ADVERTISEMENT

'கால் வலிக்காக இப்புடி பண்ணதுகூட கைப்புள்ளைக்கான மேனரிஸமா மாறிப்போச்சு' - இம்சை அரசன் டாக்ஸ் #6

03:33 PM Oct 18, 2019 | suthakar@nakkh…

கடந்த 80 ஆண்டுகளில் தமிழ் சினிமா எத்தனையோ காமெடி நடிகர்களை கடந்திருக்கிறது. ஆனால், உடல் மொழியால் சிறு குழந்தை முதல் பல் போன கிழவர்களை வரை ஒருவரால் சிரிக்க வைக்க முடியும் என்றால் அது இவர் ஒருவரை தவிர யாராலும் முடியாது. தன்னுடைய ஒவ்வொரு அசைவினாலும் ஆயிரக்கணக்கான மக்களின் மன அழுத்தத்தை போக்கும் மகா நடிகன் இவன். 'வடிவேலு' இந்த ஒற்றை பெயர்தான் சில ஆண்டுகளுக்கு முன்புவரை படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக இருந்தது என்றால் அதற்கு மாற்றுக் கருத்து யாரிடமும் எழப்போவதில்லை. அவரின் திரைப்பயணத்தை நம்முடன் தொடர்ந்து பகிந்து வரும் நிலையில், வின்னப் படத்தில் கைப்புள்ள கதை சொல்கிறார் இன்று.

ADVERTISEMENT



"வின்னர்' படத்துல "வருத்தமில்லா வாலிபர் சங்கம்' வச்சுக்கிட்டு நான் பண்ற கைபுள்ள காமெடிக்கு இன்னமும் மவுசு கொறயல. "வேணாம்... வலிக்கும்... அழுதுரு வேன்'ன்னு சொல்றதும், "ஒங்க நல்லநேரம்... அண்ணன் செக்ஸ் மூடுல இருக்கேன்'னு சொல்றதும் ரகளயா இருக்கும். கைப்புள்ளயாவே எனக்குள்ள வாழ்ந்துக்கிட்டிருந்த நேரத்துலதான் அந்த சோதன வந்துச்சு.

"மானஸ்தன்' படத்துல ஒரு குழிக்குள்ள நான் குதிக்கிற ஸீனு. "நாங்கள்லாம் யாரு... குழிய நல்லா ஆழமா வெட்டுங்க'னு நானேதான் ஆழப்படுத்தச் சொன்னேன். குழிக்குள்ள குதிக்கயில உள்ள துருத்திக்கிட்டிருந்த கருங்கல்லு வலதுகால் பாதத்துல நங்குனு குத்தீருச்சு. உசுருபோற வலி. விஜயா ஹெல்த் சென்டர்ல ட்ரீட் மெண்ட்டு. "நரம்புல மயிரிழ கீறல் விழுந்து போச்சு. கட்டாயம் பெட் ரெஸ்ட் வேணும்'னு சொல்லீட்டாரு டாக்டரு. கட்டுப் போட்டு படுத்திருக்கேன். அப்ப "தவசி' படம் தீபாவளிக்கு ரிலீஸாகப் போகுது. அதுல நான் சம்பந்தப்பட்ட ஸீன் பாக்கி இருக்கு. புரொடியூஸர் ஞானவேல் சார் வந்து பாத்தாரு. தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண எல்லா ஏற்பாடும் செஞ்சிருக்கத சொன்னாரு. அந்த வலியோட போயி நடிச்சுக் குடுத்தேன்.

ADVERTISEMENT



லேகியம் விக்கிறவரா மயில்சாமியும் நானும் அந்த காமெடிய பண்ணணும். இப்பக்கூட அந்த காமெடிய பாத்தீங்கன்னா... நான் ஆடாம அசையாம நின்னு அந்த காமெடிய பண்ணினது தெரியும். அந்த சம்பவத்துக்குப் பின்னாடிதான் எக்ஸ்பிரஷன பேஸுக்கு கொண்டு வந்து நடிக்க ஆரம்பிச்சேன். ‘"அப்படீங்கிறது... இப்புடீங்கிறது...'னு மொகத்துலயே எபெக்ட்டுகள கொண்டுவந்தேன். "வின்னர்' படம் தொடங்கியாச்சு. இதுல கைப்புள்ள கேரக்டர் படம் முழுக்க வரும். கால் வலியோடவே களத்துல எறங்கீட்டேன். லேசா கால இழுத்து இழுத்து நடந்தே நடிச்சேன். கால் வலிக்காக இப்புடி பண்ணதுகூட கைப்புள்ளைக்கான மேனரிஸம் மாதிரி ஆகிப்போச்சு. சீட்டிங் சங்கதிகள்லாம் மதுரயில ரொம்ப சர்வசாதாரணமா நடக்கும். லேத்து பட்டறைக அதிகமா இருக்கும். லாரிகள்லாம் அங்ஙன வரவும் போகவுமா இருக்கும். நிறுத்தியிருக்க லாரிக்கடியில நெழலுக்காக தெருநாய்க படுத்துக் கெடக்கும். அடியில நாயி இருக்கது தெரியாம சமயத்துல லாரிய எடுத்துப்புடுவாரு டெய்வரு. நடுமண்டயில நறுச்சுனு சக்கரம் ஏறி நாயி மண்டயப் போட்றும்.

அதுக்கு முன்னாடி அந்தப் பயக நாலணாவுக்கு வரிக்கி ரொட்டிகூட வாங்கிப் போட்டிருக்க மாட்டாய்ங்க. கண்டாலே கல்லவிட்டு எறிவாய்ங்க. ‘"நைட்ல வந்தா கொலச்சு ஊரக் கூட்டுறியா?'னு அந்த வாயில்லா ஜீவன போட்டு பொரட்டி எடுப்பாய்ங்க. ஆனா இந்த மாதிரி லாரியில அடிபட்டுட்டு செத்துச்சுண்டா போதும்... "கேகே'னு கூடீருவாய்ங்க. "பங்காளி... நம்ம செல்லத்த கொன்னுபுட்டாண்டா'னு ஒருத்தன் ஆரம்பிப்பாம் பாருங்க. அதுக்குப் பின்னாடி செத்த நாய சுத்தி ஒக்காந்து ஒப்பாரிய கூட்டீருவாய்ங்க. ‘"அய்யா ராசா... ஒன்னய ராசபாளயத்துல போயி வாங்கிட்டு வந்து கூடப்பொறந்த தம்பிகணக்கா வளத்தனே. எவம்வீட்டு லாரியிலயோ இப்படி அநாத மாதிரி அடிபட்டுக் கெடக்குயே. பார்றா மாப்ள... ஏந்தம்பி நெலமய'னு அழுவான். ‘"ஆமா மாப்ள... இதுமேல நீ எம்புட்டு உசுரா இருந்தேன்னு எங்களுக்கெல்லாம் தெரியுமேடா. இதுக்குன்னே கோனாரு கடயில போயி மட்டன் பிரியாணி வாங்கிப் போடுவியேடா மச்சான்'னு எடுத்துக் கட்டுவான் இன்னொருத்தன். லோக்கல்ல இருக்க லேத்துப்பட்டறக்காரருக்கு இது தெரியாதா? "ஏலேய்... இதெல்லாம் ஓவரா இல்ல'னு சிரிப்பாரு. "நீ என்னத்துக்குய்யா பல்லக்காட்ற?'னு நாக்கத் துருத்துவாய்ங்க. "இந்த அராத்துகளோட நமக்கெதுக்கு வம்பு'னு ஸைலண்ட் ஆகீருவாரு பட்றக்காரரு. "நாய அடிச்சுப் போட்டுட்டு மைனரு மாதிரி ஒக்காந்துருக்க? கீழ எறங்கு'ம்பாய்ங்க.



டெய்வரு பம்மிப்பம்மி எறங்கி தயக்கமா கேப்பாரு. ‘இது வீட்டு நாய் மாதிரி தெரியலயேண்ணே!' ‘"யோவ். இது மாப்ளவீட்டு நாய்தான்யா. போன தீவாளிக்கி மாப்ளயும், இந்த நாயும் புது ட்ரெஸ் போட்டுக்கிட்டு ஒண்ணா போட்டாகூட எடுத்துக்கிட்டாங்கய்யா. வேணும்னா போட்டாவ எடுத்துவந்து காட்டவா?'னு போர்ஸா போவான் ஒரு ஆளு. அந்த போட்டா மேட்டர சொன்னவனுக்கு நாய் சொந்தக்காரனா நடிக்கிறவன் செவுல சேத்து ஒரு அற விடுவான். ‘"பன்னாடப்பயலே.... எந்தம்பிய நாயீனு சொல்றியா?'னு எக்ஸ்ட்ரா எமோஷனல கிரியேட் பண்ணுவாய்ங்க. எப்புடியாவது சமாளிச்சு கௌம்பீரலாம்னு நெனச்ச டெய்வரு ‘"நாயீனு சொன்னதுக்கே அடியா?'னு வெலவெலத்துருவாரு. நாய நல்லடக்கம் பண்ணனும்னு சொல்லி ஒரு அமௌண்ட்ட கறந்துருவாய்ங்க டெய்வருகிட்ட. ஏழு மணிக்குமேல சில ஏரியா இருட்டாக் கெடக்கும். அங்ஙன ஒக்காந்து ஜிஞ்சர் அடுச்சிட்டு பிரியாணியோ, பொரோட்டாவும், மட்டன் சுக்காவுமோ சாப்டலேன்னா தலவெடுச்சுப் போயிறும் பயகளுக்கு. கைல காசில்லேன்னா அந்தப் பக்கமா வர்ற சின்னப்பயகள புடுச்சுக்கிட்டு திகில் திட்டங்கள போடுவாய்ங்க."வண்டி ஏதாவது இப்ப வர்றப்ப குறுக்க விழுகணும். ஒனக்கு அடிகிடி படாது. 25 ரூவா தர்றம்டா'னு ஆசய காட்டீருவாய்ங்க. ஏப்ப சாப்பயா எவனாவது அல்வா, மல்லியப்பூ வாங்கிக்கிட்டு நல்ல மூடுல வீட்ட நோக்கி வண்டிய ஓட்டிக்கிட்டே வருவான். பத்தடிக்கி முன்னாலயே சின்னப்பயல விழுகவச்சிட்டு வம்ப ஆரம்பிச்சிருவாய்ங்க.

"சின்னப்பய செத்துப் போயிரப் போறான்யா. சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கி பணத்தக்குடு. மண்ட ஒடஞ்சு ஊத்துது'னு அடி போடுவாய்ங்க. அதுக்குள்ள ரெண்டுபேரு சின்னப்பயல இருட்டு சந்துக்குள்ள தூக்கிட்டுப் போயிறுவாய்ங்க. வண்டி ஆசாமியும் "என் வண்டியில விழுகல. மண்டயெல்லாம் ஒடயல'னு என்னென்னமோ சொல்லிப்பாப்பான். எதுவும் எடுபடாது. "சரிவிடு. மண்ட ஒடயலேங்கிறேல்ல.... நாங்களே அவன் மண்டய இப்ப... இப்ப... இப்பவே... ஒடக்கிறோம். வா... போலீஸ் ஸ்டேஷனுக்கு' சொன்னா... சந்துக்குள்ள இருக்க சின்னப்பய கதற ஆரம்பிச்சிறுவான். "எண்ணே... மண்டய ஒடச்சுப்புடாதீக'னு அலறுவான்.



இப்படி மெரட்டியே வண்டிக்காரன் பைக்குள்ள கையவிட்டு இருக்க காசு, பணங்கள எடுத்துக்கிட்டு அனுப்பீருவாய்ங்க. செக்ஸ் மூடுல வந்த வண்டிக்காரரு வெக்ஸ் மூடுல வீடுபோயிச் சேருவாரு. 25 ரூவா தர்றம்னு சொன்ன சின்னப்பயலுக்கு சில்றக்காச குடுத்து தொரத்தி விட்றுவாய்ங்க. அந்தப் பய... கொஞ்சம் தூரமா போயிட்டு ‘"ங்கோத்தா ங்கொம்மா... ஏமாத்திட்டீங்களேடா'னு வஞ்சுபுட்டு ஓடீருவான். இந்த சீட்டிங் மேட்டர்கள "கருப்பசாமி குத்தகைதாரர்' படத்து டைரக்டர் மூர்த்திகிட்ட சொன்னேன். அத படத்துல வைக்கச் சொல்லீட்டாரு. "படித்தொற பாண்டி'ங்கிற கேரக்டர்ல சின்னப்பயல நகக்கடக்காரர் மகனோட வண்டியில தள்ளிவிட்டு பணம் பறிக்கிற மாதிரி வச்சோம்.

இந்த ஒலகத்துல ஒனக்கு எதுவுமே இல்லயா? கவலப்படாத... ஒங்க அம்மா ஓங்கூட இருக்காங்களா? அதுபோதும்! எனக்கு வாழ்க்கயில கெடச்ச பொக்கிசமே எங்க அம்மாதான். ஊருல ஒரு பழமொழி சொல்லுவாக. "தாய பழிச்சாலும் தண்ணிய பழிக்காத'ன்னு. தாய எதுக்கு பழிக்கணும்? தாயவும் பழிக்கவேணாம், தண்ணியவும் பழிக்கவேணாம்... நெசமான கண்ணீரயும் பழிக்க வேணாம். இத எதுக்குச் சொல்றேன்னா...

அடுத்த பகுதி - 7

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT