Advertisment

அப்படி என்னதான் இருக்கு இந்தப் படத்தில்? பக்கத்து தியேட்டர் #2 ஜோக்கர் 

கடந்த வாரம், ஒரு பக்கம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'யில் சிவகார்த்திகேயன் இஸ் பேக் என்று கொண்டாட்டம் நடக்க மறுபுறம் 'அசுரன்' வெளிவந்ததற்கு முன்பும் பின்பும் 'அசுரத்தனமான நடிப்பு, படம்' என்று கொண்டாடிக்கொண்டிருந்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள். அஜித் ரசிகர்கள், 'தல' டெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற புகைப்படங்களை ட்ரெண்ட் ஆக்கிக்கொண்டிருக்க விஜய் ரசிகர்கள் 'பிகில்' அப்டேட்ஸ், ட்ரெயிலரை ட்ரெண்டாக்கிக்கொண்டிருக்கின்றனர். இதில் எதிலுமே சேராத ஒரு கூட்டம் 'ஜோக்கர்' ஒருவரை DPயாகவும் ஸ்டேட்டஸாகவும் வைத்து புதுப்புது கோட்ஸை பகிர்ந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தது. யார் இந்த ஜோக்கர், எதற்கு இந்த ஈர்ப்பு?

Advertisment

joaquin phoneix

'ஜோக்கர்' கதாபாத்திரம் என்பது ஒரு வில்லன் கதாபாத்திரம். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணமாக இருந்தவர் ஹீத் லெஜ்ஜர். கிறிஸ்டோபர் நோலன் எடுத்த 'டார்க் நைட் ட்ரைலஜி'யில் வரும் 'டார்க் நைட்' படத்தில் ஜோக்கராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். பலரும் இந்தக் கதாபாத்திரம் பற்றி பேசினால் சொல்லும் ஒரு வாசகம், “ஹீத் லெஜ்ஜர் ஜோக்கராக நடிக்கவில்லை, ஜோக்கராகவே வாழ்ந்திருக்கிறார்” என்பதுதான். அந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட மெனக்கிடல் ஏராளம். தன்னுடைய நடை, உடை, கண் அசைவு வரை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு டைரியில் குறிப்பெடுத்து ஜோக்கராக வாழ்ந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருதையும் பெற்றார். ஆனால், ஆஸ்கர் மேடையில் விருதை வாங்கிக் கொண்டாட அவர் அப்போது உயிருடன் இல்லை. ஜோக்கராக வாழ்ந்து மக்கள் மனதில் இடம்பிடிக்க அவர் கொடுத்த விலை அவரது உயிர். இதுவரை ஜோக்கர் கதாபாத்திரத்தில் பலர் நடித்திருக்கின்றனர். ஆனால், ஹீத் மட்டுமே ஜோக்கருக்கு உரியவர், வேறு யாரும் அந்த இடத்தை பிடிக்க முடியாது என்பதை பலரும் நம்பினார்கள். அந்த அளவுக்கு இருந்தது லெஜ்ஜரின் நடிப்பு. அப்போதுதான் ஜோக்கர் கதாபாத்திரத்தில் ஜேர்ட் லெடோ என்பவர் ‘சூசைட் ஸ்குவாட்’படத்தில் தோன்றினார். ஆனால், ஜோக்கர் ரசிகர்களுக்கு டென்ஷன்தான் மிச்சம்.

Advertisment

இதனையடுத்துதான் 2016ஆம் ஆண்டு ஜோக்கர் கதாபாத்திரத்தை வைத்து ஒரு சோலோ படத்தை எடுப்பதற்கான எழுத்து வேலையை டாட் பிலிப்ஸ் தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியானது. பலருக்கும் அது அதிர்ச்சியை தந்தது. ஹேங் ஓவர், டாக் வார்ஸ் போன்ற பிளாக் காமெடி படங்களை எடுத்தவர் ஜோக்கர் கதாபாத்திரத்தை நாசம் செய்யப்போகிறார் என்னும் அளவிற்கு பயந்திருந்தனர். பின் வருடம் ஓடியது, எழுத்துப் பணி நிறைவடைந்துவிட்டது. ஜோக்கர் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்றபோது லியானார்டோ டிகாப்ரியோ என்று அனுமானங்கள் சமூக வலைதளத்தில் பரவின. அதன்பின் வார்னர் பிரோஸ் நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வந்தது, ஆக்கின் பீனிக்ஸ்தான் ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி. வந்ததும் பலரும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். அது என்னமோ தெரியவில்லை மிகப்பெரிய நடிகர்தான் இருந்தாலும் ஹீத் லெஜ்ஜர் உருவாக்கிய தாக்கம், வேறு ஒரு சிறந்த நடிகரால் கூட அந்தக் கதாபாத்திரத்தை சரியாக நடிக்க முடியாது என்று பலரை நம்ப வைத்தது. இந்த நம்பிக்கையெல்லாம் போகப் போக உடையத் தொடங்கியது.

முதன் முதலில் இந்தப் படத்தை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடாமல் வெனிஸ் பிலிம் ஃபெஸ்டிவலில் வெளியிட்டது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். படத்தை பார்த்த பார்வையாளர்கள் ஆறு நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள், சிறந்த படத்திற்கான 'தங்க சிங்கம்' விருதையும் பெற்றது. பல நாடுகளில் அக்டோபர் நான்காம் தேதி வெளியான இந்தப் படம் இந்தியாவில் அக்டோபர் இரண்டாம் தேதி பெரிய வரவேற்புடன் வெளியாகியுள்ளது.

joker

சரி, படத்தை பற்றி பார்ப்போம். கோமாளி வேடம்போட்டு மக்களை மகிழ்விக்கும் வேலை பார்க்கும் ஆர்த்தர் பிளெக் (ஆக்கின் பினீக்ஸ்), ஒரு வித அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார். மனதளவிலும் அழுத்தங்களோடும் சில குறைபாடுகளோடும் இருப்பார். 7 வகையான மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பார். கோபம் வந்தாலும் சோகம் வந்தாலும் அழுகைக்கு பதிலாக அவருக்கு சட்டென்று சிரிப்பு வந்துவிடும். சிரிப்பு என்றால் சாதாரணமாக இல்லை அருகில் இருப்பவர் அந்த சிரிப்பை கேட்டால் டென்ஷனாகி அவரை அடிக்க வந்துவிடுவார்கள். அதற்காக அவர் கையிலேயே ஒரு விசிடிங் கார்ட் போல தன்னுடைய நிலை என்ன என்பதை அச்சிட்டு வைத்திருப்பார். இவருக்கு ஸ்டாண்டப் காமெடியன் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், அவருடைய இந்த சிரிக்கும் நோயினாலும், அவரின் மனப்பான்மையினாலும் அவரை பலரும் வெறுக்கின்றனர்.

ஆர்த்தருக்கு உடல்நிலையும், மனநிலையும் சரியில்லாத தாய்... அவரையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தக் கதை கோத்தம் சிட்டியில் 1980ஆம் ஆண்டுகளில் நடப்பதுபோல அமைக்கப்பட்டிருக்கும். அப்போது அங்கு வறுமையினால் வர்க்கப் பிரச்சனை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும். அந்த ஊரு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக தெருவில் எங்கும் குப்பைகளால் சூழப்பட்டிருக்கும். அவர் தங்கியிருக்கும் ஒரு மோசமான பழுதடைந்த அபார்ட்மெண்டில் அவர் இருக்கும் தளத்திலேயே சோபி (ஜேசி பீட்ஸ்) என்ற பெண் தன் குழந்தையுடன் வசித்து வருவார். ஆர்த்தர் இவர் மீது காதல் கொண்டிருப்பார். ஆர்த்தர் அந்த சமூகத்தில் அனைவராலும் தவிர்க்கப்படுகிறார், சிலரால் ஏமாற்றப்படுகிறார். அமைதியாக இருப்பவரை பலரும் வம்புக்கழைத்து அவருக்குள் உறங்கும் குரூரத்தை அவ்வப்போது வெளிக்கொண்டு வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் அரசாங்கம் வறுமையில் இருப்பவர்களை பற்றி யோசிக்காமல் அவர்களுக்கு அளித்துவந்த மருத்துவ உதவியை நிறுத்திவிடுகிறது. அதே காலகட்டத்தில் வேறு ஒரு காரணத்துக்காக நகர ரயிலில் மூன்று பேர் கொல்லப்பட, அது ஏழைகளுக்கு பணக்காரர்கள் மேல் உள்ள பொறாமையால் நடந்த கொலை என்று திரிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்துப் பேசும் நகர மேயர் தேர்தல் வேட்பாளரும் 'பேட் மேன்' ப்ரூஸ் வேனின் தந்தையுமான தாமஸ் வேன், ஏழை மக்களை சற்று ஏளனமாகப் பேசிவிட காத்தம் நகரமே போராட்டக்களமாகிறது. இப்படி, ஊரும் ஆர்த்தரின் உள்ளமும் கொதிநிலையை அடைய அதுவரை தன்னுடைய குரூரத்தை கண்ணில் மட்டும் காட்டிவந்த ஆர்த்தர் முழுவதுமாக ஒரு சைக்கோவாக படிபடியாக மாறத்தொடங்குகிறார். இதன்பின் என்ன ஆனது? என்பதுதான் படம்.

ஆர்த்தராக அதாவது ஜோக்கராக உருமாறியிருக்கும் ஆக்கின் பினீக்ஸின் நடிப்புதான் இந்தப் படமே. முழுக்க முழுக்க அவரை சார்ந்தே நகரும் படத்தில் அவருடைய நடிப்பு உச்சத்தை தொட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். படம் வெளியாகும் வரை ஹீத் லெஜ்ஜர்தான் சிறந்த ஜோக்கர் என்று சொல்லி வந்தவர்களுக்கு சவால்விட்டு நடித்திருக்கிறார். அதாவது கண்ணில் குரூரம் தெரிகிறது. அதேசமயத்தில் கட்டுப்படுத்தமுடியாத சிரிப்பு. இன்னொரு கட்டுப்படுத்த முடியாத சிரிப்பில் கண்ணில் சோகம் தெரிகிறது. இதுபோல வித விதமாக சிரிப்பையும் கண்களில் நடிப்பையும் ஒரு சேரத் தருகிறார். தொடக்கத்தில் ஆர்த்தர், மனிதாபிமானத்துடன் நடந்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகளில் அவருடைய கோமாளித்தனமான உடல் மொழி நம்மை சிரிக்க வைக்கிறது. ஆனால், போகப் போக குரூரம் அவருக்குள் இருக்கும் மனிதாபிமானத்தை கொன்றபிறகு கோமாளித்தனமாக அவர் நடந்துகொண்டாலும் அதனுடன் வில்லத்தனமான ஸ்டைல், கிளாஸாகத் தெரிகிறார். மூன்றுமுறை ஆஸ்கருக்காக நாமினேட் ஆனவர் இவர். இன்னும் விருது வாங்கவில்லை. இந்த முறை ஜோக்கர் படத்திற்காக உறுதியாக வாங்கிவிடுவார் என்று பலரும் நம்புகிறார்கள்.

joker

ஆர்த்தரின் நடிப்பு எவ்வளவு பக்கபலமாக இருந்ததோ அதேபோல படத்தின் திரைக்கதை இன்னுமொரு பலமாக அமைந்திருக்கிறது. முதலில் ஒரு தியானநிலையில் உருவான படம் பின்னர் டார்க் ஷேடாகா மாறி, கடைசியில் அனைவருக்கும் பதற்றத்தை உருவாக்கும் குரூரத்தை காட்டுகிறது. குரூரத்தை காட்டும்போதே சில காமெடிகளை தெளித்துவிடுவது திரைக்கதையில் நுட்பமான வியூகம். அதேபோல ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் சேர்ந்து நமக்கு ஒரு பயத்தையும் அச்சத்தையும் கொடுக்கின்றன. அமெரிக்கன் கலர் என்று சொல்லப்படும் நிறங்கள்தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் பிரேம்களில் வரும் இருட்டு நம்மை அச்சமடைய செய்கிறது. முர்ரே பிராங்கிளினாக வரும் ராபர்ட் டி நிரோவுக்கு படத்தில் பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்றாலும் அவரும் ஆர்த்தர், ஜோக்கராக மாறுவதற்கு ஒரு காரணமாகிறார். ஒரு பக்கம் ஆர்த்தர் செய்யும் செயல்களுக்கு பெரும் அதிர்வலை ஏற்பட்டு காத்தம் சிட்டியில் இருக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களும் கோமாளிகளாக உருமாறுகிறார்கள். அதேபோல படத்தில் சேர்க்கப்பட்ட பேட்மேன் ரெஃபரன்ஸுகள் படத்தை பார்க்கும் டிசி ஃபேன்களுக்கு தியேட்டரில் ஒரு குஷியை கொடுக்கிறது. ஒரு ஆங்கிலப் படத்தை தியேட்டரில் விசிலடித்து, கொண்டாடி ஆர்பரித்துப் பார்த்ததை பார்க்கும்போது நமக்கும் ஒரு குஷி வந்துவிடுகிறது.

ரஜினியிலிருந்து அஜித் வரை பல நாயகர்களை அவர்களது வில்லன் அவதாரத்தில் ரசித்துக் கொண்டாடி பழக்கப்பட்டிருந்தாலும் 'ஜோக்கர்' வேறு ஒரு அனுபவத்தைத் தருகிறது.

அடுத்த படம்:கேரளாவில் இருந்து ஒரு ஜல்லிக்கட்டு! - மனிதன் மிருகமாகும் தருணம்... பக்கத்து தியேட்டர் #3

முந்தைய படம்:இப்படி ஒரு கேங்... இப்படி ஒரு லீடர்... - பக்கத்து தியேட்டர் #1

christopher nolan batman dc comics joker
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe