ADVERTISEMENT

சாய்னா நேவாலுக்கு எதிராக சர்ச்சை கருத்து... சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

04:27 PM Jan 10, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் வழக்கம். அந்த வகையில் இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாப் சென்ற போது போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாய்னா நேவால் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில், "எந்த நாடும் தனது சொந்த பிரதமரின் பாதுகாப்புக்கு சமரசம் செய்தால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது.பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் வலுவாக கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த சித்தார்த்தின் பதிவு சர்ச்சைக்குள்ளாகியது. இவரின் இந்த பதிவு பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி தேசிய மகளிர் ஆணையம் மஹாராஷ்டிர டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. மேலும் அவரின் இந்த பதிவு விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா நடிகர் சித்தார்த்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனிடையே நடிகர் சித்தார்த் தனது பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT