாதவனின் 'ராக்கெட்ரி நம்பி விளைவு', பார்த்திபனின் 'இரவின் நிழல்', விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ உள்ளிட்ட சில படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் நடந்த 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது படத்தை பார்த்த தேர்வுக்குழு தலைவர் நடாவ் லேபிட், "இப்படம் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகவும் கெளரவமான இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படத்தைப் பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த எங்கள் அனைவருக்கும் மன உளைச்சலையும் தந்துள்ளது" என வெளிப்படையாக விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து சர்வதேச திரைப்பட விருதில் சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் அதே சர்வதேச விருதான ஆஸ்கருக்கு தகுதியான பட்டியலில் இடம் பெற்றுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் இறுதிப் பரிந்துரைகளில் இடம்பெறலாம் அல்லது இடம்பெறாமல் போகலாம். இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வரும் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT