Skip to main content

‘மூன்று நாட்கள் ரூமைவிட்டு வெளியே வராத மகேந்திரன்...’- நக்கீரன் ஆசிரியர்

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

''இயக்குநர் மகேந்திரனை கலைமேதை ஒருவர், கைகுலுக்க வரும் போது அவமானப்படுத்தினார். அதற்காக ரொம்பவே வருந்தினார் மகேந்திரன்'' என்று நினைவஞ்சலிக் கூட்டத்தில், நக்கீரன் ஆசிரியர் குறிப்பிட்டார்.
 

nakkheeran asiriyar

 

 

இயக்குநர் மகேந்திரன் சமீபத்தில் காலமானார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில், அவருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
 

இதில் நக்கீரன் ஆசிரியர் கலந்துகொண்டு பேசியது:
 

''1992-ம் வருடத்தில் இருந்தே மகேந்திரன் சாருக்கும் எனக்கும் நல்ல பழக்கம் உண்டு. அவரை அண்ணன் என்றுதான் அழைப்பேன். அப்போது ஒருமுறை அவர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. ‘மூணுநாளா ரூம்லேருந்தே வெளியே வரமாட்டேங்கிறாரு’ என்று சொன்னார்கள்.
 

நான் உடனே போனேன். அவரிடம் என்ன ஏது என்று விசாரித்தேன். சமீபத்தில் ஒரு விழாவுக்குச் சென்றபோது, ஒரு கலைமேதையை அவர் சந்தித்ததாகவும் அப்போது கைகுலுக்க இவர் கையை நீட்டியதாகவும் உடனே அந்த மேதை, கையைத் தட்டிவிட்டதாகவும் ‘எனக்குள்ளே ஒரு வைப்ரேஷன் இருக்கு’ என்று அவர் சொன்னதாகவும் இதனால் மனசே சரியில்லை என்றும் மகேந்திரன் சார் சொன்னார். இதையெல்லாம் வைத்து, ஒரு கட்டுரை வெளியிட்டேன். அது அவருக்கு ஓரளவு வடிகாலாக இருந்தது.
 

kanchana


அதேபோல, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் வெளியாகி சில வருடங்கள் கழித்து ‘மெளனராகம்’ படம் வெளியானது. ரஷ்ய திரைப்பட விழாவுக்கு இந்த இரண்டு படங்களில் எதை அனுப்புவது என பேச்சு நடந்துகொண்டிருந்தது.
 

அப்போது இயக்குநர் மகேந்திரன், ரஜினியை வைத்து ‘கைகொடுக்கும் கை’ படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தை அனுப்பினால், ‘கைகொடுக்கும் கை’ படவேலைகள் பாதிக்கும் என்பது உள்ளிட்ட சில அரசியலெல்லாம் விளையாடின. ஆகவே ‘மெளனராகம்’ படம் அனுப்பப்பட்டது. இதுகுறித்தும் என்னிடம் அவர் வேதனையாகச் சொன்னார். இதையும் ஒரு கட்டுரையாகப் பதிவு செய்தேன். இது இயக்குநர் மகேந்திரனுக்கு ஆறுதலாக இருந்தது.
 

ஒரு டஜன் அளவுக்குத்தான் படங்களை எடுத்திருக்கிறார் மகேந்திரன் சார். ஆனால் உலக அளவுக்கு இன்றைக்கும் அவரை பேசிக் கொண்டிருக்கிறோம். என்றைக்கும் பேசிக் கொண்டிருப்போம்.
 

mahendran with prabhakaran

 

 

பிரபாகரனை ஒருமுறை இரண்டுமுறை பார்த்தவர்களெல்லாம் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு, பப்ளிசிட்டி தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... பார்க்காதவர்கள் கூட கிராபிக்ஸில் போட்டோக்களை இணைத்து, விளம்பரப்படுத்துகிறார்கள்.
 

ஆனால், பிரபாகரனே விருப்பப்பட்டு அழைத்து, அங்கே சென்ற மகேந்திரன் சார், மூன்று நான்கு மாதங்கள் இருந்து பிரபாகரனின் தம்பிகளுக்கு திரைக்கதை குறித்தும் சினிமா குறித்தும் வகுப்புகள் நடத்தினார். தனி ஈழம் அமைந்ததும் இங்கே ஒரு கல்லூரி அமைக்கப்படும். அதில் நீங்கள் அடிக்கடி வந்து வகுப்புகள் எடுக்கவேண்டும் என்றெல்லாம் கேட்டுக்கொண்டார் பிரபாகரன்.
 

ஆனால் இவை எது குறித்தும் தம்பட்டம் அடித்துக்கொண்டதே இல்லை மகேந்திரன் சார். நானே பலமுறை கேட்டும் கூட, ‘பிறகு வெளியிடலாம் பிறகு வெளியிடலாம்’ என்றே சொல்லிவந்தார். இந்தப் புகைப்படங்களையெல்லாம் உலகுக்குக் காட்டி, பெயரும் புகழும் சம்பாதிக்கவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததே இல்லை. இப்படியொரு மனிதரைப் பார்ப்பது அபூர்வம்''.
 

இவ்வாறு நக்கீரன் ஆசிரியர் பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சினிமாவை நினைத்து பயந்துவிட்டேன்” - மகேந்திரன்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
mahendran movie press meet

முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. இதில் சுந்தர், தசரதி, அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வினில் மகேந்திரன் பேசியதாவது, “நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள் அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்துவிட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கணும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியதாவது, “இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான் இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது. இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். ஜி.எம். சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார். கமல் சார் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர். ஷூட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார்” என்றார்.

Next Story

“எல்லாமே வித்தியாசமாக இருக்கு” - நக்கீரன் ஆசிரியர் பாராட்டு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024

 

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலகப் புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களைப் பார்த்து ரசித்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முழுமை பெற்றது குறிப்பிடத்தக்கது. பார்த்திபன் வர்ணம் தீட்டி குத்துவிளக்கை ஏற்றினார். உணவகத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவரும், இச்சாஸ் நிறுவனருமான கணேஷ் ராம், பாரம்பரியம் மிக்க இந்திய  உணவு வகைகளைக் கொண்டு வயிற்றுப் பசியை மட்டுமின்றி மன நிறைவை தரும் அனுபவத்தை வழங்க விரும்புவதாக தெரிவித்தார். 

இச்சாஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய நக்கீரன் ஆசிரியர், “இந்த கடை ஓபனிங்கே சிறப்பா இருக்கு. இந்த கடை மேலும் சிறக்க வாழ்த்துகள். நிறுவனர் கணேஷ் மேலும் பல கிளைகளை இதே போன்று திறக்க வாழ்த்துகிறேன். துவக்கத்திலேயே விளக்கில் பெயிண்ட் அடித்தது, கடையின் வடிவமைப்பு என எல்லாமே வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இங்கு வைக்கப்பட்டு இருக்கும் ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முடித்திருக்கிறார் ஓவியர் ஸ்ரீதர். ஒரு விடுதிக்கு வந்தோம், சாப்பிட்டோம் என்றில்லாமல், சிறப்பான அனுபவத்தை இச்சாஸ் கொடுக்கிறது.

பெரிய கோப்பையில் காஃபி கொடுத்து, அதை குடிக்க உலகின் சிறிய கோப்பையை வழங்கியது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இது போன்று பல வித்தியாசங்களை ஒருங்கே வைத்திருக்கும் இச்சாஸ் அதிக கிளைகளுடன் நீண்ட காலத்திற்கும், இதை சார்ந்து இருப்பவர்களுக்கும் நன்மையை கொடுக்க வேண்டும் என நக்கீரனின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.