ADVERTISEMENT

"அது போன்ற செயல்களில் ஒரு போதும் நான் ஈடுபடுவதில்லை"- அமீர் விளக்கம்

02:24 PM Jun 12, 2020 | santhoshkumar


மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனின் மறைவிற்கு இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அமீரின் இயக்கத்தில் உருவான 'ஆதிபகவன்' படத்திற்கு ஜெ. அன்பழகன்தான் தயாரிப்பாளர். சமீபத்தில் ஒரு பேட்டியில் அமீர் ஜெ.அன்பழகன் தொடர்பான நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசிய ஒரு விஷயம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதனால் அதற்கு விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் அமீர்.

ADVERTISEMENT

அதில், “அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு,

நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் மறைந்த எம்எல்ஏ அண்ணன் ஜெ. அன்பழகனை நினைவு கூறும் விதமாகப் பல்வேறு நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் போது மேலதிகமாக மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சென்னையில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டு பாண்டி பஜார் காவல் நிலையத்திலிருந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிணையில் இருந்து வெளியே வந்த போது தங்களது கட்சி அலுவலகத்தில் இருந்ததாகவும் அப்போதே அவரை தான் பார்த்ததாகவும் அவரிடம் பேசியதாகவும் அவரைப் பற்றி பெருமையாக அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்கள் என்னிடம் சொன்ன தகவல்களை ஒரு நேர்காணலில் நான் பகிர்ந்திருந்தேன். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நான் சொன்ன தகவலில் உண்மை இல்லை என்றும் அந்த வழக்கில் பிரபாகரன் அவர்களை ஜாமீனில் எடுத்தது கே.எஸ். ராதாகிருஷ்ணன் (திமுகவின் செய்தித் தொடர்பாளர்) அவர்களும் அதன் பின்னர் அவரோடு தொடர்பில் இருந்தது ஐயா பழநெடுமாறன் மற்றும் இன்ன பிற சிலர் தான் என்கிற தகவல்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அந்தச் சம்பவத்தில் கே. எஸ். ராதாகிருஷ்ணன், ஜெ. அன்பழகன் போன்றோர் உடன் இருந்ததாகவும் அன்றைய 116வட்ட பகுதி செயலாளராக இருந்த து.ச. இளமாறன் மற்றும் அவரது சகோதரர் சந்திரன் இருவரும் ஜாமீன் கையெழுத்திட்டதாகவும் திமுகவின் கோ.அய்யாவு போன்றோரும் உடன் இருந்தனர் என்கிற தகவலும் இன்னொரு புறம் வந்துகொண்டிருக்கிறது.

மேலும் அந்த வழக்கின் பிண்ணனியில் அதிமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரும் செயல்பட்டிருக்கிறார் என்கிற தகவல்களும் எனக்கு அலைபேசியின் வழியே வந்து சேர்ந்திருக்கிறது. எதுவாயினும் தேசிய தலைவர் பிரபாகர் அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் பிணையில் எடுக்கப்பட்டது குறித்தும் பல்வேறு உண்மை தகவல்கள் ஆதாரங்களுடன் இன்றைக்கு வெளிவந்திருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை ஆனால் அதே நேரத்தில் இணையத்தள ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்வு குறித்த விவாதங்கள் அரசியல் விவாதங்களாக மாறி மாபெரும் சர்ச்சையாகத் தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து அண்ணன் ஜெ. அன்பழகன் என்னிடம் பேசியது உண்மை, நான் கேட்டதும் உண்மை. அதற்கு மறைந்த அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்களும் இறைவனுமே சாட்சி. அந்தச் செய்தியை நான் பகிர்ந்ததில் சிறு தவறு நிகழ்ந்திருக்கலாமே தவிர இதில் வேறு எந்த உள்நோக்கமும் அரசியலும் கிடையாது. வரலாற்றைத் திரித்துச் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்படவில்லை அது போன்ற செயல்களில் ஒரு போதும் நான் ஈடுபடுவதில்லை என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT