Skip to main content

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #15

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

sootchama ulagam part 15

 

வாத்சல்யன் ரதியின் விருப்பப்படி கேரளாவிற்கு மாற்றலாகிச் சென்ற பின்பு புலம்பிக்கொண்டே இருந்தாள் விசாலம். காலம் விரைந்துகொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணியாய் தாயாகப் போகும் மகிழ்ச்சியில் மலர்ந்த முகத்துடன் வளைய வந்துகொண்டிருந்தாள் மாலா. 

 

தனக்கு குழந்தை நிற்கலையே என்ற ஏக்கத்திலும் மன அழுத்தத்திலும் அழுது அரற்றிக்கொண்டிருந்தாள் ரதி. சந்தோசம் தொலைந்த நிலையில் எதிலும் பிடிப்பில்லாமல் கடமைக்காக வாழ்வதில் என்ன சந்தோசம் இருக்கிறது என்ற எண்ணத்தில், உயிர்ப்பின்றி உயிரோடு இருந்தாள் ரதி. 

 

ஒரு புதன்கிழமை காலை எட்டு மணிக்கு மாலா அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அம்மா அனுப்பிய புகைப்படத்தையும், செய்தியையும் பார்த்தவுடன், வாத்சல்யன் புறப்பட ஆயத்தமாக....

"உனக்கு என்னைப் பற்றிக் கவலையில்லை. என் உடல்நிலை குறித்தும் அக்கறை இல்லை. ஆனால்... உன் குடும்பம் மட்டும் முக்கியம்! இப்போதெல்லாம் நீ நிறையவே மாறிப் போனாய்." என்ற ரதியை வருத்தத்தோடு பார்த்தான்.

 

"எட்டு மாதங்களாக அம்மாவைக் கூடப் பார்க்கவில்லையென்று தெரிந்தும் என்னை இம்சிக்காதே ரதி! குழந்தையைப் பார்த்துவிட்டு இரண்டே நாளில் திரும்பிடுவேன்."

 

"நீ வந்தால் சந்தோசப்படவோ, வரவில்லையென்றால் வருத்தப்படவோ என் மனதில் தெம்பில்லை. உன் விருப்பப்படி செய்! "

 

"இப்படி விட்டேத்தியாய் பேசாதே. உனக்கு எந்தக் குறையுமில்லை. நமக்கு குழந்தை பிறக்கும் ரதி. வீணாக உன்னை வருத்திக்கொள்ளாதே."

 

"வருத்திக்கொள்ள இனி என்ன இருக்கிறது....? பாலைவனத்தில் வார்த்த நீர் எப்படி ஒன்றுமில்லாமல் போகுமோ... அப்படியாகிவிட்டது என் வாழ்க்கை!"

 

"கழிவிரக்கம் ஆபத்தானது ரதி. சோர்ந்து போகாதே டியர்! நல்லது நடக்கும்!"

 

"ம்ம்ம்... குழந்தையைப் பார்த்ததும் என்னை மறந்து அங்கேயே உட்கார்ந்து விடாதே." என்ற ரதியின் கூற்றுக்கு சுறுசுறுவென்று கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு, சிரித்தபடி விடை பெற்றான்.

 

ரதியின் மனம் உலைநீர் போல் கொதித்துக்கொண்டிருந்தது. எட்டு மாதங்கள் என்னுடனே இருந்தவன், குழந்தை என்றதும் குதூகலமாய் கிளம்பிவிட்டான். இதை இப்படியேவிட்டால் தன்மேல் ஈர்ப்பில்லாமல் போய்விடும்! உடம்பில் குறையில்லை. ஆனால் ஜாதகத்தில் குறையிருந்தால்... ஒருமுறை எதற்கும் பார்த்துவிடலாமா என்ற யோசனை செய்தாள். அழைப்பு மணி ஒலிக்க எழுந்துபோன ரதி,   சசிதராவைப் பார்த்து வியந்தாள்.

"வா... வா... அதிசயமெல்லாம் நடக்கிறதே. உனக்கு இன்று பகல் டியூட்டி ஆயிற்றே...."

 

"ரதி உன்னிடம் ஒரு ஆலோசனைக்காக வந்தேன்."

 

"ஆலோசனை சொல்லும் அளவிற்கு எனக்கு உடலிலும் தெம்பில்லை. மனசிலும் தெம்பில்லை சசி"

 

"என்னாச்சு... வாத்சல்யன் ஊரில் இல்லையா" என்றபடி  நாடியை சோதித்தாள்.

 

"ஹேய்... நீ அம்மா ஆகப்போறே..." என்ற வார்த்தைகள் தேனாய் இனித்தது. நிஜமாகவா.... நிஜமாகவா... என்று இரண்டுமுறை வியந்தவளை ஆரத்தழுவிக்கொண்ட சசிதரா,  “முட்டாள் டாக்டர் நீ...” என்று கேலி செய்ய...

 

"டென்சன் சசி. மாலாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சேதி கிடைத்ததும் உடனே புறப்பட்டுவிட்டான். மாலா இவனைவிட்டு விலகி நின்றாலும், வாத்சல்யன் விடுவதாக இல்லை. அவள் தாய்மையடைந்த பிறகு, என்னிடம் ஈர்ப்புமில்லை. காதலும் இல்லை."

 

"நீயாக கற்பனை செய்துகொள்ளாதே... காதல் இல்லாமலா நீ தாயாகப் போகிறாய்..?"

 

"அத்தி பூத்தாற் போல்தான் இந்நிகழ்வு! எப்போது நடந்ததென்றே நினைவில்லை. இப்போதெல்லாம் என்னைத் தவிர்க்கிறான். கேட்டால் சமாதானம் செய்கிறான். தூக்கத்தில் மாலா, மாலா என்கிறான். வாத்சல்யன் மாலாவின் நினைவாகவே இருக்கிறான்."

 

"ஓகே... ரிலாக்ஸ்! எல்லாம் சரியாகிடும்! தாயாகப் போகிறாய், சந்தோசமாக இரு. இது நீயாக தேர்ந்தெடுத்த வாழ்க்கை. நாங்கள் எவ்வளவு சொல்லியும் நீ கேட்கவில்லை. அணுசரித்து போ ரதி"

 

"ம்ம்ம்" என்ற ரதி சசியுடன் டியூட்டிக்கு புறப்பட்டாள். 

******** ******** ***********

 

குழந்தையைவிட்டுப் பிரிய மனமில்லாத வாத்சல்யன் ஒருவாரம் விடுமுறையை நீட்டித்தான். மாலாவின் பாரா முகம் சங்கடப்படுத்தினாலும் குழந்தையோடு நெருக்கமானான். அப்பாவைப் பார்... அப்பாவைப் பார் என்று தன்னை மகனிடம் நிரூபித்துக்கொண்டே இருந்தான். ஒரு எள்ளல் நகையோடு கடந்து செல்லும் மாலாவை முறைத்தான். அம்மாவின் மேலிருந்த பிரியம் கூடுதலானது. தொட்டிலில் இட்டு, பெயர் சூட்டிப் புறப்பட மேலும் பதினைந்து நாட்கள் கூடுதலாக ஆனது. ரதி உள்ளே கொதித்தாள்! ஆனால் வெளியில் அமைதியாக இருந்தாள்.

 

சென்னைக்கு மாற்றலாகிப் போகும் எண்ணம் தலைதூக்க, ரதியோடு பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் முறைத்துக்கொண்டு ஒரே வீட்டில் இரண்டு தீவுகளாய் மாறி, தனித்தனி சமையல் என்றாகிப் போக... வாழ்க்கை சூன்யமானது. தாய்மையடைந்திருக்கும் ரதியை கவனமாய் பார்த்துக்கொள்ளும்படி சசி சொன்னதும், வாத்சல்யன் பரபரப்புடன் வீட்டிற்கு வரும்போது, ரதி டியூட்டிக்கு புறப்பட ஆயத்தமாகி இருந்தாள்.

"சசி சொன்னாள். ஏன் என்னிடம் சொல்லவில்லை"...? என்று கதவைப் பார்த்தபடி பேசினான்.

 

"அவசியமில்லை என்று நினைத்தேன். நானே வேண்டாதவளாகிவிட்ட பிறகு, இந்தக் குழந்தை மட்டும் வேண்டுமா உனக்கு...? நீ எப்போது வேண்டுமானாலும் போகலாம்."

 

"பைத்தியமா உனக்கு...? என்னால் சென்னைக்கும் கேரளாவிற்கும் பறந்துகொண்டே இருக்க முடியாது. ஒரே இடத்தில் இருந்தால் நல்லது என்று நினைத்தேன். அதுதான் உலகத்துக்கே பறைசாற்றிவிட்டாயே... பிறகென்ன தயக்கம்..?” 

 

மாலாவோ அம்மாவோ உன்னை ஒன்றும் சொல்லப்போவதில்லை. நம் குழந்தை உறவுகளோடு ஒட்டி வளரட்டுமே.."

