ADVERTISEMENT

7 ஆண்டுகள் படுத்த படுக்கை... 62 வயதில் நடனத்திற்கான தேசிய விருது... சிவசங்கர் மாஸ்டரின் அறியாத பக்கம்!

03:05 PM Nov 29, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடன இயக்குநராகவும் நடிகராகவும் அறியப்பட்ட சிவசங்கர் மாஸ்டர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (28.11.2021) காலமானார். அவரது மறைவிற்கு தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். யார் இந்த சிவசங்கர் மாஸ்டர்? இவர் திரைத்துறைக்குள் வந்தது எப்படி?

மொத்த பழ வியாபாரம் செய்துவந்த கல்யாணம் சுந்தரம் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் சிவசங்கர் மாஸ்டர். அவருக்கு ஒன்றரை வயதாக இருக்கும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் முதுகு தண்டு உடைய, அதற்கான சிகிச்சை அடுத்த 7 ஆண்டுகள் தொடர்ந்தது. அந்த 7 ஆண்டுகளும் படுத்த படுக்கையாக இருந்த சிவசங்கர் மாஸ்டர், தன்னுடைய எட்டாவது வயதிற்கு பிறகே எழுந்து நடந்துள்ளார். சிவசங்கர் மாஸ்டரின் அப்பா கர்நாடக சங்கீதம் மீது ஆர்வம் கொண்டவர் என்பதால் வீட்டில் கர்நாடக சங்கீதம் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அதன் மூலம், சிவசங்கர் மாஸ்டருக்கும் கர்நாடக சங்கீதம் மீது ஆர்வம் ஏற்பட, அடுத்த பத்து ஆண்டுகள் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்கிறார். பின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்த சிவசங்கர் மாஸ்டருக்கு, அங்கு நடனமாடுபவர்களைப் பார்த்து நடனத்தின் மீதும் ஆர்வம் ஏற்படுகிறது. நடனம் கற்க விரும்புவதாக வீட்டில் சொன்னபோது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடனம், சினிமா மோகத்தில் மகன் உறுதியாக இருப்பதைக் கண்டு சிவசங்கர் மாஸ்டரின் தந்தை, மகனுக்கு ஜாதகம் பார்க்கலாம் என நினைக்கிறார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு வழக்கமாக ஜாதகம் பார்த்துக் கூறும் ஜோதிடர் பி.டி. சுந்தரம் இவர்கள் குடும்பத்திற்கு மிக நெருக்கம் என்பதால் அவரை அழைத்து சிவசங்கர் மாஸ்டரின் ஜாதகத்தை அவர் தந்தை கொடுத்துள்ளார். அதைப் பார்த்துவிட்டு, “சினிமாதான் இவனுக்கு எதிர்காலம்... வேற எதுலயும் சேர்த்துவிட்டு அவன் வாழ்க்கையைப் பாழாக்கிறாதீங்க” என பி.டி. சுந்தரம் கூறியுள்ளார். அதன் பிறகே, சினிமாவிற்கு செல்ல அவருடைய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

நடன இயக்குநராக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கிய சிவசங்கர் மாஸ்டர், ‘மண் வாசனை’, ‘பூவே உனக்காக’, ‘சூரியவம்சம்’, ‘வெற்றிகொடிகட்டு’, ‘வரலாறு’, ‘மஹதீரா’, ‘பாகுபலி’ உட்பட பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இதில், கடந்த 2009ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘மஹதீரா’ படத்தில் இடம்பெற்ற ‘தீரா தீரா..’ பாடலுக்குச் சிறப்பாக நடனம் அமைத்ததற்காக தேசிய விருதும் வென்றார். மேலும், தமிழ்நாடு அரசின் மாநில விருதை ‘பூவே உனக்காக’, ‘விஸ்வ துளசி’, ‘வரலாறு’, ‘உளியின் ஓசை’ ஆகிய படங்களுக்காக வென்றுள்ளார். சிம்பு நடிப்பில் உருவான ‘அலை’ படத்தில் நடன இயக்குநராக சிறு வேடத்தில் நடித்திருந்த சிவசங்கர் மாஸ்டர், அதன் பிறகு நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘பரதேசி’, ‘அரண்மனை’ உட்பட பல படங்களில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல தமிழ் மற்றும் தெலுங்கில் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்தச் சூழலில், தன்னுடைய மனைவி மற்றும் இரு மகன்களுடன் ஹைதராபாத்தில் வசித்துவந்த சிவசங்கர் மாஸ்டருக்கு, சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் ஒரு மகனுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. சிவசங்கர் மாஸ்டரின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது சிகிச்சைக்கு நிதியுதவி தேவைப்படுவதாகவும் தகவல்கள் வெளியானதையடுத்து, தனுஷ், சோனு சூட் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது சிகிச்சைக்கு உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT