ADVERTISEMENT

"ஆன்மீகம் பக்கம் போனேன்; மீண்டும் சினிமாவுக்கு வந்துட்டேன்" - கம்பேக் கொடுத்த பாய்ஸ் மணிகண்டன்

01:13 PM Mar 01, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் கவனம் ஈர்த்த மணிகண்டன், அதன் பின் அதிகமான படங்களில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது பிரபுதேவாவின் 'பகீரா' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவிருக்கும் மணிகண்டனை சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்...

'பகீரா' பட அனுபவம் எப்படி இருந்தது?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் நடிக்கும் படம் இது. எப்படி என்னுடைய நம்பரைக் கண்டுபிடித்தார்கள் என்பதே தெரியவில்லை. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு அனைத்திலிருந்தும் விலகியே இருந்தேன். இப்போது பகீராவில் தொடங்கி சில படங்கள் செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தில் பிரபுதேவாவுடன் நடிக்க முடியாத கேரக்டர் எனக்கு. ஆனால், படத்தில் நல்ல கேரக்டர்.

நேர்காணல்களில் நீங்கள் மிக வெளிப்படையாகப் பேசுவது எப்படிப்பட்ட எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது?

என்னுடைய பேட்டிகளுக்காகப் பலர் என்னைப் பாராட்டுகிறார்கள். நான் இயல்பாக இருக்கிறேன். நேர்மறை, எதிர்மறை என்று இருவகையான விமர்சனங்களும் வருகின்றன. அதுபற்றி நான் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.

விஜய் சேதுபதி கூட நீங்கள் நேர்காணலில் பேசுவது குறித்துப் பாராட்டியிருந்தார். அவரை சந்தித்திருக்கிறீர்களா?

விரைவில் அவரை சந்திக்கவிருக்கிறேன். 'பாய்ஸ்' பட வாய்ப்பு அவருக்குக் கைநழுவியது. 'சூது கவ்வும்' படத்தில் பாபி சிம்ஹா நடித்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கடைசி நேரத்தில் கைநழுவியது. விரைவில் விஜய் சேதுபதி படத்தில் என்னை எதிர்பார்க்கலாம்.

நீங்கள் தவறவிட்ட படங்கள் என்னென்ன?

தென்மேற்கு பருவக்காற்று, சூது கவ்வும், காதல், நாடோடிகள் உள்ளிட்ட பல படங்கள்.

நீங்கள் எப்போதும் இயல்பாக இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் திரைப்படங்களில் செய்யும் கேரக்டர்களை உங்கள் நிஜ வாழ்வோடு மக்கள் பொருத்திப் பார்க்கிறார்களா?

சினிமா என்பது வேறு. சினிமாவில் போதைப்பழக்கம் உள்ளவர் போல் நடித்தால் நிஜத்திலும் அவர் அப்படி என்று அர்த்தமில்லை. சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

பார்த்திபன் சாரிடம் இருந்து வெளியேறி நான் தனியாக ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இருந்தேன். அந்த நேரத்தில் ஓஷோ குறித்த ஒரு புத்தகத்தை என் நண்பர்கள் எனக்குக் கொடுத்தனர். ஆசையும் எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வது பற்றி அந்தப் புத்தகம் பேசியிருந்தது. அது என் வாழ்க்கையையே மாற்றியது.

'பாய்ஸ்' படத்தில் உங்களுடைய டான்ஸ் அற்புதமாக இருந்தது. இப்போது நடனப் புயல் பிரபுதேவாவுடன் நடிக்கும் வாய்ப்பு. என்ன சொன்னார் பிரபுதேவா?

சிறுவயதிலிருந்து பிரபுதேவா எனக்கு ரோல்மாடல். இசை வெளியீட்டு விழாவில் "சார் நானும் இந்தப் படத்தில் நடிக்கிறேன்" என்று அவரிடம் சொன்னேன். அவருக்கு அப்போதுதான் இந்தப் படத்தில் நான் நடிக்கும் விஷயம் தெரிந்தது.

நீங்கள் பேசும் விஷயங்கள் சினிமாவுக்கு வரவேண்டும் என்று விரும்பும் இளைஞர்களின் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தாதா?

குழந்தைகள் சுதந்திரமானவர்கள். அனைத்து துறைகளிலும் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன. எங்கும் எதுவும் நிரந்தரமல்ல.

'பாய்ஸ்' படத்தில் நடித்த தமன் தற்போது விஜய்யின் 'வாரிசு' படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பாய்ஸ் பட டீமோடு தொடர்பில் இருக்கிறீர்களா?

இல்லை. முதலில் அனைவரும் நெருக்கமாக இருந்தோம். பின்பு அவரவர் வேறு வேறு பாதைகளில் சென்றுவிட்டோம்.

உங்களுடைய அடுத்தடுத்த படங்கள் என்ன?

ஆதிக் ரவிச்சந்திரனின் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடிக்கிறேன். சசிகுமார் சார் படத்தில் நடிக்கிறேன். அடுத்தடுத்து படங்களில் நடிப்பேன். தியாகராஜன் குமாரராஜா, சாந்தகுமார், லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பமும் இருக்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT