ADVERTISEMENT

"என் துணைவியாரை மீட்டெடுக்கப் போராடிய அத்தனை பேருக்கும் நன்றிகள்" - அருண்ராஜா காமராஜ் உருக்கம்!

04:29 PM May 24, 2021 | santhosh

ADVERTISEMENT

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கரோனா தொற்றால் காலமானார். இவருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிந்துஜா மரணமடைந்தார். சிந்துஜாவின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மறைந்த தன் மனைவி குறித்து உருக்கமாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

ADVERTISEMENT

"என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறிப்பட்டதைக் கண்ட நொடி முதல், நமைச் சுற்றி பரவிக்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது. எத்தனை உள்ளங்கள் உதவிகள், அன்புள்ள ஆறுதல்கள், பிரார்த்தனைகள், அலைச்சல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மீட்டு விட போராடியும் நச்சு அவள் நாசியினுள் புகுந்து சுவாசத்தை உருக்குலைத்து இயக்கத்தை முடக்கி, இன்று இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் கிடைக்கும் என்று அவளையும் என்னை விட்டுப் பிரித்துவிட்டு சென்றது. நச்சு பாசமறியாது, ஏழ்மையறியாது, அத்யாவசிய அநாவசியங்கள் அறியாது. இவையெலாம் நமக்கான வாழ்க்கைக்கான அளவீடுகளே அன்றி நச்சுகிருமியின் முன் நாம் அனைவரும் சமமே.

சக மனிதர்களோடு, மனிதத்தோடு வெறுப்பு, வன்மம், காழ்ப்பு இதை வளர்த்துக் கொள்ள மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு அதையே ஓர் வாழ்வியலாக்கி வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறோமோ என்ற சுயபரிசோதனைகளை மேற்கொண்டோமென்றால் இந்த நச்சு நம் பொது எதிரியாகி இந்த போர்க்களம் தன் தீர்வை நோக்கி நகரலாம். இங்கே அசட்டு தைரியங்களும், அர்த்தமற்ற பயங்களுமே உயிர்வேட்டை ஆடிக்கொண்டு இருக்கிறது. என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னையும் என் துணைவியாரையும் மீட்டு எடுக்கப் போராடிய அத்துனை முன்கள போர்வீரர்களும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன். நன்றிகள். எனை சுற்றி ஒருவர் கூட நச்சின் கோரத்தில் நசுக்கப்படவில்லை என்பதே இழந்த ஒவ்வோர் இழப்புகளின் ஆன்மா சாந்தியடைவதற்கான வழி. மீண்டும் பல கோடி வாழ்நாள் நன்றிகள்" என உருக்கமாக கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT