Skip to main content

'இது என்ன ஜெயலலிதா பில்லா?' - தமிழக நிலவரத்தை கிண்டல் செய்த தெலுங்குப் படம்! பக்கத்து தியேட்டர் #7

Published on 14/01/2020 | Edited on 25/01/2020

‘நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா’ படம் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி வெளியானது. அந்தப் படம் அல்லு அர்ஜூனுக்கு அவ்வளவாக சோபிக்கவில்லை. இதன்பின் என்ன படம் நடிக்க போகிறார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்த போது மூன்றாவது முறையாக த்ரிவிக்ரம் படத்தில் நடிக்கிறார். அந்த படம் பெயர் ‘அலா வைகுந்தபுரமலோ’ என்று செய்தி வெளியானது. இது அல்லு அர்ஜூனின் 20-வது படம் என்பதால் ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒன்றரை வருடங்கள் எடுத்துக்கொண்டு பொறுமையாக படத்தை உருவாக்கி ரிலீஸ் செய்துள்ளது இப்படக்குழு. அவர்களின் அந்த மெனக்கெடலுக்கும், பொறுமைக்கும் பரிசாக 2020ஆம் ஆண்டு சங்கராந்தி பண்டிகையில் மகேஷ் பாபுவின் ‘சரிலேருநீக்கெவரு’ படத்துக்குப் போட்டியாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 

allu arjun

 

 

இந்தப் படத்தை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் தெலுங்கு திரைப்பட உலகில் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். அவர் எடுக்கும் படங்களில் நடிப்பவர்கள் என்னதான் மாஸ் ஹீரோவாக இருந்தாலும், படத்தில் சண்டை காட்சிகளைவிட  செண்டிமெண்ட் காட்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார். குறிப்பாக அவர் படத்தில் வரும் வசனங்களும், பன்ச்  வசனங்களும், காமெடி வசனங்களும் ஏதோ ஒரு வகையில் நம்மை ஈர்த்து படத்தை ரசிக்க வைத்துவிடும். தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனை இயக்கியவர் த்ரிவிக்ரம். பயப்பட வேண்டாம், தமிழில் இருந்ததுபோல மோசமாக இருக்காது, தெலுங்குப் படமான 'அத்தாரிண்டிக்கி தாரேதி'. 'பாகுபலி' வெளியாகுவதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் இதுதான் மிகப்பெரிய வசூல் கலெக்‌ஷன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்தளவிற்கு செம கமெர்ஷியலாக இருக்கும். தன்னுடைய படத்தில் நடிக்க வரும் ஹீரோவுக்கு என்ன வரும் என்பதை தெரிந்துக்கொண்டு, அதை சற்று மெருகேத்தி, குடும்பங்களுடன் படத்தை பார்க்க வரும் ரசிகர்களை கவர்ந்து இழுப்பதுதான் இவருடைய யுக்தி. இதே யுக்தியைதான் ‘அலா வைகுந்தபுரமலோ’ படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார். அதுவும் வேற லெவலுக்கு வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. நடனத்திலும் ஸ்டைலிலும் '100 பெர்செண்ட் நான் காரண்டி தருகிறேன்' என்று சொல்லும் அல்லு அர்ஜூனை வைத்துக்கொண்டு குடும்பப் பின்னணியில் முழுக்க முழுக்க பொழுதுபோக்காக ஒரு படம்.

படத்தின் கதையை பேசுவதற்கு முன்பாக இயக்குனரை பற்றி பேச முக்கிய காரணம், அவருடைய படத்தின் கதை திரைக்கதை யுக்தி என்று அனைத்துமே நார்மல் மோடில்தான் இருக்கும் என்பதால்தான். இந்தப் படத்தின் கதைக்கூட அப்படித்தான். ஜெயராமும் முரளி கிருஷ்ணாவும் ஒரே கம்பேனியில் வேலை பார்த்தவர்கள். அதில் ஜெயராம் அந்த கம்பேனிக்கே முதலாளி ஆகிவிடுகிறார். முரளி கிருஷ்ணா கிளர்க்காகவே இருக்கிறார். இதனால் ஜெயராம் மீது பொறாமையிலேயே இருக்கும் முரளிக்கும் ஜெயராமுக்கும் ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் வெவ்வேறு வார்டுகளில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னுடைய மகன் பணக்கார வீட்டில் வளரட்டும், அவனுடைய மகன் என் வீட்டில் வளரட்டும் என்று திட்டமிடுகின்றான் முரளி. இந்த விஷயம் தெரிந்தவர் அங்கிருக்கும் நர்ஸ் மட்டும்தான். அவரும் குழந்தையை சரியாக மாற்றிய பிறகு விபத்து ஏற்பட்டு கோமாவுக்குப் போய்விடுவார். இதன்பின் முரளி கிருஷ்ணா வளர்க்கும் ஜெயராமின் மகனான அல்லு அர்ஜூனுக்கு எப்படி இந்த உண்மைகள் தெரியவருகிறது, அதன்பின் அவர் ஜெயராம் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை எப்படி சால்வ் செய்கிறார் என்பதுதான் 'அலா வைகுந்தபுரமலோ'.   

இந்தக் கதை பல வருடமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய சினிமாவில் இருக்கும் ஒரு சாதாரண கதைதான், அதை பட்டி டிங்கரிங் பார்த்து இப்படி ஒரு கதையாக உருவாக்கியிருக்கலாம். ஆனால், அதை நமக்கு எப்படி சமைத்துக் கொடுத்தனர்  என்பதில்தான் த்ரிவிக்ரமும் அல்லு அர்ஜூனும் நிற்கிறார்கள். முதல் பாதியை காதலும், அல்லு அர்ஜூனின் இன்னொசெண்ட் காமெடிகளும் கடத்திக்கொண்டு செல்ல, இரண்டாம் பாதியில் அவை தவிர்க்கப்பட்டு செண்டிமெண்டில் நுழையும்போது கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது. ஆனால், ரொம்ப மோசம் இல்லை. தெலுங்கு ரசிகர்களுக்கு இது சாதாரண ஒன்றுதான். த்ரிவிக்ரம் படங்களில் சம்மந்தமில்லாமல் நிறைய கதாபாத்திரங்கள் ஓரமாகவே வந்துவிட்டு போவார்கள். அதற்காக வில்லன் சமுத்திரக்கனியையும் அவ்வாறே காட்டி முடித்திருப்பது சோகம். முதலில் கொடூர வில்லனாகக் காட்டி க்ளைமேக்ஸில் அவர்களை வைத்து காமெடி செய்யாவிட்டால் தெலுங்கு இயக்குனர்களுக்கு படம் எடுத்ததுபோலவே தெரியாது போல. சொந்தக்காரப் பெண்ணாக வரும் நிவேதா பெத்துராஜின் கதாபாத்திரமும் அவ்வாறே இருக்கிறது (தமிழ்நாட்டில் பெருகிக்  கிடக்கும் நிவி ஃபான்ஸ் இந்த படத்தை பார்ப்பதை தவிர்க்கவும், இல்லையென்றால் உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஏனென்றால் எனக்கும்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை ஜூனியர் ஆர்டிஸ்ட்டின் பங்குதான் அவருக்கு). ஜெயராமுக்கும்  தபுவுக்கும் ஒரு சின்ன செண்டிமெண்ட் சீன் வைத்திருக்கிறார்கள். அப்படி அதுவும் இல்லாமல் போனால் அவர்களும் படத்தில் இல்லாததுபோலதான் தெரிந்திருக்கும். 
 

allu arjun

 

 

முதல் பாதியில் நம்மை சிரிக்க வைத்து அழைத்து சென்ற த்ரிவிக்ரம், இரண்டாம் பாதியிலும் நிறைய சிரிக்க வைத்திருக்கலாம் நம்மை எமோஷனல் காட்சிகளில் அழ வைக்கலாம் என்று எண்ணி சற்று கடுப்பு ஏற்றிவிட்டார் இயக்குனர். படத்தில் ஒரு காட்சியில் 'ஒன்றரை லட்சம் பில்லுக்கு பத்து லட்சம் போடு' என்று ஒருவர் சொல்வார். அதை பார்த்து  ‘இது என்ன ஜெயலலிதா பில்லா?’ என்று கேட்பார் அப்போது தியேட்டரே சிரிப்பில் குலுங்கியது. மற்றபடி இது ஒரு அக்மார்க் தெலுங்குக் குடும்ப படம்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ்.தமன் கண்டிப்பாக அவரைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தப் படத்தில் வரும் நான்கு பாடல்களும் தெலுங்கில் பட்டி தொட்டி ஹிட். அதிலும் 'சாமஜவரகாமா' பாடல் இந்தியா முழுவதும் ஹிட், சித்ஸ்ரீராம் வாய்ஸில் உருகாதவர்கள் உண்டோ என்று போகப் போக பழமொழி வந்துவிடும்போல... அப்படி இருக்கிறது அவருடைய டைம்லைன். தமனின் கரியரில் இதை 'ஆல் டைம் பெஸ்ட்' என்று சொல்லிவிடலாம். ஆனால், பின்னணி இசையில் அவருடைய பணி சிறக்கவில்லை. ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராமன் லக்ஷ்மனுக்கு ஒரு வேண்டுகோள்... ஸ்டண்ட் காட்சிகளை ஸ்லோ மோஷனில் வைக்காதீர்கள், முடியவில்லை. 'தர்பார்' வரை அந்த ஸ்டண்ட் காட்சிகள் நம்மை தூங்கவிடாமல் தொந்தரவு செய்கிறது என்றால் பாருங்களேன்.

என்ன இருந்தாலும் பி.எஸ்.வினோத்தின் பிரம்மாண்ட அழகியலான சினிமாட்டோகிராஃபி, அல்லு அர்ஜூனின் ஸ்டைல், உடம்பை வளைத்து நெளித்து கஷ்டமே இல்லாமல் ஆடும் நடனம், ஸ்வாக், த்ரிவிக்ரமின் காமெடி வசனங்கள், படத்தில் வந்த காமெடி நடிகர்கள், அல்லு அர்ஜூனுக்கும் முரளி கிருஷ்ணாவுக்கும் நடக்கும் பனிப்போர் என்று பக்காவான மசாலா கலவையில் சங்கராந்தி ஸ்பெஷலாக ரசிகர்களை கொண்டாட வைக்கிறது.

 

முந்தைய படம்: அவெஞ்ஜர்ஸ் வசூலை மிஞ்சும்ன்னு சொன்னாங்க... எப்படி இருக்கு ஸ்டார்வார்ஸ்? -பக்கத்து தியேட்டர் #6 

அடுத்தப் படம்: உலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா? பக்கத்து தியேட்டர் #8

 

சார்ந்த செய்திகள்

Next Story

காளி கெட்டப்பில் மிரட்டும் அல்லு அர்ஜுன்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
allu arjun pushpa 2 teaser released

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காண்கிறார் அல்லு அர்ஜுன். அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்பட பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புஷ்பா 2 படக்குழு அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. டீசரில் அல்லு அர்ஜுன், காளி கெட்டப்பில் திருவிழாவில் எதிரிகளை மிரட்டி சண்டை போடும் காட்சி இடம்பெறுகிறது.

‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய சுகுமாரே இயக்கி வருகிறார். ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்போது ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்ற அதே காளி கெட்டப்பில் படத்தின் டீசரிலும் அல்லு அர்ஜுன் தோன்றுகிறார். 

Next Story

அல்லு அர்ஜுனுக்கு ஜோடி - இரண்டு ஹீரோயின்களிடம் அட்லீ பேச்சு வார்த்தை

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
trisha or samantha to pair in atlee next allu arjun movie

ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி அவரும் முன்னணி இயக்குநராக உருவானார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் 1143.59 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க கதையும் எழுதி வருவதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அது உறுதியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

trisha or samantha to pair in atlee next allu arjun movie

இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் இந்தாண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக சொல்லப்பட்டு வருவதையடுத்து தற்போது ஹீரோயின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா மற்றும் சமந்தா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுன் பிறந்தநாளான வருகிற 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. த்ரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைஃப், மலையாளத்தில் ஐடென்டிட்டி, ராம் மற்றும் தெலுங்கில் விஷ்வம்பரா படத்தை கைவசம் வைத்துள்ளார். சமந்தா சிட்டாடெல் நெப் தொடரை வைத்துள்ளார்.

அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் வருகிற 8ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாள் விருந்தாக வெளியாகிறது.