ADVERTISEMENT

மசூதிக்குள் இந்து முறைப்படி திருமணம் - இன்னொரு கேரளா ஸ்டோரியை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்

12:27 PM May 04, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளாவில் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக அண்மையில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரைலரில் காட்டப்பட்டிருந்தது. இப்படத்திற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், "மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக 'தி கேரளா ஸ்டோரி' இந்தி படத்தின் ட்ரெய்லர் அமைந்திருக்கிறது. சங்பரிவாரின் கொள்கையை பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இது" எனக் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்ட நிலையில், அந்த மனுவை ஏற்க மறுத்து கேரள உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தி உச்சநீதிமன்றம் மனுவை நிராகரித்தது. இப்படி பெரும் சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு கேரளாவில் மசூதியில் நடந்த ஒரு தம்பதியின் திருமணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அஞ்சு மற்றும் ஷரத் ஆகிய இந்த தம்பதி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆலப்புழா பகுதியில் உள்ள ஒரு மசூதியில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

மணப்பெண்ணின் தாயார் தனது மகள் திருமணத்திற்கு பொருளாதார ரீதியாக கஷ்டப்படுவதாகக் கூறி மசூதியிலுள்ள கமிட்டியில் உதவி கேட்டுள்ளார். அவரது நிலைமையை அறிந்த மசூதி கமிட்டியினர் 10 சவரன் தங்க நகைகளும் ரூ. 20 லட்சம் பணமும் தந்து உதவியுள்ளனர். மேலும், மசூதியில் அப்பெண்ணின் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கினர். பின்பு அஞ்சு மற்றும் ஷரத்தின் திருமணம் மசூதியில் நல்லபடியாக நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து 'இதுவும் ஒரு கேரளா ஸ்டோரி' என பலரும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மனித குலத்தின் மீதான காதல் என்பது அளவற்றதாகவும் குணப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்" என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT