ADVERTISEMENT

ஒரே சட்டையை போட்டுகொண்டு வீடியோ போடுவது ஏன்..? - சுவாரசியம் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன்..!

01:32 PM Dec 09, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ப்ளுசட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆன்டி இண்டியன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ப்ளுசட்டை மாறனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் ஆன்டி இண்டியன் திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

"நான் எப்போதுமே சினிமாவின் தீவிர ரசிகன். சினிமா பார்த்துவிட்டு டீக்கடையிலும் பஸ் ஸ்டாண்டிலும் கருத்து சொல்லிக்கொண்டு இருந்தேன். பின், வீடியோ முன்னால் நின்று சொல்ல ஆரம்பித்தேன். அதுவே தொழிலாக மாறிவிட்டதால் என்னை ரிவியூவர் என்று அழைக்க ஆரம்பித்தனர். நீ ஒரு படம் எடுத்துக்காட்டுடா என்று பலரும் எனக்கு சவால் விட்டனர். அவர்கள் உசுப்பேற்றினார்கள் என்பதற்காக இந்தப் படத்தை நான் எடுக்கவில்லை. 25 வருஷத்திற்கு முந்தைய ஓர் உண்மை சம்பத்தைத்தான் படமாக எடுத்துள்ளேன். அந்த உண்மை சம்பவத்தின் கதையை கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சி படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் ஏற்படும் என நம்புகிறேன்.

எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாய் என்று சொல்வார்களே, அது மாதிரி இந்தப் படம் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். படம் பார்க்கும் போது கதையோடு உங்களை எளிதாக பொருத்திக்கொள்ள முடியும். காட்சிகளை படமாக்கிய விதமும் புதுமையாக இருக்கும். இன்றைக்கு ஹாலிவுட் சினிமாவே 30 நாட்களில் படமாக்கப்பட்டுவிடுகிறது. அந்த அளவிற்கு சரியான திட்டமிடல் அவர்களிடம் இருக்கும். 30 நாட்களைத் தாண்டி படம் சென்றால் படம் நிச்சயம் தோல்வி என்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிடுவார்கள். நம் ஊரில் நூறு நாட்களுக்கு குறைவாக படம் எடுத்தால் அதை சிறிய படம் என்கிறார்கள். நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தினால்தான் அவர் பெரிய டைரக்டர் என்ற எண்ணம் இங்குள்ளது.

இது சின்ன பட்ஜெட் படம் என்பதால் விளம்பரத்திற்காக பல லட்சம் செலவழிக்க முடியாது. அதனால் ஒவ்வொரு விளம்பரமும் பார்த்து பார்த்து செய்தோம். இவன் சீக்கிரம் சாகமாட்டானா என்று என்னை நிறைய பேர் நினைக்கிறார்கள். அவங்களுக்கும் மகிழ்ச்சி கொடுக்கும்படி இருக்கட்டும் என்றுதான் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் என்னுடைய படத்தை போட்டோம். நாங்கள் செய்த அனைத்து விளம்பரத்திற்குமே நல்ல ரீச் கிடைத்துள்ளது. என்னுடைய முதல் வெற்றியே என்னை நம்பி பணம் போட்டவரை காப்பாற்றுவதுதான். இரண்டாவது வெற்றி என்னை நம்பி படம் பார்க்க வந்தவர்களை திருப்திப்படுத்துவது. தரமான படம் எடுத்திருக்கிறோம். அதற்கு நல்ல ரீவியூ வரும் என்று நம்புகிறோம். தற்போதுவரை படம் பார்த்தவர்களிடமிருந்து நல்ல விமர்சனம் கிடைத்ததில் ரொம்ப சந்தோசம்.

சினிமா என்பது என்டர்டெய்ன்ட்மென்ட் மீடியா அல்ல. நாம் அப்படி மாற்றிவிட்டோம். தமிழ் சினிமாவின் முதல் புரட்சி படமே பராசக்திதான். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் அது. இன்பர்மேஷன், எஜுகேஷன், என்டர்டெய்ன்ட்மென்ட் என மூன்றும் நிறைந்ததாக சினிமா இருக்க வேண்டும். நான் பணத்தையும் என்னுடைய விலை மதிப்பில்லாத நேரத்தையும் கொடுத்து படம் பார்க்கிறேன் எனும்போது அந்தப் படம் எனக்கு ரசிக்கும்படியாக இருக்கவேண்டும். என்னை பைத்தியக்காரனாக நினைத்து நீங்கள் படம் எடுத்தால் நானும் பைத்தியக்காரன்போலத்தான் விமர்சனம் செய்வேன்.

ரிலீஸிற்கு முன்பாகவே இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்துவிட்டதாகவே நினைக்கிறேன். இருந்தாலும் ரசிகர்கள்தான் மிகப்பெரிய நீதிபதிகள். அவர்கள் மிகப்பெரிய அறிவாளிகள். அந்த அறிவாளிகள் முன்பு என்னுடைய அறிவுத்திறனை காட்டி நான் நிரூபிக்க வேண்டும். அந்தப் பரிட்சையில் நான் பாஸ் ஆகிவிடுவேன் என்று நம்புகிறேன்.

ப்ளூ சட்டை மாறன் என்ற அடைமொழி நான் வைத்துக்கொண்டது இல்லை. ஒருகட்டத்தில் ஒரு சோதனை முயற்சியாக செய்ய ஆரம்பித்த ரீவியூவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. வெளியே எங்காவது பார்த்தால் என்னுடன் வந்து புகைப்படமெல்லாம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். மக்கள் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள் எனும்போது அதை தொடர்ச்சியாக பண்ணலாம் என்று நினைத்து வாரந்தோறும் வீடியோ போட ஆரம்பித்தேன். அதற்கு வாரந்தோறும் ஒரு புது சட்டை தேவைப்பட்டது. புதுப்புது சட்டைகள் எடுப்பதற்கு அப்போது என்னிடம் வசதியுமில்லை. அதனால் அனைத்து வீடியோக்களிலும் ஒரே சட்டையில் தோன்றலாம் என முடிவெடுத்தேன். என்னுடைய பெயரைக்கூட நான் சேனலில் எங்கும் போட்டதில்லை. ரசிகர்கள் அதை எப்படியோ கண்டுபிடித்து ப்ளூ சட்டை மாறன் என்று என்னை அழைக்க ஆரம்பித்துவிட்டனர். ஆகையால் அது மக்கள் கொடுத்த பெயர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி வெளியாகும் படங்களில் உண்மை கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். இவ்வளவு உண்மைகளைச் சொல்வதற்கே சர்ச்சைகள் வருகின்றன. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இன்னும் அதிகமாக உண்மையைச் சொல்ல வேண்டும். ஒரு படைப்பாளியின் பக்கம்தான் சட்டம் நிற்கிறது. எனவே தைரியமாக படங்களை எடுக்கலாம். சென்சார் பிரச்சனை, லெட்டர் பேடு கட்சிகள் எதிர்ப்பு என சில பிரச்சனைகள் வரலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி வந்துவிடலாம். சென்சார் வேண்டாம் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், அதில் சில விஷயங்களை சரி செய்யவேண்டியுள்ளது. இவர்கள் மறுத்த அதே படத்திற்குத்தான் இன்று சென்சார் சர்டிபிகேட் கொடுத்துள்ளார்கள். மறுத்ததும் இவர்கள்தான்; கொடுத்ததும் இவர்கள்தான். கொடுப்பதற்கான அதிகாரம் இருக்கிறது எனில் அதை முதலிலேயே செய்திருக்கலாமே. என்னுடைய தயாரிப்பாளர் இந்தப் பிரச்சனையில் கடைசிவரை உடனிருந்து இந்தப் படத்தை மீட்டுக்கொடுத்தார். இல்லாவிட்டால், ஆபரேஷன் சக்ஸஸ்... பேஷண்ட் டெட் என்ற நிலைதான் ஆன்டி இண்டியன் படத்திற்கு வந்திருக்கும்".


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT