ADVERTISEMENT

'சட்டி, பாத்திரத்தைத் தூக்கிட்டு எங்கயோ போய் சமைக்கிறானுகன்னு நினைச்சாங்க, ஆனா நாங்க செஞ்சது வேற' - வில்லேஜ் குக்கிங் | வென்றோர் சொல் #33

07:32 PM Mar 06, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் உள்ள வெற்றிக்கனியை சுவைத்த சாதனையாளர்கள், அதை சுவைக்க எதிர்கொண்ட சவால்கள் குறித்த அவர்களது வார்த்தைகளை 'வென்றோர் சொல்'லாக அறிந்து வருகிறோம். அவர்கள் பகிரும் அனுபவங்கள், நம் கனவை நோக்கிய ஓட்டத்திற்கு உத்வேகமளிக்கக்கூடிய எனர்ஜி டானிக்காக உள்ளன. இதுவரை தனிநபர் சாதனைப்பயணம் குறித்து அறிந்துவந்த நாம், முதல்முறையாக ஒரு குடும்பத்தின் சாதனைப் பயணத்தைப் பார்க்கிறோம். 'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூ-டியூப் சேனல் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வருகிறது புதுக்கோட்டை மாவட்டம், சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இந்த ஆறுபேர் கொண்ட குழு.

இந்த ஆறு பேரில் முதியவர் தவிர அனைவரும் பட்டதாரிகள். உள்ளூரில் சரியான வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட இவர்களுக்கு, குடும்பத்தினர் அனுமதி கிடைக்காததால், உள்ளூரில் சிறு வேலை செய்து வந்துள்ளனர். இக்குழுவைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரிடம் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு கைவசம் இருந்தது. ஜியோ நெட்ஒர்க் வருகைக்குப் பின், கன்னியாகுமரியையும் காஷ்மீரையும் இணைக்கக்கூடிய அளவிற்கு வலுவான இணைய வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. விளைவு, இந்தியாவின் அனைத்துக் கிராமங்களிலும் அழையா விருந்தாளியாக இணையம் நுழைந்தது.

இதன் எதிர்காலப் போக்கை சரியாகக் கணித்த சுப்ரமணி, தன்னுடைய சகாக்களை ஒருங்கிணைத்து கைவசம் இருந்த தொழில்நுட்ப அறிவின் துணையோடு யூ-டியூப் தளத்தினுள் கால் பதிக்கிறார். சுப்ரமணி கேமரா மற்றும் எடிட்டிங்கை கவனிப்பது, அவர் சகாக்கள் சமையல் வேலைகளைக் கவனிப்பது எனத் தங்களுக்குள் வேலைகளைப் பிரித்துக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கின்றனர். உங்கள் ரசிகர் நெதர்லாந்தில் இருந்து... உங்கள் ரசிகர் கம்போடியாவில் இருந்து... என உலக வரைபடத்தில் எளிய பார்வைக்குத் தட்டுப்படாத பல நாடுகளில் இருந்துவரும் கமெண்ட்ஸ்கள் பார்வையாளர்களான நம்மையும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் உள்ளுக்குள் உருவானது குறித்தும் அவர்களது ஆரம்பக்காலம் குறித்தும் சுப்ரமணி நம்மிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"நாங்கள் எல்லோரும் வேலைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தோம். ஒரே நேரத்தில் ஐந்து பேரும் வெளிநாடு சென்றுவிட்டால் குடும்பமே வெறிச்சோடியது போல இருக்கும் என்று கூறி வீட்டில் அனுமதி மறுத்துவிட்டனர். அவர்களை கஷ்டப்படுத்திவிட்டு செல்ல வேண்டுமா என நினைத்து அந்த முடிவைக் கைவிட்டோம். ஐந்து பேர் சேர்ந்து இந்த ஊரிலேயே ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தோம். எங்கள் குடும்பம் விவசாயப் பின்னணி கொண்ட குடும்பம். காலையில் வேலைக்குச் சென்றால் இரவுதான் அம்மாவும் அப்பாவும் வீடு திரும்புவார்கள். வீட்டில் நாங்கள்தான் சமையல் செய்யவேண்டும். இதனால், சிறு வயதிலேயே எங்களுக்குச் சமையல் அறிமுகமாகிவிட்டது. எங்கள் குழுவில் உள்ள தாத்தாவும் 30 வருடமாக சமையல் அனுபவம் உள்ளவர் என்பதால் இதைத் தேர்ந்தெடுத்தோம்"

இன்று சிக்கன், மட்டன், மீன், ஈசல், நண்டு என விதவிதமான சமையல் மூலம் உலகம் முழுவதும் கலக்கி வரும் இவர்களை பின்தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கை 70 லட்சத்திற்கும் மேலாகும். இது, தமிழில் ஒரு யூ-டியூப் சேனல் கொண்டுள்ள அதிகபட்ச ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையாகும். பொதுவாக வெற்றி என்பது தேளி மீன் போன்றது. அவ்வளவு எளிதில் கைகளில் வசப்பட்டுவிடாது. அதை வசப்படுத்த சமயோஜிதமும் கூர்நோக்குப் பார்வையும் தேவை.

இவர்களுக்கு வெற்றிவசப்பட்டது குறித்து அவர் கூறுகையில், "எங்கள் பகுதியில் நெட் வசதி சரியாகக் கிடையாது. ஒரு நிமிடத்திற்கு 1 எம்.பி. வேகத்தில்தான் கிடைக்கும். அதை வைத்து 3 ஜிபி அளவுள்ள வீடியோவைப் பதிவேற்ற வேண்டும். அவ்வளவு சிரமப்பட்டுச் செய்தும் முதல் எட்டுமாதம் எந்த வரவேற்பும் இல்லை. கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நம் சமையல் முறையை மாற்றிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து இயல்பாக சமைத்து வீடியோக்களை வெளியிட்டோம். அப்படி நாங்கள் சமைத்த 'ஈசல்' வீடியோவிற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த முறையையே பின்பற்ற ஆரம்பித்துவிட்டோம். எங்களது ஒரு வீடியோவை முதல்முறையாக ஆயிரம் பேர் பார்த்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது இன்னும் நினைவில் இருக்கிறது" என்கிறார்.

வெளிநாடு சென்று சம்பாதித்தால் என்ன சம்பாதித்திருக்க முடியுமோ அதை விட பன்மடங்கு இன்று சம்பாதித்து வருகின்றனர், இக்குழுவினர். குறிப்பாக தேசிய அரசியல் பிரமுகரான ராகுல் காந்தி வருகைக்குப் பின்னர், இந்தியா முழுவதும் பரிட்சயமான முகமாகிவிட்டனர். இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், "எங்கள் சேனலுக்கு உலகம் முழுக்க ஃபாலோயர்ஸ் இருந்தாலும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு நாங்கள் என்ன செய்கிறோம் என்று முழுமையாகத் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை 'சட்டி, பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு எங்கயோ போய் சமைக்கிறானுக' என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ராகுல்காந்தி அவர்களின் வருகைக்குப் பின்னர், 'நம் ஊர் பெயரை இந்தியா முழுக்க தெரிய வச்சுட்டிங்கடா' என்று அவர்களும் எங்களைப் பாராட்டுகிறார்கள். எங்களை வெறும் சமையல்காரரைப் போலப் பார்த்தார்கள். இன்று எல்லாம் மாறிவிட்டது" என்கிறார்.

எட்டு மாதங்களாக 'வியூஸ் போகவில்லை' எனத் தன்னம்பிக்கையை இழக்காமலும், இணைய வேகம் குறைவாக இருக்கிறதே எனச் சோர்வடையாமலும் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து உழைத்ததே இவர்களின் இன்றைய பெரும் பாய்ச்சலுக்கு முக்கியக் காரணம்.

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!

சொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ்! ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT