ADVERTISEMENT

''வங்கிகளைப் போல் ஃபைனான்சியர்களும் வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்'' - பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்   

01:40 PM Apr 02, 2020 | santhosh


உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், 21 நாள் லாக்டவுன் நேரத்தில் மக்களிடையே ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்க நிலையைச் சீர்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி மக்கள் வங்கிகளில் வாங்கிய எந்தக் கடனுக்கும் மூன்று மாதம் EMI கட்டத் தேவையில்லை.அதேபோல வங்கிகளும் அடுத்த மூன்று மாதங்களுக்குக் கடன் வசூலிப்பை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதற்கிடையே தமிழ் சினிமா படப்பிடிப்புகளும் கரோனா வைரஸ் அச்சத்தால் நிறுத்தப்பட்டுள்ளன. நடிகர்கள், தயாரிப்பாளர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியிருக்கும் ஃபெப்சி பணியாளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. மேலும் தயாரிப்பாளர்களுக்கும் கடன் வட்டி சுமையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பைனான்சியர்கள் வட்டி தொகையினை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார். அதில்...


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள் !


"அன்புடையீர் வணக்கம்,


கரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் பல்துறைகளும் முற்றிலும் முடங்கிக்கிறது. அதிலும் குறிப்பாகத் தமிழ்த் திரைப்படத் துறை முற்றிலும் ஸ்தம்பித்து அந்தந்தப் பணிகள் அப்படியே முடங்கிவிட்டது.படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த படங்கள், படப்படிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்ற படங்கள், பட வேலைகள் முடிந்து வெளியீட்டுத் தறுவாயில் இருந்த படங்கள் எனத் திட்டமிட்ட அனைத்து வேலைகளும் அப்படியே சிதைந்து விட்டது. இந்த நேரத்தில் தயாரிப்பாளர்களுக்காக ஒரு தாழ்மையான வேண்டுகோள்....

தற்போது தயாரிப்பில் இருக்கும் திரைப்படங்கள், திரைக்கு வர இருக்கும் திரைப்படங்களின் கதாநாயகர், கதாநாயகி, இயக்குநர், இசையமைப்பாளர், கேமிராமேன், மற்றும் முக்கியமான டெக்னிஷியன்கள், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்திலிருந்து குறைந்த பட்சம் 30% சம்பளத்தை விட்டுக்கொடுத்து இந்தக் கடுமையான சூழலில் தயாரிப்பாளர்களுக்கு தோள்கொடுத்து பக்கபலமாக இருந்து உதவ வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை இந்தக் காலக்கட்டத்தில் யாரும் 3 மாதங்கள் வட்டியோ, இ.எம்.ஐயோ வாங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கும், மற்ற நிதி நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.அந்த வகையில் திரைத்துறை பைனாஸ்சியர்களுக்கு ஒரு வேண்டுகோள்.தயாரிப்பாளர்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,இந்தக் காலச்சூழ்நிலை முற்றிலும் மாறி இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அதாவது 2 மாதங்களோ, 3 மாதங்களோ அல்லது 4 மாதங்களோ அதுவரை வட்டி தொகையினை முழுவதுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மிகத் தாழ்மையுடன் வேண்டுகோளை வைக்கிறேன். அப்படிச் செய்யும் பட்சத்தில் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் சுமை, பயம் அகலும்.இயல்பு நிலை திரும்பியதும் நல்லமுறையில் படத்தினை முடித்து வெளியிட மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

இந்த ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு வெளியாகி ஓடிக்கொண்டிருந்த படங்களுக்கு இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் ரிலீஸ் செய்வதற்கு முன்னுரிமைக் கொடுத்து, உதவ வேண்டும் என்று தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத்திற்கும், விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் வேண்டுகோள் வைக்கிறேன்.சிறிய படங்கள் நிறைய திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து, இயல்புநிலை திரும்பியதும் சிறிய பட்ஜெட் படங்கள், அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் என்று மாறி மாறி வெளியாகும் வகையில் காலச்சூழலை உருவாக்கி சிறு தயாரிப்பாளர்களை வாழ வைப்பதற்கு தியேட்டர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் துணைநிற்க வேண்டும். இந்த வேண்டுகோள் அனைத்தும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் எண்ணம். அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்து வருகிறார்கள். நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர்களின் மனநிலையை உணர்ந்து இங்கே பதிவு செய்கிறேன். இந்த வேண்டுகோள்களுக்கு தயவுகூர்ந்து சம்மந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்கள் செவிசாய்த்து தயாரிப்பாளர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்குமாறும், இந்த நேரத்தில் நாம் ஒருத்தருக்கொருத்தர் தோள்கொடுத்து, உறுதுணையாக இருந்து, இந்தச் சூழலை முற்றிலும் முறியடிக்க பக்கபலமாக இருந்து, உதவுமாறும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் சார்பில் மிக மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி! வணக்கம்.

இப்படிக்கு,
ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்
தேசிய விருதுகள் பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்/நடிகர் '' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT