ADVERTISEMENT

நாகேஷை விளையாடவிட்டு நின்று ரசித்த சிவாஜி! - கமல்ஹாசன் சொன்ன கதை

02:03 AM Jul 04, 2019 | vasanthbalakrishnan

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனம் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'கடாரம் கொண்டான்'. விக்ரம், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். வருகிற ஜூலை 19 வெளிவர இருக்கும் இந்தத் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. டீசர் வெளியிடப்பட்ட இந்த விழாவில், தயாரிப்பாளர் கமல்ஹாசன் மேடையில் பேசினார். அப்போது விக்ரம் குறித்தும் படக்குழுவின் பிற உறுப்பினர்கள் குறித்தும் பேசும்பொழுது அனந்து, சிவாஜி கணேசன் உள்ளிட்ட மறைந்த திரைக்கலைஞர்கள் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சின் ஒரு பகுதி...

ADVERTISEMENT


ADVERTISEMENT


"ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தொடங்கப்பட்டது, நான் பயணிக்கும் ஊபர் காராக அல்ல. என்னைத் தாண்டியும் நல்ல படங்களை அது உருவாக்க வேண்டுமென்பதற்காக. முதலில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் என்று தொடங்கப்பட்டு பிறகு எனது குருநாதர் அனந்து அவர்களால் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்நேஷனல்' என்று ஆனது. அந்த 'இண்டெர்நேஷனல்' என்ற வார்த்தையை சேர்த்தது அவர்தான். பாலச்சந்தர் அவர்கள் பற்றி நான் சொன்ன அளவுக்கு அனந்து குறித்து நான் சொன்னது கிடையாது. யார் என்று கேட்பார்கள். அவரது குணாதசியமே அவரை யார் என்று கேட்க வைத்ததுதான். பல பெரிய நடிகர்களுக்கு உதவியிருக்கிறார். எங்களுக்கு அவர் எப்படி உதவினாரோ, அப்படி பலருக்கு உதவத்தான் ராஜ்கமல் நிறுவனம்."



தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்தும் குறிப்பிட்டார். "படத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும், சிறு பாத்திரம் என்றாலும் கூட, 'யார்யா இது' என்று கேட்கவைக்கும் அளவுக்கு இருக்கவேண்டும். அப்போதுதான் அந்தப் படத்தின் ஆயுள் காலம் கூடும். ஒரு நல்ல நடிகர் என்பவர் 'கபடி கபடி' என்று உடன் நடிப்பவர்களின் காலை வாருபவராக இல்லாமல், தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். நான் நல்ல நடிகன், என்னுடன் நடிப்பவர்களும் நல்ல நடிகர்கள் என்று பதற்றமில்லாமல் இருக்க வேண்டும். சிவாஜி சார் அப்படித்தான். வெளியே என்னென்னமோ கதையெல்லாம் சொல்வார்கள், 'சிவாஜி சார் நடிக்க விடமாட்டார். மத்தவங்களையெல்லாம் அமுக்கிடுவாரு'ன்னுலாம் சொல்வாங்க. அதெல்லாம் இல்லை. பேருதாரணம் நாகேஷ். திருவிளையாடல் படத்தில் நாகேஷை விளையாட விட்டுட்டு நின்னு அதை ரசிப்பார். அப்படி கம்பீரமாக இருக்க வேண்டும்".

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT