ADVERTISEMENT

'சிலோன் போலீஸ் உடை குறித்து கேள்வியெழுப்பிய உளவுத்துறை...' 'மேதகு' படப்பிடிப்பு அனுபவம் குறித்துப் பகிரும் இயக்குநர் கிட்டு!

02:15 PM Jul 01, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட ‘மேதகு’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் கிட்டுவுடன் நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் உரையாடினோம்.

‘மேதகு’ படத்தின் பயணம் எங்கிருந்து தொடங்கியது?

‘மேதகு’ படத்தின் இறுதிக்காட்சியைத்தான் முதலில் ஒரு குறும்படமாக எடுத்திருந்தோம். ‘ரைஸ் ஆஃப் கரிகாலன்’ என்ற அந்தக் குறும்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சுந்தர் தமிழன் என்பவர்தான் இதை எடுப்பதற்கு எங்களுக்கு முழு உந்துதலாக இருந்தார். அந்த வரவேற்பைத் தொடர்ந்து, இதை முழு நீள படமாக எப்படி எடுக்கலாம் என்று தஞ்சாவூரைச் சேர்ந்த குகன்குமாரும் சுமேஷ் குமாரும் என்னிடம் கேட்டனர். தலைவர் பிறப்பில் தொடங்கி ஆல்பர்ட் துரையப்பா கொலைவரை படமாக்கலாம் என்று யோசனை கூறினேன். அந்த யோசனை அவர்களுக்கும் பிடித்திருந்ததால் படத்தின் ஆரம்பகட்டப் பணிகளை உடனே துவங்கினோம்.

பிரபாகரன் பற்றிய படம் என்றால் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. படம் ஆரம்பிக்கும்போது அது பற்றிய எண்ணங்கள் உங்களுக்கு இருந்ததா?

இந்தப் படத்திற்கு நிச்சயம் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காது என்பது இந்தப் படம் தொடங்கும்போதே எங்களுக்குத் தெரியும். அதனால் ஓடிடி தளத்திற்கான படமாகத்தான் இந்தப் படத்தை எடுத்தோம். சில ஓடிடி தளங்கள்கூட கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றச் சொன்னார்கள். உண்மை வரலாற்றை எடுப்பதால் அதைச் செய்ய நாங்கள் மறுத்துவிட்டோம். பிளாக் ஷீப் தளம்தான் எந்த மாற்றமுமின்றி படத்தை அப்படியே எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்தவரை எப்படி தேர்வு செய்தீர்கள்?

தம்பி குட்டிமணியை முதலில் துணை கதாபாத்திரத்திற்குத்தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தோம். பிரபாகரன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆட்கள் தேடிக்கொண்டிருக்கையில் தம்பி குட்டிமணி அக்கதாபத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று எனக்குத் தோன்றியது. அந்தச் சமயத்தில் அவர் நிறைய தாடி வைத்திருந்தார். அதை ஷேவ் செய்துவிட்டு பார்க்கையில் தலைவர் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருத்தமானவராக இருந்தார்.

படம் உருவாக்கலில் இருந்த பொருளாதாரச் சிக்கல்கள் என்னென்ன?

இந்த மாதிரி ஒரு படம் எடுக்க இருக்கிறோம் என்று அறிவித்து உலகத் தமிழர்களிடம் நிதியுதவி கோரினோம். அமெரிக்காவில் இருந்து ஒரு குழு எங்களுக்காக வேலை பார்த்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம், அமீரகத்திலிருந்தும் நிறைய உதவிகள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் படத்தின் பட்ஜெட் நாங்கள் நினைத்ததைவிட அதிகமாகச் சென்றுவிட்டது. வேறு வழியில்லாமல் 15 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி படத்தைத் தொடர்ந்தோம். அந்த நேரத்தில்தான் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரமேஷ் அண்ணன், ‘வட்டிக்கெல்லாம் எதற்குப் பணம் வாங்குகிறீர்கள்... நான் தருகிறேன் என்று கூறி நிதியுதவி அளித்தார். இது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் முயற்சியால் உருவான படம்.

படமாக்கலின்போது இருந்த நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன?

ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடத்தலாம் எனத் திட்டமிட்டு அங்கு செல்வோம். அங்கு உளவுத்துறை ஆட்கள் நின்றுகொண்டிருப்பார்கள். அதனால் உடனே வேறு இடத்திற்குப் படப்பிடிப்பை மாற்ற வேண்டிய நிலை அடிக்கடி ஏற்பட்டது. யாழ் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு கலவரக்காட்சி படமாக்கும்போது சுற்றி உளவுத்துறை ஆட்கள் நின்றுகொண்டிருந்தார்கள். போலீஸ் உடையணிந்திருக்கிறார்கள்... அதுவும் சிலோன் போலீஸ் உடையணிந்திருக்கிறார்கள்... என்ன காட்சி எடுக்கிறீர்கள் என்றெல்லாம் படப்பிடிப்பில் குறுக்கிட்டனர். அவர்களுக்கு அனைத்தையும் எடுத்துச் சொல்லித்தான் படப்பிடிப்பு நடத்தினோம். உளவுத்துறை ஆட்களுக்கு மத்தியில்தான் இந்தப் படமே எடுக்கப்பட்டது.

பிரபாகரன் குறித்து நிறைய விமர்சனங்கள், அவதூறுகள் தற்போது பரப்பப்படுகின்றன. இந்த நேரத்தில் ‘மேதகு’ படத்தின் முக்கியத்துவம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கும். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நாம் ஒரு படத்தை எடுத்து வைப்போம் என்று நினைத்தெல்லாம் நாங்கள் ‘மேதகு’ படத்தை எடுக்கவில்லை. இது 2020ஆம் ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய படம். அந்தச் சமயத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. கடந்த மே 22ஆம் தேதி மீண்டும் ரிலீஸுக்குத் திட்டமிட்டிருந்தோம். அதுவும் தள்ளிப்போனது. ‘ஜகமே தந்திரம்’ படத்திற்குப் பிறகு நம்முடைய படம் வெளியாகிறது. ‘ஃபேமிலி மேன்’, ‘ஜகமே தந்திரம்’ என நிறைய பேருக்கு நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கு... அதனால் கொஞ்சம் பொறு என்று தேசியத்தலைவர் நினைத்ததாகவே அந்த இருமுறை ரிலீஸ் ரத்து குறித்து நான் நினைக்கிறேன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT