ADVERTISEMENT

”நான் பண்ண வேண்டியதை இந்தப் பொடிப்பையன் பண்ணிட்டானேனு கமல் பொறாமைப்படணும்” - பார்த்திபனின் விருப்பம் 

04:56 PM Jul 14, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் 'இரவின் நிழல்'. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், பார்த்திபனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் இரவின் நிழல் படம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், நடிகர் கமல்ஹாசன் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

”காலம் கடந்து கிடைக்கும் பாராட்டு என்பது வயித்துக்கு அரிசி கேட்டால் வாய்க்கு அரிசி போடும் செயலுக்கு ஒப்பானது. காலம் கடந்து கிடைக்கும் எல்லா பாரட்டுகளும் அப்படியானதுதான். சத்யஜித் ரேவுக்கு கௌரவ ஆஸ்கர் விருது கொடுத்தபோது அவர் மரணப்படுக்கையில் இருந்தார். அப்படி ஒரு கௌரவம் அவருக்குத் தேவையில்லை. உலகத்தில் என்னென்ன விருதுகள் இருக்கிறதோ அதையெல்லாம் இப்பவே கமல் சாருக்கு கொடுக்க வேண்டும். விக்ரம் வெற்றியையே நான் அப்படித்தான் பார்க்கிறேன். இத்தனை ஆண்டு காலமாக சினிமாவில் அவர் செய்த எல்லா முயற்சிகளையும் பார்த்து கடவுள் அவருக்கு வழங்கிய கொடைதான் விக்ரம் வெற்றி.

கமல் சாரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இயக்க வாய்ப்பு அமையாவிட்டாலும் ஒரு படத்திலாவது அவருடன் இணைந்து நடித்துவிட வேண்டும். ஒத்த செருப்பு படம் வெளியானதும் நான்கு வெளிநாட்டு நடிகர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் பட்டியலில் பார்த்திபனும் இணைந்துவிட்டார் எனப் பாராட்டினார். நேரமில்லாத காரணத்தால் இரவின் நிழல் படத்தை இன்னும் அவர் பார்க்கவில்லை. இது நான் பண்ணியிருக்க வேண்டிய படம், இந்தப் பொடிப்பையன் பண்ணிட்டானே என்ற பொறாமையோடு இரவின் நிழல் படத்தை அவர் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT