ADVERTISEMENT

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #19

05:08 PM Dec 31, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தன் குலதெய்வமான ரேணுகா தேவியின் பெயரையே குழந்தைக்கு சூட்டினான் வாத்சல்யன். பெண் வளர்த்தி பீர்க்கை வளர்த்தி போல் மளமளவென்று வளர்ந்தாள் குழந்தை ரேணுகா., அத்வைத் -ன் கையைப் பிடித்த படி பள்ளி செல்ல ஆரம்பித்தாள். அத்வைத்க்கு நான்கு வயதும், ரேணுகாவிற்கு மூன்று வயதும் ஆன போனது, இருவரையும் ஒரே கேஜி வகுப்பில் சேர்க்க பார்க்க இரட்டையர்கள் போல் இருந்த்தில், கேட்பவர்களுக்கு அப்படியே சொல்லி வைத்தாள் மாலா. அண்ணா.... அண்ணா... என்று ரேணுகா அத்வைத் மீது பாசத்தைப் பொழிய, வாத்சல்யன் இருவரையும் ஒரே மாதிரி வித்தியாசமின்றி நேசித்தான்.

விசாலம் மனதில் மகனைப் பற்றியக் கவலை அதிகம் இருந்த்து. மாலாவும், வாத்சல்யனும் ஒரே வீட்டில் கணவன், மனைவி என்ற அந்நோன்யம் இல்லாமல் அந்நியர்கள் போல் வாழ்ந்தது மன அழுத்தத்தை அதிகப்படுத்தியது. என்ன செய்வது என்று புரியாமல், ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் தான் அனாதை என்று சொல்லி தானாகவே சென்று முதியோர் இல்லம் சென்று விட, வாத்சல்யன் அம்மாவைத் தேடி உறவுகளின் வீடுகளுக்குப் போய் விசாரித்தான். குழந்தைகள் இருவரும் பாட்டி இல்லாமல் சோர்ந்து போக, மாலா மட்டும் எப்போதும் போல் வளைய வந்தாள்.

எல்லை மீறிய கோபத்தில் ஒரு நாள் வாத்சல்யன் மாலாவிடம் சண்டை போட்டதைப் பார்த்தக் குழந்தைகள் பயந்து அலறியதில், தன் தவறை உணர்ந்து அமைதியானான். அம்மா உட்கார்ந்த இடம், நின்ற இடம் அனைத்தும் கண்ணில் பட்டு அவனை இம்சித்தது. ஒவ்வொரு இரவும் வீட்டிற்குத் தாமதமாக வந்தான். நடையில் தள்ளாட்டம் தெரிந்தது!

எப்போதும் குழந்தைகளை அரவணைத்துத் தூங்கும் பழக்கத்தை மாற்றிக் கொண்டான். குழந்தைகள் அப்பா... என்று ஓடி வரும் போது மட்டும் தூக்கிக் கொஞ்சினான். மாலா கவலைப்பட ஆரம்பித்தாள். அத்தை விசாலத்தைத் தேடி ஒவ்வொரு முதியோர் இல்லமாக ஏறி இறங்கினாள். எங்கும் விசாலத்தைக் காணமுடியாத நிலையில், சங்கரியிடம் சொல்லி அழுதாள். "அம்மா காணாமல் போய் ஒரு வாரம் கழித்து சொல்றியே எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு "

" சங்கரி... எப்படியாவது கண்டுபிடிச்சுடலாம்னு நினைச்சேன்."

" நீ கிழிச்ச கிழிசல்தான் தெரியுதே...என் அண்ணனை ஏன் ஒதுக்கி வச்சுருக்க... அந்தக் கவலையில்தான் எங்கம்மா எங்கோ போய்ட்டாங்க. இப்ப திருப்தியா உனக்கு. ஊர் உலகத்தில் யாரும் செய்யாத தவறையா எங்கண்ணன் செஞ்சான். எவளோ பெத்துப் போட்டக் குழந்தையைக் கொண்டாடினால்... நீ நல்லவளா....?! உங்கம்மா மாதிரி ராங்கிப் பிடிச்சவள்தான் நீயும்." என்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு சங்கரி சென்ற பிறகு, ஆற்றாமையில் குமைந்து போனாள் மாலா. அத்தை விசாலத்தின் மேல் அன்பும் அக்கறையும் இல்லையோ.... இருந்திருந்தால் அவரின் கெஞ்சுதலுக்கு செவி சாய்த்திருப்போமோ...அத்தை வீட்டை விட்டுப் போனதற்கு தான்தான் காரணமோ... என்ற குற்ற உணர்வில் உறக்கமின்றி தவித்தாள்.

சங்கரி தன் தாய் விசாலத்தைத் தேடி இண்டு இடுக்கில் இருக்கும் முதியோர் இல்லம் ஒன்று விடாமல் தேடி, அம்மாவை கண்டு பிடித்து தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்த இரண்டு நாட்களில் விசயம் அறிந்த வாத்சல்யன் தங்கையின் வீட்டிற்கு விரைந்தான். விசாலம் மகனை அணைத்துக் கொண்டு அழுதாள். "உன் வாழ்க்கை என்னால்தான் வீணாய் போச்சு வாத்சல்யா... என்னை மன்னிச்சுடு டா."

"அம்மா... என்னம்மா இது குழந்தை மாதிரி... எனக்கென்னம்மா குறை...? இரண்டு குழந்தைகள்! தேவதை மாதரி மனைவி! "

" க்க்கும்! இவனெல்லாம் எதுக்கும் லாயக்கில்லை. பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு டா. ஆம்பளையா லட்சணமா ஒரு அதட்டல் போட்டு அடுத்தக் குழந்தைக்கு ஏற்பாடு பண்ணிட்டு, அப்புறம் வந்து உன் அம்மாவை அழைச்சுட்டுப் போ." என்றதும் மனவருத்தத்தோடு வீடு வந்து சேர்ந்தான். ஓரளவு என்ன நடந்திருக்கும் என்று யூகித்த மாலா... "ரேணு, அத்வைத் இரண்டு பேரும் சமத்தா அப்பா கூட. இருங்க. அம்மா போய் பாட்டியை அழைச்சுட்டு வரேன்" என்றபடி விரைந்தாள்.

மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிய நிலையில் வந்து நின்ற மாலாவைப் பார்த்த சங்கரி, " எதுக்குடி வந்தே....எங்கம்மாவை அனுப்புறதா இல்லை! " என்றாள் குரலில் கோபம் கொப்பளித்தது

" அதை அத்தை சொல்லட்டும்! என் குடும்ப விசயத்தில் தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்லை!"

" ஏனில்லை... அது என் பிறந்த வீடு."

" யார் இல்லேனா...? நீ இப்ப வேற வீட்டு பெண்! வரலாம், போகலாம். அவ்வளவுதான் உன் உரிமை! மூக்கை நுழைத்து அறிவுரை சொல்லக் கூடாது! அதை முதலில் தெரிஞ்சுக்கோ."

" எங்கண்ணன் ஒரு அப்பாவி. அவனுக்குப் பேசத் தெரியலை. அதற்காக அவன் தலையில் நீ ஏறி மிதிப்பதை பார்த்துட்டு சும்மா இருக்கனுமா."..?!

" எவ பின்னாடியோ ஓடிப்போன போது பார்த்துட்டு சும்மாதானே இருந்தே. இப்பவும் அதே மாதிரி இரு! வீணா வம்பு பண்ணாதே. எனக்கும் என் புருசனுக்கும் ஆயிரம் இருக்கும்! மூன்றாம் மனிதரெல்லாம் தலையிடக் கூடாது. உன் லங்கிணி ஆட்டத்தை உன் வீட்டோடு வச்சுக்க என்றவள், விசாலத்தை பார்த்து...

" பெண்ணை பேச விட்டு வேடிக்கைப் பார்க்கிறீங்களா... மருமகள்னா உங்களுக்கு இளப்பம்தானே" என்று சாட...

" ஏன்டி கத்துற... வாங்க அத்தைனா... வந்துடப் போறேன் அவளோட ஏன் மல்லுக்குக்கு நிற்கிறே... சம்பந்தக்கார வீடு சாஸ்வதமாய்டுமா... வா போவோம்" என்ற விசாலத்தை எரித்து விடுவது போல் பார்த்தாள் சங்கரி.

"என்னதான் வசியம் வச்சிருக்காளோ தெரியலை. அண்ணனும் நீயும் தலையில் வச்சுகிட்டு ஆடுறீங்க. யப்பா... உங்க வீட்டு சம்பந்தமே எனக்கு வேண்டாம் கிளம்புங்க தாயிங்களா"...என்றவள் மறந்து கூட என் மகனுக்கு உன் பெண்ணை எடுக்க மாட்டேன்" என்றதும்...

" அப்படி ஒரு கனவு இருந்தால்... மறந்துடு! என் பெண்ணை மருமகளாக்க வேற ஒருத்தி தவமிருக்கா தெரிஞ்சுக்கோ" என்ற மாலா, மாமியாரின் கையை அழுத்தமாகப் பிடித்தபடி வெளியேற.. திகைப்புடன் நின்றாள் சங்கரி.

பாட்டியைப் பார்த்த சந்தோசத்தில் இரண்டு குழந்தைகளும் விசாலத்தை சோஃபாவில் தள்ளி மேலே விழுந்து புரள, வாத்சல்யன் அதை ரசித்தபடி நின்றிருந்தான். " போதும் ரசித்தது. சாப்பிட வாங்க" என்று குரல் கொடுத்த மாலாவை வியப்போடு பார்த்தான். தயங்கி தயங்கி டைனிங் ஹாலுக்கு வந்து அமர்ந்த வாத்சல்யன்... " என்னை மன்னிச்சுடு மாலா" என்ற வாத்சல்யன் மனசு நிறைவா இருக்கு. பசியே இல்லை! என்று சொல்ல...

" என் கையால் உங்களுக்குப் பரிமாறி நாலு வருசமாச்சு! ஆனால்... அதுக்காக மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். ஒழுங்கா சாப்பிடுங்க. நடுராத்தியில் பசிக்குதுனு எழுப்பினீங்க... நான் பொல்லாதவளா மாறிடுவேன்." என்றவள் இன்று நம் கல்யாண நாள் என்று கிசுகிசுப்பாய் கூறியதும், வாத்சல்யன் மனைவியை நிமிர்ந்து பார்த்தான். மனைவியின் கண்களில் தெரிந்த காதலில் உருகிப் போய், கையை உதறிக் கொண்டு எழந்தவனின் தோளை அழுத்தி அமர வைத்தாள். தன் கைகளால் ஊட்டினாள். வாயைத் துடைத்து அழைத்துக் கொண்டு போனாள். மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் பின்தொடர்ந்து சென்றான்.

கட்டிலில் ஒய்யாரமாய் சாய்ந்த மாலாவின் தலையில் தொங்கிய மல்லிகைச் சரம் ரதியை நினைவுபடுத்த, திகைத்துப் போய் சற்று விலகி நின்றான். "வாடா... வாத்சல்யா... என்று ரதியைப் போல் தன்னிரு கைகளை நீட்டி அழைக்க... அச்சத்துடன் நீ... நீ... ரதியா மாலாவா.... என்று வாய் குழற...மூர்ச்சையானான்.

தள்ளாடிய கணவனைத் தன் கைகளால் தாங்கி படுக்க வைத்த மாலா, முகத்தில் தண்ணீர் தெளிக்க மிக மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தான். எதிரில் அமர்ந்திருப்பது மாலாவா... ரதியின் ஆவியா... என்ற ஐயத்திலும், பயத்திலும் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டதும், கணவனின் மார்பில் மெதுவாக சரிந்தாள். தாறுமாய் இயங்கிய இதயத்துடிப்பை உணர்ந்தாள். " அத்தான் இவ்வளவு பயம் கூடாது. நான் உங்கள் மாலாதான். சும்மா பயமுறுத்தினேன் என்று சொல்லியும் வாத்சல்யனின் இதயத் துடிப்பு சீராக ஐந்து நிமிடங்களானது. பயம் தெளிந்து எழுந்து அமர்ந்தவனின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள்.

" உங்களை ஒன்று கேட்கலாமா...."

" ம்ம்ம்" அன்று ரதியின் வீட்டில் என்ன நடந்தது."..?

" சொன்னால் கோபப்படுவாய். வேண்டாமே..."

" என்னை அவள் ஆவி உபயோகப்படுத்திக் கொள்ளத் துடித்தது. ஆனால் நான் உன் நினைவாகத்தான் இருந்தேன். என்னை நீ நம்பனும் மாலா."

" உங்கள் ஆத்மா என்னோடு பேசியதை உணர்ந்தேன். என் ஆத்மா விழிப்புடன் இருந்ததால் உங்களை என்னால் காப்பாற்ற முடிந்தது.
ரதி உங்களை மந்திரத்தால் வசப்படுத்தி வைத்திருப்பதை சசிதரணிதான் சொன்னாள். அதற்காக அவள் கொடுத்த விலை அதிகம்! அது தெரிந்த பின்தான் உங்களை அவளிடமிருந்து மீட்க நினைத்தேன்."

" எவ்வளவு கொடுத்தாளாம்..". ?

" பணத்தைக் கொடுத்திருந்தால் பிரச்சனை இல்லையே..."

" வேறென்ன கொடுத்தாளாம்..."?

" சொன்னால் நம்புவீர்களா... உங்கள் மனம் நம்ப மறுத்தாலும் அதுதான் உண்மை! ரதி தன்னையே கொடுத்திருக்கிறாள். காலப் போக்கில் உங்கள் மேல் வெறுப்பை உண்டாக்கி, தற்கொலை செய்யும் அளவிற்கு உங்களைத் தூண்டி ரதியோடு வாழ திட்டம் தீட்டியிருக்கிறான். ஆனால் அதற்குள் ரேணு வயிற்றில் உருவாகி விட்டாள்"

அதிர்ந்து போன வாத்சல்யன் எங்கோ பார்வையை செலுத்த,

"ஆனால்....ரதி இதற்கு சம்மதிக்கவில்லை. அதனால்தான் குழந்தை பிறந்ததும் அவளை கொன்று விட்டதாக சசிதரணி சொன்னாள்.

" ரேணு என் குழந்தைதானே... குரலில் பிசிறு தட்டியது"

" ஆமாம்! உங்களை உரித்து வைத்திருக்காளே... தெரியலையா..."

" மாலா... இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லாதே. அவர்களால் தாங்க முடியாது" என்ற வாத்சல்யன் மனைவியின் மடியில் படுத்து துக்கம் தீரும் வரை அழுதான். மாலா கணவனின் முதுகை வருடியபடியே இருந்தாள். இருவருக்குள்ளும் கனத்த மெளனம் நிலவியது!

இருண்மை விலகி விடியலுக்கான அடையாளமாய்... சரசரவென சூரியன் கிழக்கே உதயமானான்...!!!


-- முற்றும் --

- இளமதி பத்மா

‘சூட்சும உலகம்’ முந்தைய பகுதிகள்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT