ADVERTISEMENT

நோட்புக் வாங்க காசில்லாத ஒருவர் ஃபேஸ்புக்கை திரும்பிப்பார்க்க வைத்தது எப்படி? வாட்ஸ்அப்  ஜான் கோம் | வென்றோர் சொல் #42

06:14 PM Aug 07, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் இயக்கத்தைத் தீர்மானிப்பதில் பிரதானமானது தகவல் பரிமாற்றம். கற்காலம் தொடங்கி தற்போதைய டிஜிட்டல் காலம்வரை தகவல் பரிமாற்றத்தின் வடிவமும் முறையும் மாற்றம் கண்டிருந்தாலும் அதனுடைய தேவை என்பது அளப்பரியதாகவே உள்ளது. காடுகளில் இடப்பெயர்வு அடைந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதச் சமூகம் தகவல் பரிமாற்றத்திற்குச் செடி, கொடிகளைப் பயன்படுத்தியது. ஓரிடத்தில் நிலைபெற்று வாழத்தொடங்கிய பின், மனிதச் சமூகத்தின் தகவல் பரிமாற்றம் கழுதை, புறா உள்ளிட்ட பிற உயிரினங்களைச் சார்ந்திருந்தது. பின்னர் அது, தந்தி, தபால், வானொலி, தொலைக்காட்சி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைதளம் என ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப தொடர்ந்து பரிணமித்துவருகிறது.

குறிப்பாக 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட இணைய மற்றும் டிஜிட்டல் புரட்சி உலகெங்கும் தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தகவல் தொழில்நுட்பங்கள் அரசாளும் இந்த டிஜிட்டல் யுகத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது வாட்ஸ்அப். தனிமனிதர்களுக்கு இடையேயான உரையாடல் தொடங்கி அலுவலகப் பயன்பாடுவரை வாட்ஸ்அப்பின் பயன்பாடு மிகப்பெரியது. டிஜிட்டல் யுகத்தின் இயங்கியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் வாட்ஸ்அப் தொடங்கப்பட்டது எப்படி? ஜான் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் என்ற இரு தனி மனிதர்களின் முயற்சியினால் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப், டிஜிட்டல் யுக இயங்கியலைத் தீர்மானிக்கூடிய ஒன்றாக உருவெடுத்தது எப்படி?

வாட்ஸ்அப்பின் நிறுவனரான ஜான் கோம், 1976ஆம் ஆண்டு உக்ரைனில் பிறந்தார். நடுத்தர யூத குடும்பத்தில் பிறந்த ஜான் கோமின் குழந்தைப் பருவம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. அவருடைய தாயார் இல்லத்தரசி. கட்டுமான மேலாளராக பணியாற்றிவந்த அவரது தந்தையுடைய வருமானத்தின் மூலமாகவே குடும்ப வாழ்க்கை நடந்துவந்தது. உக்ரைனில் நிலவிய அசாதாரண அரசியல் சூழல் காரணமாக ஜான் கோமின் குடும்பம் உக்ரைனை விட்டு வெளியேற முடிவெடுக்கிறது. தன்னுடைய தாயார் மற்றும் பாட்டியுடன் சேர்ந்து உக்ரைனை விட்டு வெளியேறுகிறார் ஜான் கோம். அவருக்கு அப்போதைய வயது 16. உக்ரைனில் இருந்து அமெரிக்கா சென்ற அவரது குடும்பம் அமெரிக்கா அரசு அளித்த மானியத்தைச் சார்ந்தே வாழ்க்கை நடத்திவந்தது. பின், அமெரிக்க பள்ளியில் சேர்ந்து தன்னுடைய பள்ளிப்படிப்பைத் தொடருகிறார். பிற அத்தியாவசியத் தேவைகளைச் சமாளிக்க மளிகைக் கடையில் பகுதிநேர வேலை செய்து வருவாய் ஈட்டுகிறார். பள்ளிப்படிப்பின் மீது பெரிய ஆர்வம் இல்லாத ஜான் கோமிற்கு கணினி ஃப்ரோகிராம் மொழி மீது தீராத ஆர்வம் ஏற்படுகிறது.

புத்தகக் கடையில் அது தொடர்பான பழைய புத்தகம் ஒன்றை வாங்கி, படிக்க ஆரம்பித்த ஜான் கோம், கணினி ஃப்ரோகிராம் மொழியை வெகுவிரைவிலேயே கற்றுக்கொள்கிறார். குடும்பத்தாரின் ஆசைக்கிணங்கி கல்லூரியில் சேர்ந்த ஜான் கோமிற்கு யாஹூ நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. கல்லூரி படிப்பைப் பாதியில் கைவிட்டு யாஹூ நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். வாட்ஸ்அப்பின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டனை அங்குதான் ஜான் கோம் சந்திக்கிறார். சில ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த ஜான் கோம், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு வாட்ஸ்அப் செயலியை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார். ஆரம்பக்கட்ட தோல்விகள், பல அப்டேட்கள் எனக் கடுமையான சோதனைகளைத் தாண்டி மிகப்பெரிய சக்தியாக இன்று வாட்ஸ்அப் உருவெடுத்துள்ளது.

"உக்ரைனில் இருந்து நாங்கள் வெளியேறியபோது எனக்கு 16 வயது. அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடங்க மிகவும் சிரமமாக இருந்தது. பள்ளிக்குத் தேவையான நோட் புக் வாங்குவதற்குக்கூட எங்களிடம் பணமில்லை. அதனால் உக்ரைனில் இருந்து எடுத்துவந்த பழைய நோட்டுகளைத்தான் பயன்படுத்தினேன். என்னுடைய அம்மா குழந்தைகள் பராமரிக்கும் வேலை செய்தார். நான் ஒரு மளிகைக்கடையில் உதவியாளராகப் பகுதிநேர வேலை செய்தேன். 'நீங்கள் செல்லுங்கள். சில ஆண்டுகள் கழித்து நான் உங்களுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன்...' எனக் கூறிய என் அப்பா, உக்ரைனிலேயே இறந்துவிட்டார். அந்தச் சம்பவம் நடந்த சில வருடங்களிலேயே என் அம்மா இறந்துவிட்டார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இணைய சர்வர்களுக்கான பாதுகாப்பு சோதனையாளராகப் பகுதிநேர வேலை பார்த்தேன். யாஹூ நிறுவனத்தின் சர்வர் பாதுகாப்பு சோதனைக்காக அங்கு செல்லும்போது அங்குள்ளவர்களுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் கல்லூரியில் இருந்தபோது யாஹூ நிறுவனத்தில் இருந்து சர்வர் பிரச்சனை காரணமாக அழைப்பு வந்தது. நான் கல்லூரியில் இருக்கிறேன் எனக்கூறியதும், அங்கு என்ன செய்துகொண்டு இருக்கிறாய்... நீ இருக்க வேண்டிய இடம் இது என்றனர்.

உடனே கிளம்பிச் சென்று அந்தக் குறையைச் சரி செய்தேன். பின், கல்லூரி படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு அங்கேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். நண்பர் பிரையன் ஆக்டனை அங்குதான் சந்தித்தேன். நாங்கள் இருவரும் ஒத்த சிந்தனை கொண்டவராக இருந்தோம். சில ஆண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு வேலையை ராஜினாமா செய்தேன். பின், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வேலைக்கு விண்ணப்பித்தேன். போதுமான திறமை இல்லை எனக்கூறி இரண்டு இடங்களிலும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் குறுஞ்செய்தி அனுப்புவது என்பது மிகவும் கடினமானதாகவும் அதிகம் செலவாகக்கூடியதாகவும் இருந்தது. இதை எளிமைப்படுத்தும் வகையில் ஒரு செயலி உருவாக்க ஆரம்பித்தோம். அதுதான் தற்போது வாட்ஸ்அப் என அழைக்கப்படுகிறது. முதல் வெர்ஷனை ஆப்பிள் ஃபோன்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைத்தோம். நீங்கள் ஒருவருக்கு ஃபோன் செய்யும் முன் அவருக்கு மெசேஜ் செய்து அவர் ஃபோன் பேசும் நிலையில் இருக்கிறாரா என்பதை உறுதிசெய்துவிட்டு அவருக்கு ஃபோன் செய்யலாம் என்பதே வாட்ஸ்அப் முதல் வெர்ஷனின் நோக்கம். அதை உருவாக்கியபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். துரதிர்ஷ்டவசடமாக அந்த வெர்ஷன் தோல்வியைத் தழுவி மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. அதன் பிறகு, ஒவ்வொரு அப்பேட்டிலும் ஒரு புதுமையான விஷயத்தை முயற்சி செய்து இன்று சிறப்பான ஒரு வாட்ஸ்அப் வெர்சனை உருவாக்கியுள்ளோம்".

வாட்ஸ்அப்பின் அபார வளர்ச்சியைக் கண்ட ஃபேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ரூ.1.25 லட்சம் கோடிக்கு தன்னுடைய வாட்ஸ்அப் நிறுவனத்தை ஃபேஸ்புக்கிடம் விற்றார் ஜான் கோம். தனக்குத் திறமையில்லை என்று கூறி நிராகரித்த நிறுவனத்திற்கே போட்டியாக வளர்ந்த ஜான் கோம், இறுதியில் அந்த நிறுவனத்தையே தன்னுடைய தயாரிப்பிற்காகத் தன் வாசலில் காத்திருக்க வைத்தார். ஒருவேளை ஃபேஸ்புக் அன்று ஜான் கோமை வேலைக்குச் சேர்த்திருந்தால் ஒரு சில லட்சங்களை ஊதியமாகப் பெற்றுக்கொண்டு இன்றும் அங்கு ஓர் ஊழியராக பணியாற்றிக்கொண்டு இருந்திருப்பார். அந்த நிராகரிப்பையே மூலதனமாக்கிய ஜான் கோம் இன்று தொட்டுள்ள உயரம்? வாழ்க்கையில் நிராகரிப்பை எதிர்கொள்ளும்போது துவண்டுவிடக்கூடாது என்பதற்கு ஜான் கோமின் வாழ்க்கையே ஆகச்சிறந்த உதாரணம்.

வாழ்க்கையில் நீங்கள் விருப்பப்படும் விஷயம் குறித்து மிகவும் கவனமாக இருங்கள். ஏனென்றால் அதுதான் வரவிருக்கும் நாட்களில் உங்களை வழிநடத்தப்போகிறது.

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

உலக சண்டியரான அமெரிக்காவின் முகத்தில் குத்துவிட்ட கலகக்காரன்! முகமது அலி | வென்றோர் சொல் #41

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT