ADVERTISEMENT

தன் பெயரில் போலி கணக்கு! போலீசில் புகார் அளித்த நடிகர் சார்லி!

01:28 PM Jun 12, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா பரவல் காரணாமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் மற்ற துறைகளைப் போல் சினிமா துறையும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் அவர்கள் பெரும்பாலான பொழுதை சமூக வலைதளங்களிலேயே கழித்துவருகின்றனர். மேலும், சமூகவலைதளத்தில் இதுவரை கணக்கு தொடங்காத பல்வேறு திரைப் பிரபலங்களும் தற்போது கணக்கு தொடங்கிவரும் நிலையில், நேற்று (11.06.2021) மூத்த காமெடி நடிகர் சார்லியின் பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு, அதில் "இந்த ட்விட்டர் உலகில் உங்கள் அனைவருடனும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்ற பதிவு வெளியாகியிருந்தது.

இதைக் கண்ட பலரும் சார்லியின் ட்விட்டர் கணக்கைப் பின்தொடர ஆரம்பித்தனர். இந்நிலையில் தன் பெயரில் ஆரம்பித்துள்ள ட்விட்டர் கணக்கு போலியானது என்று நடிகர் சார்லி தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகார் மனுவில்...."கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றிவரும் நான், எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய பெயரில் என்னுடைய அனுமதியின்றி ஜூன் 11 அன்று (https://twitter.com/ActorCharle) என போலியாக கணக்கு துவங்கி இருக்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிகப் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசின் காவல்துறைக்கு என் நன்றியும் வணக்கமும்" என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT