ADVERTISEMENT

"அந்த மூன்று பெண்களை பார்த்தாலே எரிச்சலாகும்" - இயக்குநர் சேரன் பேச்சு!

03:40 PM Dec 07, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சேரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (06.12.2021) நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் சேரன் பேசுகையில், "முதலில் படத்தின் இசையமைப்பாளர் சித்துவிற்கும் கவிஞர் சினேகனுக்கும் பாராட்டுகள். ‘பாண்டவர் பூமி’ படத்திற்கு டம்மி வரிகள் எழுதுவதற்காக வந்தவர்தான் சினேகன். ஆனால், அவருக்குள் வாழ்க்கையின் அத்தனை அர்த்தமும் இருந்தது. படத்தின் தயாரிப்பாளர் ரங்கநாதன் அவ்வளவு உழைப்பை இந்தப் படத்தில் போட்டுள்ளார். எதையும் சரியாகத் திட்டமிட்டு செய்யும் பண்பு அவரிடம் உள்ளது. அதனால் எடுக்கும் அத்தனை படங்களிலும் அவர் ஜெயிப்பார். இயக்குநர் நந்தா பெரியசாமி என்ற மனிதருக்காகத்தான் நான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இவ்வளவு கனவுகள் கொண்ட ஒரு மனிதர் தன்னுடைய வாழ்க்கையில் எங்காவது ஜெயித்துவிட வேண்டும் என்று நீண்டநாட்களாக நான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவரிடம் எவ்வளவு கதைகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். இனி ஒவ்வொரு கதையாக, அந்தக் கதைகள் அனைத்தும் ஜெயிக்கும். இந்தப் படத்தில் அண்ணன் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டியாக நடித்துள்ள அந்த மூன்று பெண்களைக் கேரவேனிலிருந்து இறங்குவதற்கு முன்புவரை பிடிக்கும். கீழே இறங்கி ஸ்பாட்டிற்கு வந்துவிட்டால், அவர்களைப் பார்த்தாலே எரிச்சலாகும். அந்த அளவிற்கு கதாபாத்திரத்தை உள்வாங்கி அவர்கள் நடித்துள்ளனர். கௌதம் கார்த்திக் பார்ப்பதற்குத்தான் உயரமாக, ஹீரோ மாதிரி இருக்கிறார். ஆனால், பழகினால் ரொம்பவும் மென்மையான அன்பான மனிதராக இருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்குக் கிடைக்கும் பாராட்டு அவரை எங்கேயோ கொண்டுபோகும்" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT