
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதையடுத்து திருவாரூரில் ஏராளமான திமுகவினர் மொட்டை அடித்தும் கேக் வெட்டியும் கொண்டாடினர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் இன்று ஆட்சி அமைத்தது.
ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளூநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவருடன் 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் அருகே பெரும்புகளூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஐயப்பன் மற்றும் 50க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் சேகர் முன்னிலையில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கட்சி கொடியேற்றியும் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் ஸ்டாலின் பதவியேற்றதைக் கொண்டாடினர்.