
இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான இரு பெரும் துருவங்களாக ஒரு வாரத்திற்கு எல்லா பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசு பொருளாக இருக்கிறவர்கள் அஜித்குமாரும் விஜய்யும்.
90களின் பாதியிலும் 2000 ஆண்டின் ஆரம்பத்திலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்க இவர்கள் இருவருக்குமே காதல் படங்கள் தான் தேவைப்பட்டது. இன்று குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று சொல்லப்படுகிற படங்களைப் போல அப்போதெல்லாம் காதலர்கள் கொண்டாடுகிற வெற்றி மிக முக்கியமாகப் பார்க்கப்பட்டது. ‘காதல்’ என்ற வார்த்தை மட்டுமே நிறைந்திருந்த படத் தலைப்புகள் அதிகம் வந்தன. காதல் கோட்டை, காதல் தேசம், காதல் மன்னன், காதலுக்கு மரியாதை இப்படியாக பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.
அஜித்தும் விஜய்யும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த பல படங்கள் இருக்கிறது. காதல் சம்பந்தப்பட்ட படங்களில் அறிமுகமாயிருந்தாலும் விஜய்க்கு முதல் பெரிய வெற்றியைக் கொடுத்தது ‘பூவே உனக்காக’ காதல் படம் தான். இன்றைய வாரிசு படத்தில் கூட ‘ஒரு செடியில பூத்த ஒரு பூ உதிர்ந்திட்டா திரும்ப ஒட்ட வைக்க முடியாது’ என்ற அவர் நடித்த பூவே உனக்காக படத்தில் பேசிய வசனத்தை அவரே கிண்டலடித்து அதெல்லாம் கம் வச்சு ஒட்டிக்கலாம் என்கிற அளவுக்கு பூவே உனக்காக அன்றைய இளசுகளின் எமோஷ்னல் டச்சான படம்.

துள்ளாத மனமும் துள்ளும் முழுக்க முழுக்க காதலிக்காகவே வாழுகிற ஒரு இளைஞனின் கதை தான். இறுதி பாடல் காட்சிகளில் திரையரங்கமே கண்ணீரால் விசும்பிக் கொண்டிருந்தது. காதலுக்கு மரியாதை படத்தில் எவ்வளவோ பிரச்சனைகளுக்கு மத்தியிலும் காதலர்கள் சேருவதற்கு குடும்பங்கள் முதலில் சண்டையிட்டுக் கொண்டு பிறகு பேசி முடிவெடுக்கும் நிலைக்கெல்லாம் கொண்டு வருவார்கள். பத்து பேரை பறந்து பறந்து அடிக்கிற விஜய்யை விட அந்த காலகட்டத்தில் காதலுக்காக அடி வாங்கி வாயெல்லாம் ரத்தம் கசிந்து கொண்டு பாட்டு பாடுகிற விஜய்யை அவ்வளவு ரசித்தார்கள். குறிப்பாகப் பெண் ரசிகர்கள் அதிகம் இருந்தார்கள்.
அஜித் குமாரை எடுத்துக் கொண்டால் அமராவதி என்னும் காதல் படத்தில் அறிமுகமாயிருந்தாலும்., ஆசை என்னும் படம் தான் ஆசை நாயகன் அஜித் குமார் என்னும் பட்டம் கொடுக்குமளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது. ஆசை படத்தின் பாடல்களான ‘அன்று காதல் பண்ணியது உன் கன்னம் கிள்ளியது’ (மீனம்மா...) பாடல் இன்றும் வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைக்கும் அளவுக்கு காலம் கடந்து நிற்கிற படம். அல்டிமேட் ஸ்டார் என்கிற பட்டம் கொடுக்கும் முன்னரே அஜித் குமார் பல காலமாக காதல் மன்னன் என்று தான் அழைக்கப்பட்டார். அதற்கு காரணமானது காதல் மன்னன் படம். காதல் கோட்டை காதலர்கள் கொண்டாடிய காவிய படம். படம் வெளியாகி 25 வருடங்கள் கடந்தும் இன்னும் காதல் கோட்டை படம் டிவியில் போட்டால் உட்கார்ந்து பார்க்கிற இன்றைய குடும்பத் தலைவிகளின் அன்றைய காதலிகளாக இருந்தவர்களின் மனதுக்கு நெருக்கமான படம்.

அதே காலகட்டத்தில் வெளியான காதலுக்கு மரியாதை படமும் இந்த பட்டியலில் இடம் பெறும். இவ்விரு படங்களும் எப்படி மக்களோடு மக்களாக கல்லூரி இளசுகளிடையே பேசப்பட்டதென்றால் நீ இன்னும் படம் பார்க்கலையா என்று ஆச்சரிய கேள்வியை கேட்கும் அளவிற்கு இருந்தது. அதோடு இன்றெல்லாம் மூன்றாவது நாளே சக்சஸ் பார்ட்டி கொண்டாடுகிற சூழலில் இந்த படமெல்லாம் திரையரங்கிலேயே 150 நாட்களுக்கு மேலாக ஓடிய படங்கள் ஆகும்.
இன்றைய காலகட்டத்தில் வெளிவரும் படங்களில் ஆக்சன் ஹீரோவாக துப்பாக்கி எடுத்து சுடுவதாகட்டும், பத்து பேரை பறக்கவிட்டே அந்தரத்தில் அடிப்பதாகட்டும் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் இன்று மக்கள் மனதில் நிலைத்து நிற்க அன்று அவர்கள் சாக்லேட் பாயாக, காதல் இளவரசர்களாக வலம் வந்தது தான் இன்று ஆக்சன் ஹீரோவாக இருக்க காரணமாக அமைந்தது.