
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார்கள். இதுதொடர்பான வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் சுசி ஹரி பள்ளி இ-மெயில் முகவரி மூலம் சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா ஆபாசமாக சாட் செய்ததற்காக ஆதாரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட யாஹூ மெயில் ஐடியில் அவர் ஆபாசமாகப் பேசிவந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்த இ-மெயில் ஐடியை சைபர் ஆய்வகம் மூலம் ஆய்வுசெய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக ஆபாசமாகப் பேச பயன்படுத்திய யாஹூ மெயில் ஐடியைப் போலீசார் முடக்கியுள்ளனர்.
இந்நிலையில், சிவசங்கர் பாபா பள்ளியில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகி, ஆசிரியை, பக்தைகள் முன்ஜாமீன் கோரிய வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவசங்கர் பாபாவால் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களின் வாக்குமூலத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.