ADVERTISEMENT

“மன்னிப்பு கேட்க வந்து மீண்டும் தொட முயற்சி... அது ஒரு மோசமான அனுபவம்” - அபர்ணா பாலமுரளி  

03:04 PM Jan 24, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

மலையாளப் படங்களில் நடித்து வந்த அபர்ணா பாலமுரளி, '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானாலும் சூர்யாவின் 'சூரரைப்போற்று' படம் மூலம்தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்று தமிழ் மற்றும் மலையாளத்தில் கவனிக்கப்படும் கதாநாயகியாக வலம் வருகிறார். இப்போது இவர் மலையாளத்தில் புதிதாக நடித்துள்ள படம் 'தங்கம்'. இப்படம் வருகிற 26 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழுவினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்வில், அபர்ணா பாலமுரளியிடம் அநாகரீகமான முறையில் ஒரு மாணவர் நடந்து கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மேடையில் வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட படக்குழுவினர் அமர்ந்திருந்த நிலையில், அபர்ணாவை வரவேற்க ஒரு மாணவர் மேடைக்கு ஏறுகிறார். அபர்ணா கையில் பூ கொடுத்து வரவேற்ற அந்த மாணவன், உடனே அபர்ணாவுக்கு கை கொடுத்து பின்னர் புகைப்படத்துக்கு எழுந்திருக்கச் சொல்லி அபர்ணாவின் தோளில் கை போட முயல்கிறார். அதை விரும்பாத அபர்ணா பாலமுரளி அவரிடம் இருந்து நழுவி மீண்டும் தன் இருக்கையில் சென்று அமர்ந்தார்.

இந்த வீடியோ தொடர்பாக பலரும், ‘பொதுவெளியில் ஒருவரின் அனுமதியின்றி அவரது தோள்மீது கைபோட்டு புகைப்படம் எடுத்துக்கொள்ள முயல்வதா...’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அந்த மாணவன் பின்னர் மேடையில் வந்து, ஒரு ரசிகனாக மட்டுமே புகைப்படம் எடுக்க வந்தேன். மற்றபடி தவறாக எதுவும் நடந்து கொள்ளவில்லை என அந்த நிகழ்ச்சியிலேயே விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் கொச்சியில் நடைபெற்ற 'தங்கம்' சினிமா புரோமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அபர்ணா பாலமுரளி, "எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் திடீரென அந்த மாணவன் தோளில் கைபோட்டபோது நான் சவுகரியமாக இல்லை. அவர் எனக்கு முன் பின் தெரியாத ஆளாக இருந்தார். எனவே நான் விலகிச் சென்றேன். சாரி சொல்வதற்காக மீண்டும் மேடைக்கு வந்த அந்த மாணவர், மீண்டும் என்னிடம் வந்து கைகுலுக்க முயற்சி செய்தார். அதற்கு நான் ஒத்துழைப்பு தரவில்லை. அந்த சமயத்தில் எனக்கு பயமாக இருந்தது. எனக்கு அது ஒரு மோசமான அனுபவமாக இருந்தது.

ஒரு சட்டக்கல்லூரி மாணவர் அவ்வாறு நடந்துகொண்டிருக்கக்கூடாது என எனக்குத் தோன்றியது. நடந்ததற்கு அங்கிருந்த எல்லா மாணவர்களும் மன்னிப்பு கேட்டார்கள். அதனால்தான் நான் அங்கிருந்து வரும்போது புகார் எதுவும் கூறவில்லை. கல்லூரி அதிகாரிகள் தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளனர். அது எனக்கு அந்த கல்லூரி மீதான மரியாதையை அதிகரிக்கச் செய்துள்ளது. கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கையில் எனக்கு மகிழ்ச்சிதான்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT