ADVERTISEMENT

"இந்த படத்திற்கு முதலில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சித்தேன்" -  தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்

10:20 AM Jan 19, 2021 | santhosh

ADVERTISEMENT

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், எஸ்.சதீஷ்குமார், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்கள். அப்போது விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியபோது....

ADVERTISEMENT

“கபடதாரி படத்தை நாங்கள் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால், கொரோனா பிரச்சினையால் அது நடக்கவில்லை. படப்பிடிப்பு முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் எந்த பணிகளும் நடக்கவில்லை. ஆனால், அந்த ஆறு மாதங்களில் திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் பிரதீப் பட்டை தீட்டியதால் தான் படம் மிக நேர்த்தியாக வந்துள்ளது. படம் விறுவிறுப்பாக நகரும். ரசிகர்கள் அனைவரும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு படம் வேகமாக இருக்கும். பட தொடங்கிய உடன், இடைவேளை வந்தது போல இருக்கும், பிறகு க்ளைமாக்ஸ் வந்துவிடும். அந்த அளவுக்கு படம் கச்சிதமாக வந்துள்ளது. இந்த படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்க தான் நான் முயற்சித்தேன். ஆனால், சிபிராஜ் தான் என்னிடம் நானே நடிக்கிறேன் என்று கூறினார். பிறகு யோசித்தேன், நாம் வேறு ஒரு ஹீரோவுடன் அலைவதைவிட, நம் படத்தில் நடிக்கும் சிபிராஜையே நடிக்க வைக்கலாம் என்று. சிபிராஜ் இந்த படத்திற்கு கச்சிதமாக இருக்கிறார். அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. நந்திதா ஸ்வேதா ரெகுலர் நாயகிகள் போல், டூயட் பாடல் கேட்காமல், கதாப்பாத்திரத்தை புரிந்துக் கொண்டு நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் பெரிதும் பாராட்டப்படுவார். இந்த படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானதும் அவருக்கு தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. தற்போது ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழிலும் அவர் முன்னணி இசையமைப்பாளராக வருவார். அந்த அளவுக்கு படத்தின் பின்னணி இசை அமைந்துள்ளது. எனக்கு பல நேரங்களில் உதவி செய்தவர் சிவா சார். நான் சினிமா இண்டஸ்ரிக்கு வந்ததில் இருந்து அவர் நிறைய உதவி செய்துள்ளார். அவருக்கு நன்றி. ஜெயப்பிரகாஷ், நாசர் என அனைவரின் வேடமும் சிறப்பாக வந்துள்ளது. விஜய் ஆண்டனியுடன் தொடர்ந்து பயணிக்கிறேன். இனியும் தொடர்ந்து அவருடன் பல படங்கள் பணியாற்ற இருக்கிறோம். விழாவுக்கு வந்ததற்கு அவருக்கு நன்றி. ‘கபடதாரி’ எங்களுக்கு மட்டும் அல்ல சிபிக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT