ADVERTISEMENT

“இந்த சூழ்ச்சியை நான் எதிர்பார்க்கவே இல்லை” - இயக்குநர் பாக்யராஜ் பேச்சு

01:26 PM Sep 17, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த 11ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பல புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பதவியேற்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

அந்த நிகழ்வில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “என்னுடைய அணியாக இருந்தாலும் சரி, எதிரணியாக இருந்தாலும் சரி, இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். நாம் அனைவரும் இப்போது ஒரே அணியாகியுள்ளோம். இதுவும் கடந்து போகும் என்பதை கஷ்டம் வரும்போது மட்டும் நினைத்துக்கொள்ளக்கூடாது. இது மாதிரியான மாலை, மரியாதை வரும்போதும் நினைத்துக்கொள்ள வேண்டும். பட்டதெல்லாம் பாடல்ல, இனி படப்போவதுதான் பாடு என்பார்கள். அதேபோல, தேர்தல்வரை நான் பட்டதெல்லாம் பாடல்ல, இனி படப்போவதுதான் பாடு. காரணம், இதற்கு முன்பு யார் எதிரணி என்று எனக்குத் தெரியும். இனி அருகில் இருக்கும் எதிரி யார் என்பது எனக்குத் தெரியாது. அதையெல்லாம் கண்டறிந்து இந்த சங்கத்தை வழிநடத்தி செல்வதுதான் எனக்கு முன்னால் இருக்கும் சவால்.

நம்மை நம்பி வாக்களித்துள்ள எழுத்தாளர் சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். மனசாட்சிதான் நமக்குள் இருக்கும் சாமி. எனவே மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ள வேண்டும். சினிமாவில் அதிகம் பாதிக்கப்படுவது எழுத்தாளர்கள்தான். மற்ற கலைஞர்களுக்கு தொடர்ந்து வேலை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், எழுத்தாளர்களுக்கு அப்படியில்லை. ஓர் எழுத்தாளர் தன்னுடைய வாழ்நாளில் 15 நல்ல கதைகளை எழுதினாலே அது பெரிய விஷயம்.

இன்றைக்கு எல்லா படங்களும் பேன் இந்தியா படங்களாக வருகின்றன. எந்தப் படமாக இருந்தாலும் ஓடிடியில் டப் செய்து வெளியிட்டுவிடுகிறார்கள். இதனால் படத்தை ரீமேக் செய்ய முடிவதில்லை. படத்தை ரீமேக் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாட்டோடுதான் ஓடிடி உரிமையையே அவர்கள் வாங்குகிறார்கள். இதனால் ரீமேக் ரைட்ஸ் மூலம் கதாசிரியர்களுக்கு கிடைத்த ராயல்டி கிடைக்காமல் போகிறது. எனவே கதாசிரியர்களுக்கும் குறிப்பிட்ட தொகை கிடைக்கும் வகையில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். அதுதான் எதிர்காலத்தில் அவர்கள் குடும்பத்தை காப்பாற்றும்.

தேர்தல் நேரத்தில் நமக்குள் சில கருத்து வேறுபாடுகள் வந்தன. அதையெல்லாம் கழைந்துவிட்டு இனி நாம் வேலை பார்க்க வேண்டும். தற்போது வெற்றி பெற்றுள்ளவர்கள் எந்த அணியில் இருந்தாலும் வென்றிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். இப்படி ஒரு சூழ்ச்சியை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதில் நான் சிக்கியதால்தான் அனைவரும் சிதறிவிட்டோம். இருந்தாலும் பரவாயில்லை, இனி ஒற்றுமையாக இருப்போம். எழுத்தாளர்களின் உரிமை காக்கப்படும். நமக்கான கட்டிடமும் நிச்சயம் கட்டுவோம்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT