ADVERTISEMENT

அசுரன் வெற்றியில் இவருக்கும் பங்குண்டு!

11:33 AM Oct 09, 2019 | santhoshkumar

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியுள்ள படம் அசுரன். பூமணி எழுதிய ’வெக்கை’ நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது.

ADVERTISEMENT


வெற்றிமாறனின் ஒவ்வொரு படத்திலும் பாராட்டப்படும் விஷயம் அந்த கதை நடக்கும் களத்திற்கு மிக உண்மையான இடங்கள், மொழி, மனிதர்கள், உடைகள் போன்றவை இடம்பெற்றிருப்பது. அசுரன் படத்திலும் இதுவரை பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் வந்ததைப் போல அல்லாமல் உண்மையான நெல்லை மொழி பேசப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது, இந்தப் படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவரான எழுத்தாளர் சுகா.

சுகா, மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா உதவி இயக்குனர்களில் ஒருவர். இறுதி வரையில் பாலுமகேந்திராவுக்கு நெருக்கமாக இருந்து அவருக்கு உறுதுணையாக இருந்தவர். இவருக்கும் வெற்றிமாறனுக்கும் உண்டான தொடர்பு இங்கிருந்தே தொடங்கியது.

ADVERTISEMENT


இவர் எழுதிய ‘மூங்கில் மூச்சு’ பத்திரிகை தொடர் மிகவும் பிரபலமானது, எழுத்தாளராக இவருக்கு பெரிய வாசகர் வட்டத்தை உருவாக்கியது. ‘வேணுவனம்’ என்ற இவருடைய வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார். இவர் நடிகர் கமல்ஹாசனின் பாபநாசம், தூங்காவனம் போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். அதற்கு முன்பே நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் ’படித்துறை’ என்ற படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் இன்னும் வெளியாகவில்லை. அந்தப் படத்திற்கு இளையராஜாதான் இசையமைப்பாளராக இருந்தார். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்து முக்கிய பொறுப்பு வகித்தார்.

பாலுமகேந்திரா சுகாவை மகன் என்றுதான் அழைத்தார். ’வெக்கை’ நாவல் அடிப்படையில் 'அசுரன்’ படத்தை உருவாக்க முடிவெடுத்தவுடன் வெற்றிமாறன் அணுகியது சுகாவைதான். படத்தின் முழு டப்பிங்கையும் பார்த்துக்கொண்டது இவர்தானாம். மேலும் ’பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜும் வெற்றிமாறனுக்கு உதவி இருக்கிறார்.


தனது கதைகளிலும் கட்டுரைகளிலும் ‘திருநவேலி’ மண்ணின் வாசனையையும், தாமிரபரணி நதிக்கரையின் ஈரத்தையும் நம்மை உணர வைத்த சுகா, விரைவில் தன் திரைப்படம் மூலமாக நம்மை மகிழ்விப்பார் என நம்புவோம், வாழ்த்துவோம்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT