ADVERTISEMENT

முதல்வரின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு

02:22 PM Sep 25, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதல்வர் மு.க ஸ்டாலின், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம்.

இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT