ADVERTISEMENT

'பா.ஜ.க விவகாரம் முதல் 'தல' பட்டம் விவகாரம்வரை' - அஜித் கொடுத்த அறிக்கை அதிர்ச்சிகள்!

06:12 PM Dec 01, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரும், ரசிகர்களால் ‘தல’ என அன்போடு அழைக்கப்படுபவருமான நடிகர் அஜித்திடம் இருந்து இன்று (01.12.2021) ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது. இனி தன்னைப் பற்றி எழுதும்போதும், பேசும்போதும் அஜித் குமார், அஜித் அல்லது ஏ.கே. என்றே தன்னைக் குறிப்பிட வேண்டும் என்பது அந்த அறிக்கையின் சாராம்சம். அதாவது தன்னுடைய 'தல' என்ற பட்டத்தை அஜித் துறந்துள்ளார். கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் 'தல' என்ற பட்டம் குறித்து கிரிக்கெட் வீரர் தோனி ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே நடந்த காரசாரமான கருத்து மோதலையடுத்து, இந்த முடிவை அஜித் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்து விலகியிருக்கும் அஜித், தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரசிகர்கள் செயல்படும்போது அதைக் கண்டித்து அறிக்கை வெளியிடுவார். அவ்வாறு அஜித் வெளியிடும் அறிக்கை பெரிய அளவில் பேசப்படும்; விவாதிக்கப்படும். சில நேரங்களில் அந்த அறிக்கை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்கும்; சில நேரங்களில் ஷாக் கொடுக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில், அதிகம் பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட அஜித்தின் அறிக்கைகள் குறித்து பார்ப்போம்.

‘அமராவதி’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான அஜித்திற்கு ‘மங்காத்தா’ 50வது படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அஜித் நற்பணி இயக்கத்தில் உள்ள சிலர் இயக்கத்தின் அறிவுரையை மீறி தங்களுடைய சுயவிளம்பரத்திற்காக செயல்படுவது தன்னுடைய கவனத்திற்குவந்துள்ளதாக நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்த அஜித், அறிக்கையின் இறுதியில், தேவைப்பட்டால் நற்பணி இயக்கத்தைக் கலைக்கவும் தயங்க மாட்டேன் எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த சமயத்தில் இந்த அறிக்கை பரபரப்பாகப் பேசப்பட்டது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, 2011ஆம் ஆண்டு தன்னுடைய பிறந்தநாளுக்கு இரண்டு நாட்கள் முன்பாக, தன்னுடைய மன்றத்தைக் கலைப்பதாக நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டார். நலத்திட்டங்கள் செய்வதற்கு நல்ல மனம் போதும், அமைப்பு தேவையில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அஜித், தன்னுடைய இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும் உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்தநாள் பரிசாகும் எனத் தெரிவித்திருந்தார். அஜித்தின் இந்த முடிவும் அறிக்கையும் அந்த நேரத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது.

கடந்த 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில்... அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற இருந்த நேரத்தில்... திருப்பூரில் அஜித் ரசிகர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு சுமார் நூறு பேர் பாஜகவில் இணைந்தனர். அந்த விழாவில் பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அஜித்தை வெகுவாக பாராட்டிப் பேசியிருந்தார். இந்த சம்பவம் நடந்த மறுநாளே அஜித்திடமிருந்து அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், ஒரு சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு எனக் குறிப்பிட்டு, நேரடி மற்றும் மறைமுக அரசியல் ஈடுபாட்டில் தனக்கு எந்த விருப்பமும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கண்ணில் படும் பிரபலங்கள் அனைவரிடமும் ‘வலிமை’ அப்டேட் கேட்பதை அஜித் ரசிகர்கள் வாடிக்கையாக வைத்திருந்தனர். இது ஒருகட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர்கள் அஷ்வின், மொய்ன் அலி வரை செல்ல, இதனைக் கண்டித்தும் நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டார். ‘உங்களுக்கு சினிமா பொழுதுபோக்கு மட்டுமே, எனக்கு சினிமா தொழில்’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்ட அஜித், பொது இடங்களிலும் சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும்படி ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தற்போது 'தல' என அழைக்க வேண்டாம் எனக் கூறி இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்தின் இந்த முடிவை மனதார ஏற்றுக்கொண்டுள்ள அஜித் ரசிகர்கள், தங்களுடைய சமூக வலைதள கணக்குகளில் குறிப்பிட்டிருந்த 'தல' என்ற அடைமொழியை நீக்க ஆரம்பித்துள்ளனர். தன்னுடைய ரசிகர்கள் நெறி தவறும்போது அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு தனக்குள்ளது என்பதை உணர்ந்து அஜித் வெளியிடும் இந்த அறிக்கைகள் பாராட்டிற்கும் வரவேற்பிற்கும் உரியதே.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT