ADVERTISEMENT

மும்பையைக் கலக்கிய 3 தமிழ் டான்கள்!

03:27 PM Jun 06, 2018 | vasanthbalakrishnan

ஒருவழியாக நாளை வருகிறார் காலா சேட். ரஜினியின் அரசியல் அறிவிப்பு, தூத்துக்குடி பயணம், அதைத் தொடர்ந்த சர்ச்சை, பா.ரஞ்சித்தின் தொடர் அரசியல் செயல்பாடுகள் என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வருகிறது இவர்கள் கூட்டணியின் இரண்டாவது படம். படத்தில் மும்பை தாராவியில் வாழும் தமிழர்களின் தலைவராக, நெல்லையைச் சேர்ந்தவராக ரஜினி இருக்கிறார். தமிழகத்திலிருந்து மும்பை சென்று அங்கு செல்வாக்குள்ளவர்களாகத் திகழ்ந்தவர்கள் மூவர். அவர்களில் ஒருவரது கதையாக இருக்கலாம் என்றும் பலர் கூறினர். அந்த மூவர் யார் என்பதை இங்கு பார்ப்போம். 'காலா' அவர்களில் ஒருவரா இல்லை முற்றிலும் வேறொருவரா என்பதை நாளை திரையில் பார்ப்போம்.

ADVERTISEMENT



கடந்த ஜூன் மாதம் 'காலா - கரிகாலன்' என்று டைட்டிலுடன் ரஜினி ஜீப்பில் அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பொழுதே படத்தின் கதை பற்றி பல யூகங்கள் வந்தன. தமிழ்நாட்டிலிருந்து மும்பை சென்று, அங்கு பெரிய 'டானா'க உருவெடுத்தவர் பற்றிய கதை என அடிப்படையாய் சில தகவல்களை இயக்குனர் ரஞ்சித் கூற, அது மும்பை தமிழ் நிழலுலக தாதா ஹாஜி மஸ்தானின் கதை எனவும் திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று அங்கு ஒரு பகுதி தமிழர்களின் தலைவராகத் திகழ்ந்த திரவிய நாடார் என்பவரின் கதை எனவும் கூறப்பட்டது. உடனே இதன் எதிர்வினையாக, ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகனாகிய சுந்தர் சேகர் என்பவர் ரஜினிகாந்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். "என் வளர்ப்புத் தந்தை ஹாஜி மஸ்தான் அவர்களைத் தவறாக சித்தரித்து படமெடுத்தால், பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்" என பேட்டியும் அளித்தார்.

ADVERTISEMENT


திரவிய நாடாரின் மகள் விஜயலட்சுமி, "திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று தாதாவான ஒரே தமிழர் என் தந்தை தான். இது அவர் கதையாக இருந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்", என்று கூறியுள்ளார். படத்தைத் தயாரிக்கும் நடிகர் தனுஷ், தன் 'வுண்டர்பார்' நிறுவனத்தின் சார்பாக, 'காலா மும்பையில் நடப்பதாக எழுதப்பட்ட ஒரு கற்பனை கதை. எந்த தனி மனிதரையும் குறிப்பிடுவதல்ல' என்று அறிக்கை வெளியிட்டார். அந்த பிரச்சனை முடியும் முன் அடுத்த பிரச்சனையாக, 'காலா- கரிகாலன் எனது கதை, 1995இல் நான் ரஜினியிடம் அவரது வீட்டில் வைத்து இந்தக் கதையை கூறினேன். தலைப்பையும் பதிவு செய்துள்ளேன்' என்று திரையுலகைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் வழக்குத் தொடுக்க, பின்னர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.



பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக கற்பனை கதை என்று கூறப்பட்டு, பல உண்மை சம்பவங்களுடன் எடுக்கப்பட்ட பல படங்களை தமிழகம் பார்த்துள்ளது. காலா வந்தால் தான் தெரியும், அது கற்பனை கதையா, இல்லை உண்மைக் கதையா என்று. சரி, தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்குச் சென்று அங்கு பெரும்புள்ளியாக, டானாக மாறியவரின் உண்மைக்கதையைத் தழுவி 'நாயகன்' எடுக்கப்பட்டுவிட்டதே...அதன் பிறகும் 'காலா - கரிகாலன்' அப்படி சொல்லப்படுவதன் காரணத்தை ஆராய்ந்தால், 'நாயகனை'த் தவிர இன்னும் இருவரும் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு சென்று பெரும் புள்ளிகளாய் திகழ்ந்திருக்கிறார்கள். 'நாயகன்' கதை வரதராஜ முதலியாரின் கதையை சில இடங்களில் தழுவி எடுக்கப்பட்டது. வரதராஜ முதலியாரைத் தவிர ஹாஜி மஸ்தான், திரவிய நாடார் ஆகியவர்களும் இங்கிருந்து சென்று மும்பை நிழலுலகத்தில் முக்கிய புள்ளிகளாகினர்.


மஸ்தான் ஹைதர் மிர்சா, ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் 1926ஆம் ஆண்டு பிறந்து கடலூரில் சிறிது காலம் வாழ்ந்து, பின் பிழைப்பு தேடி தன் தந்தையுடன் பம்பாய் சென்றார். சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்த அவர்களுக்கு வருமானம் பற்றாமல் போக, பம்பாய் துறைமுகத்தில் கூலி வேலை செய்யப் போனார். அங்கு கிடைத்த தொடர்புகளின் மூலம் சின்ன சின்ன கடத்தல் வேலையில் ஈடுபட்டவர் மெல்ல வளர்ந்தார். ஆப்கானிஸ்தானிலிருந்து மும்பைக்கு புலம் பெயர்ந்த கரீம் லாலா என்பவருடன் இணைந்து பல பெரிய வேலைகளைச் செய்து பணம் சம்பாரிக்கத் தொடங்கினார். தங்கக் கடத்தலில் பணம் கொட்ட, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல கடத்தல் தொழில்களிலும் ஈடுபட்டு விரைவில் பெரும் புள்ளியானார். வெள்ளை பென்ஸ் கார், வெள்ளை ஆடை, வெளிநாட்டு சிகரெட், என இவர் தான் மும்பையின் முதல் 'ஸ்டைலிஷ்' தாதா. பணப்புழக்கம் அதிகரிக்கவும், புதுப் பழக்கங்களும் அதிகரித்தன. இந்தி திரையுலகிலும் நுழைந்தார். படங்களுக்கு நிதியளித்தார், பின் தயாரிக்கவும் செய்தார். ராஜ் கபூர், திலீப் குமார், தர்மேந்திரா என பாலிவுட் பிரபலங்கள் இவரது நண்பர்களாகினர்.



இவரது தொடர்புகள் வேறு தளங்களில் இருந்தாலும் மும்பையில் இருந்த தமிழர்களுக்கும் பாதுகாப்பாய் இருந்தார். இன்னொரு தமிழ் புள்ளியான வரதராஜ முதலியரிடம் மிகுந்த நட்புடன் இருந்தார். ஒரு கட்டத்தில், முதலியாரின் கூட்டாளிகள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டு, அவரும் சென்னைக்கு வந்து 1988இல் உயிரிழந்த பொழுது, அவரின் விருப்பப்படி, அவரது உடலைத் தனி விமானத்தில் மும்பை கொண்டு சென்று அடக்கம் செய்தார் ஹாஜி மஸ்தான். அந்த அளவுக்கு நட்புடன் இருந்தனர் இவர்கள். 1984இல் 'தலித் முஸ்லீம் சுரக்ஷா மகா சங்' என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தினார். ஆண் வாரிசு இல்லாததால், சுந்தர் சேகர் என்பவரை தன் தத்துப் பிள்ளையாக வளர்த்தார். அவர்தான் இப்பொழுது ரஜினிக்கு நோட்டீஸ் விட்டவர். ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையைத் தழுவி, இந்தியில் 'தீவார்' (Deewar), 'ஒன்ஸ் அபான் அ டைம் இன் மும்பை' (Once upon a time in Mumbai) ஆகிய படங்கள் வந்தன.



வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான் ஆகியோரிடமிருந்து சற்று மாறுபட்டவர் திரவிய நாடார். சின்ன வயதில் வறுமையினால் திருநெல்வேலியில் இருந்து பம்பாய் சென்றது, ஆரம்பத்தில் சின்னச் சின்ன சட்டவிரோத செயல்கள் செய்தது என இவரது தொடக்க காலமும் அவர்களைப் போலவே இருந்தாலும், பின்னாட்களில், அவர்கள் அளவுக்கு பிரபலமான நிழலுலக மனிதராக இவர் திகழவில்லை. மாறாக தாராவி மக்களுக்கு அரணாய் அமைந்து, தமிழ்க் குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றையும் காட்டியுள்ளார்.


திருநெல்வேலியில் இருந்து தன் பதினாறு வயதில் சென்னைக்கு சென்று, அங்கு தன் அண்ணன் ஏற்றுக்கொள்ளாததால், ரயிலேறி பம்பாய்க்கு சென்றார். கள்ளச்சாராயத்துக்குத் தேவைப்படும் வெல்லம் விற்கும் வேலையில் ஈடுபட்டு வளர்ந்ததால், 'ஃகூடு வாலா சேட்' எனவும் அழைக்கப்பட்டாராம். ஒரு கட்டத்தில் கடத்தலில் இருந்து விலகி, காலியாக இருந்த நிலங்களைக் கைப்பற்றி கடைகள் கட்டியுள்ளார். அங்கிருந்த தமிழர்களுக்கு உதவியாகவும் இருந்துள்ளார். காமராஜரின் தீவிர ஆதரவாளராகவும் இருந்துள்ளார். ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார் ஆகியோருடனும் நல்ல உறவில் இருந்துள்ளார்.

'காலா'வில் ரஜினிகாந்தின் தோற்றமும், ட்ரைலரும் கதையைப் பற்றி ரஞ்சித் கூறியிருக்கும் தகவல்களும் இந்த இருவரையுமே நினைவுபடுத்துகின்றன. அதைத் தாண்டி, பாடல்களையும் வசனங்களையும் பார்க்கும்பொழுது, மும்பை டான் என்ற கதையைத் தாண்டி படம் பல அரசியல் பேசும் என்பது உறுதியாகத் தெரிகிறது. அது ரஜினியின் அரசியலா ரஞ்சித்தின் அரசியலா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT