ADVERTISEMENT

“மக்கள் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு உண்டு...” மு.க.ஸ்டாலினுக்கு பாரதிராஜா புகழாரம்!

12:12 PM May 03, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இதில் திமுக கூட்டணி, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைவிட அதிக இடங்களைக் கைப்பற்றியதையடுத்து, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனையடுத்து, முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

அந்த வகையில், இயக்குநரும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான பாரதிராஜா, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றிகள் பகிரும் வேளையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசுக்கும், முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை மாநகர மேயராகப் பணியாற்றியபோது மிகச் சிறந்த நிர்வாகியைக் கண்டிருக்கிறோம். அதேபோல் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் நிர்வாகத்தைத் தங்களின் தலைமையில் அமைய உள்ள அரசிடமிருந்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

தந்தையின் வழியில் தமிழின் மேன்மைகளைப் பாதுகாத்து, தமிழக உரிமைகளை மீட்டெடுத்து, தமிழையும் தமிழர்களையும் காக்க வேண்டிய பொறுப்பை முதன்மையானதாக எடுத்துக்கொள்ளத் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். திரைத்துறை சார்ந்த நலன்களை இன்னும் சிறப்பாக்குவீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த பெரிய மாற்றத்தைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

கரோனா காலகட்டம். மிகவும் சவாலான நாட்கள் தங்கள் முன் நிற்கிறது. பொருளாதாரப் பிரச்சனைகளை சரிசெய்து மக்களைப் பாதுகாக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்களை எதிர்நோக்கி நிற்கிறோம்.

உங்கள் வெற்றி பல நல்லவற்றை தமிழகத்திற்குக் கொண்டுவரட்டும். மக்களின் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு அதிகம் உண்டு என்பதால் நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் எனது வாழ்த்துகளைத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT