ADVERTISEMENT

பிஞ்ச செருப்பும் ஊக்குக் குத்துன சட்டையும் வெளிய... ஆனா உள்ள இருந்தது வேற! அதை அஜித் பார்த்தார்! 

04:04 PM Jul 20, 2020 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என சினிமாவில் பல அவதாரங்களை எடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. நடிகர் அஜித்தின் சினிமா கரியரில் முக்கியப்படமான 'வாலி' மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என பிறமொழிகளிலும் சில படங்களை இயக்கியுள்ளார். வெற்றிகரமான இயக்குனரான பின் அவரது லட்சியமான நடிப்பில் காலடி வைத்தார். அவருடைய வித்தியாசமான நடிப்பு, கலகல சிரிப்பு மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. ஆரம்பக் காலகட்டங்களில் துருதுருவென காதல் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த இருந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தன்னுடைய கடின உழைப்பினால் உயரம் தொட்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் பயணத்தில் ஒரு சிறிய பகுதி இது...

ADVERTISEMENT

எஸ்.ஜே.சூர்யாவை இயக்குநராக அடையாளம் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியவர் அஜித்தான். "தல அஜித் இல்லையென்றால் எஸ்.ஜே.சூர்யா இன்று இல்லை " என அவரே பல இடங்களில் சொல்லியும் இருக்கிறார். "அஜித் சாரோட முதல் சந்திப்பு அவரோட 'ஆசை' படத்தின்போது நடந்தது. அதில் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். என்னுடைய குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம்தான். அவர்களுக்கு நான் சினிமாவிற்குப் போவது பிடிக்கவில்லை. அதனால் நான் என்னுடைய சுயஉழைப்பினால் முன்னேறவேண்டும் என்று தீர்மானித்தேன். வீட்டில் பணம் ஏதும் வாங்கமாட்டேன். ஒரு வேளை நான் வெற்றி பெறாவிட்டால் வீட்டில் பணம் வாங்கி வீணாக்கி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாக நேரிடும் என்று அதை தவிர்த்து வந்தேன். 'ஆசை' படத்தில் வேலை பார்க்கும் போது என் சட்டையில் சில பட்டன்கள் இருக்காது. ஊக்குதான் குத்தியிருப்பேன். என்னுடைய செருப்பும் தேய்ந்து போய் அடியில் பிய்ந்திருக்கும். இதையெல்லாம் அஜித் சார் கவனித்து இருக்கிறார். "யாரு இந்தப் பையன்... எதைப் பற்றியும் கவலை இல்லாமல் இப்படி வேலை செய்கிறான். நாம் பெரிய நடிகரானால் இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்த அந்த எண்ணம்தான் பின்னாளில் 'வாலி' பட வாய்ப்பாக வந்து அமைந்தது. 'வாலி’ வெளியானபோது, அதன் மேக்கிங், பாடல்கள், க்ளாஸ் ஆகியவற்றில் தெரிந்தது, உண்மையான எஸ்.ஜே.சூர்யா யார் என்பது.

'வாலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'குஷி'யும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அஜித்திற்கு எப்படி 'வாலி' மிக முக்கியமான படமோ, அது போலவே விஜய்க்கு 'குஷி' முக்கியமான காலகட்டத்தில் கைகொடுத்த திரைப்படம். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஜய்க்குத் தேவையான வெற்றியை, தேவைக்கு மிக அதிகமான பெருவெற்றியை தந்தது 'குஷி'. பின் 'குஷி' தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'நியூ', அன்பே ஆருயிரே, இசை என அடுத்தடுத்த படங்களை இயக்கினார். அதுவரை இயக்குநராகவும், நடிகராகவும் இருந்த எஸ்.ஜே.சூர்யா இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய பரிமானம் காட்டினார். இவர் நடித்து வெளிவந்த 'இறைவி' மற்றும் சமீபத்திய 'மான்ஸ்டர்' திரைப்படம் நடிகராக இவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது.

காதல் நாயகனாக நடித்துக்கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய பாணியை சிறிது மாற்றி ஏ.ஆர்.முருகதாஸின் 'ஸ்பைடர்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்படத்தில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசமான முகபாவனையுடனும், பின்னணி இசையுடனும் பார்வையாளர்களைத் திகிலூட்டினார். தற்போது வெங்கட்பிரபு சிம்புவை வைத்து இயக்கும் 'மாநாடு' திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். என்னதான் அன்று, அவருடைய செருப்பும் சட்டை பட்டனும் பிய்ந்து இருந்தாலும் அவருடைய நம்பிக்கையும் உத்வேகமும் உறுதியாக இருந்ததால்தான் இன்று தான் விரும்பிய இடத்தைப் பிடித்து வெற்றியாளராகியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்கத்திலும் அசத்துங்கள் சூர்யா...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT