Skip to main content

கமல் இன்னொரு ரஜினி... த.லெனின் கடும் தாக்கு...

 

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்த முதல் தென்னிந்திய திரைப்படக் கலைஞர் கமல்ஹாசன். இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக நாடு முழுக்க எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்த வந்த நிலையில் திமுக உட்பட அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு கொண்டு வந்த இந்த மசோதாவை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. 
 

மாணவர்கள் தன்னெழுச்சியாக ஒவ்வொரு பகுதியிலும் போராட்டத்தை வீரியமாக கொண்டு சென்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் மத்திய அரசுக்கு காட்ட வேண்டும் என்பதோடு, இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான திமுக அதன் கூட்டணி கட்சிகளோடு நாளை சென்னையில் பிரமாண்ட பேரணியை நடத்த உள்ளது. 

 


 

இந்த பேரணி அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபோதே, திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளும் என தாமாகவே முதலில் தெரிவித்தவர் நடிகர் கமல். இதனைத் தொடர்ந்து திரைப்படத்துறையினர் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு பேரணியில் கலந்து கொள்ள திமுக அழைப்பு விடுத்தது. 
 

இந்த நிலையில் நடிகர் கமலை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேரில் சென்று பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். முறைப்படி அழைப்பு நிகழ்ந்த நேரத்தில் திடீரென கமல், திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என அதிரடி அறிவிப்பை கொடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் வினோதமாக அமைந்தது. 

 


 

நடிகர் கமலின் இந்த திடீர் முடிவு ஏன்? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் த.லெனின் நம்மிடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, நடிகர் கமல் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்ததோடு இந்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி போராடிய பல்கலைக்கழக மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கொடுத்தார். அவராகவே திமுக நடத்தும் பேரணியில் கலந்து கொள்வோம் என்றார். இப்போது திடீரென அவர் பல்டி அடித்திருப்பது, யாருடைய மிரட்டலுக்காக என்று தெரியவில்லை. 
 

அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகள் தனித்தனியாக அவர்களின் கொள்கை கோட்பாடுகளை வைத்து அரசியல் நடத்தும். ஆனால் பொதுப்பிரச்சனைக்காக அனைவரும் இணைந்து போராடுவது, குரல் கொடுப்பது என்பது வழக்கமான ஒன்று. குடியுரிமை திருத்த சட்ட மசோதா திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கோரிக்கை. கமல் திமுக நடத்தும் பேரணியில் கலந்து கொண்டால் திமுகவோடு கூட்டணிக்கு வருகிறார் என்பது அர்த்தமற்ற ஒன்று. 

 

lenin-cpi

 

 

கேரளாவில் எதிரெதிர் துருவமாக அரசியலில் இயங்கும் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் இந்த பிரச்சனையில் ஒருங்கிணைந்து போராடியது. நாளை தேர்தல் வந்தால் இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்தான் அங்கு போட்டி. ஆனாலும் தேசத்தின் ஒற்றுமையும், பொது பிரச்சனையிலும் இணைந்து போராடுவது அரசியலில் நாகரீகமான ஒன்று. அதேபோல்தான் கம்யூனிஸ்ட்களின் எதிரியாக பார்க்கப்படும் மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி நடத்திய பேரணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட அனைவரும் கலந்து கொண்டோம்.
 

காரணம், இந்த சட்ட மசோதா இந்திய மக்களுக்கு பேராபத்தை, பிரிவிணையை கொடுக்கும் என்பதால் ஒன்றிணைந்து எதிர்த்தோம். இது மட்டுமல்ல, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறையை காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. அதை  செயல்படுத்தமாட்டோம் என மம்தா பானர்ஜி அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று கேரளாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்தது. இவையெல்லாம் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள். இதில் எங்கேயும் கூட்டணியும் இல்லை. தொகுதி பங்கீடு பேரமும் இல்லை. நடிகர் கமல் மக்களோடு பணியாற்றி, மக்களுக்காக போராடி அரசியல் இயக்கத்தில் வளர்ந்திருந்தால் இவையெல்லாம் தெரியும். ஆனால் அவர் திடீர் அரசியல்வாதியானவர்தான். 

 

rajinikanth kamal haasanஅவர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். ரஜினியின் நடவடிக்கையைப்போல் இவரது செயல்பாடு உள்ளது. கமல் இன்னொரு ரஜினியாகவே தெரிகிறார். அரசியல்வாதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் மக்களையும் அவர்களுக்கு தேவையான பிரச்சனைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நடிகர் கமல், இப்போது மாற்றி மாற்றி பேசுவது அவர் கட்சியினரையே ஏமாற்ற வைத்துள்ளது என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...