"அவசியமில்லை! உன்னைப் போல் ஒரு சுயநலக்காரனைக் காதலித்து மணந்ததற்கு வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்! போவது என்று முடிவான பின், வெற்று சமாதானங்கள் தேவையற்றது. போனால் திரும்பி வராதே. உன்னை என் குழந்தை பார்க்க வேண்டாம். அது ஆணோ... பெண்ணோ... அதற்கு உன்னை அறிமுகப்படுத்த மாட்டேன்." ஆக்ரோஷமாய் பேசியவளை வருத்தத்துடன் பார்த்தான்.

 

"ரதி... உன்னைக் குறை சொல்லவில்லை. யோசித்துப் பார், தனியாக உன்னைத் தவிக்கவிட்டுச் செல்ல முடியுமா...? தவிர என் குழந்தை அப்பா இல்லாமல் வளர்வதை நான் விரும்பவில்லை. பிறந்த குழந்தையும், பிறக்கப் போகும் குழந்தையும் எனக்கு கண் போன்றவர்கள். இருவருக்கும் என் அன்பை சமமாக கொடுப்பேன். என்னை நம்பு ரதி!

 

"இல்லை! ஒரு மனைவிதான்! ஒரு குழந்தைதான்! எந்த மனைவி, எந்தக் குழந்தை என்று நீ முடிவெடு."

 

"என்னை  காலத்துக்கும் குற்றவாளியாக்குவதுதான் உன் நோக்கமா...? மாலா ஒருநாள் கூட இப்படிப் பேசியதே இல்லை!"

 

"அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை. ஆனால் உன் அக்கறை என் மீதும் நம் குழந்தை மீது மட்டுமே இருக்க வேண்டும்." என்ற ரதியின் கண்கள் ஓரிடத்தில் நிற்காமல் அலைந்ததில்... கலவரமானான் வாத்சல்யன். பதில் பேசாமல் அருகே சென்று அணைத்துக்கொண்டான். "டியர்... ஐ லவ் யூ... சரியோ.. தவறோ... நம் வாழ்க்கையை நாம் வாழ்வோம். உன்னைவிட்டுப் போக மாட்டேன்" என்றான்.

 

ரதியின் நிலைமை குறித்து மனநல மருத்தவரோடு பேசினான். "அதிக அன்பும், குற்ற உணர்வும் ரதியை நிதானமிழக்கச் செய்கிறது. குழந்தை பிறந்த பிறகு உடல், மனம் இரண்டுமே சீராகிவிடும். அதுவரை பொறுத்திருங்கள். மாற்றம் இல்லையென்றால் மருத்துவம் பார்ப்போம்" என்று தைரியமூட்டிய பிறகே சகஜ நிலைக்கு வந்தான். அம்மாவிடம் ரதியின் நிலைமையை விளக்கிச் சொன்னான். 

 

"இதென்னடா சோதனை...? நீ எப்படி அவளைத் தனியாகப் பார்த்துக்கொள்வாய்...குழந்தை பிறந்தால் கவனிக்க ஆள் வேண்டுமே..."

 

"அதுக்கெல்லாம் ஒரு நர்ஸ் போட்டுக்கலாம். அவங்க பெரியம்மா வரேன்னாங்கம்மா... நீ கவலைப்படாதே. அத்வைத்தை கவனித்துக்கொள். ரதி சரியாகணும், என் ஒரே கவலை அதுதான்."

 

"கவனமா பார்த்துக்கோடா. யார் செய்த தீவினையோ உன்னைச் சுத்தி அடிக்குது."

 

"ம்ம்ம்..." என்ற வாத்சல்யன், ரதி அழைக்கும் குரல் கேட்டு ஃபோனை கட் செய்துவிட்டு விரைந்தான். சாப்பிட்ட அனைத்தும் வெளியே வாந்தியாக வந்து விழ, ஆதரவாய் பிடித்துக்கொண்டு வாயைக் கொப்பளிக்க வைத்து, படுக்கையில் கொண்டுவிட்டான். கண்கள் குழிவிழுந்து போய் களையிழந்து காணப்பட்டாள் ரதி.

 

"நான் பிழைப்பேனா என்று தெரியலை. மாலாவிடம் மன்னிப்பு கேட்கணும்! வரச்சொல்லேன் ப்ளீஸ்..." என்ற ரதியின் கெஞ்சல் மனதை நெகிழ்த்த, "உனக்கொன்றும் ஆகாது. புலம்பாமல் இரு ரதி" என்ற வாத்சல்யன் முன்னறைக்கு வந்து நின்று கண்ணீர் விட்டான். ரதியின் பெரியம்மா வந்ததும் வாத்சல்யன் சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். காலம் விரைந்தது!

 

ஒரு விடிகாலை பொழுதில் வலி தாங்காமல் எட்டு மாதத்திலேயே  ஒன்றரை கிலோ  எடையில், தோலும் எலும்புமாய் பெண் குழந்தை பிறக்க... ரதி நினைவு வராமலே உயிர் துறந்தாள். இங்குபேட்டரில் பாதுகாப்பாய் வைத்து கவனிக்க வேண்டிய நிலை. இந்தக் குழந்தையாவது பிழைக்குமா என்ற கவலையோடு, அம்மாவிற்குத் தெரிவித்தான். நீ வர முடியுமா அம்மா... இறைஞ்சி கேட்டபோது, மாலாவும் ஒருவயது கூட நிரம்பாத அத்வைத்தை தூக்கிக்கொண்டு அத்தையுடன் புறப்பட்டாள்...!

 

( திகில் தொடரும்....)

 

- இளமதி பத்மா

 

 

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #14

 

 

 

Next Story

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #19

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

sootchuma ulagam part 19

 

தன் குலதெய்வமான ரேணுகா தேவியின் பெயரையே குழந்தைக்கு சூட்டினான் வாத்சல்யன். பெண் வளர்த்தி பீர்க்கை வளர்த்தி போல் மளமளவென்று வளர்ந்தாள்   குழந்தை  ரேணுகா., அத்வைத் -ன் கையைப் பிடித்த படி பள்ளி செல்ல ஆரம்பித்தாள். அத்வைத்க்கு நான்கு வயதும், ரேணுகாவிற்கு மூன்று வயதும் ஆன போனது, இருவரையும் ஒரே கேஜி வகுப்பில் சேர்க்க பார்க்க இரட்டையர்கள் போல்  இருந்த்தில், கேட்பவர்களுக்கு அப்படியே சொல்லி வைத்தாள் மாலா. அண்ணா.... அண்ணா... என்று ரேணுகா அத்வைத் மீது பாசத்தைப் பொழிய, வாத்சல்யன் இருவரையும்  ஒரே மாதிரி வித்தியாசமின்றி நேசித்தான். 

 

விசாலம் மனதில் மகனைப் பற்றியக் கவலை அதிகம் இருந்த்து. மாலாவும், வாத்சல்யனும் ஒரே வீட்டில் கணவன், மனைவி என்ற அந்நோன்யம் இல்லாமல் அந்நியர்கள் போல் வாழ்ந்தது  மன அழுத்தத்தை அதிகப்படுத்தியது. என்ன செய்வது என்று புரியாமல், ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல்  தான் அனாதை என்று சொல்லி தானாகவே சென்று முதியோர் இல்லம் சென்று விட, வாத்சல்யன் அம்மாவைத் தேடி உறவுகளின் வீடுகளுக்குப் போய் விசாரித்தான். குழந்தைகள் இருவரும் பாட்டி இல்லாமல் சோர்ந்து போக, மாலா மட்டும் எப்போதும் போல் வளைய வந்தாள்.

 

எல்லை மீறிய கோபத்தில் ஒரு நாள் வாத்சல்யன் மாலாவிடம் சண்டை போட்டதைப் பார்த்தக் குழந்தைகள் பயந்து அலறியதில், தன் தவறை உணர்ந்து அமைதியானான். அம்மா உட்கார்ந்த இடம், நின்ற இடம் அனைத்தும் கண்ணில் பட்டு அவனை இம்சித்தது. ஒவ்வொரு இரவும் வீட்டிற்குத் தாமதமாக வந்தான். நடையில் தள்ளாட்டம் தெரிந்தது! 

 

எப்போதும் குழந்தைகளை அரவணைத்துத் தூங்கும் பழக்கத்தை மாற்றிக் கொண்டான். குழந்தைகள் அப்பா... என்று ஓடி வரும் போது மட்டும் தூக்கிக் கொஞ்சினான். மாலா கவலைப்பட ஆரம்பித்தாள். அத்தை விசாலத்தைத் தேடி ஒவ்வொரு முதியோர் இல்லமாக ஏறி இறங்கினாள். எங்கும் விசாலத்தைக் காணமுடியாத நிலையில், சங்கரியிடம் சொல்லி அழுதாள். "அம்மா காணாமல் போய்  ஒரு வாரம்  கழித்து சொல்றியே எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு "

" சங்கரி... எப்படியாவது கண்டுபிடிச்சுடலாம்னு நினைச்சேன்."

" நீ கிழிச்ச கிழிசல்தான் தெரியுதே...என் அண்ணனை ஏன் ஒதுக்கி வச்சுருக்க... அந்தக் கவலையில்தான் எங்கம்மா எங்கோ போய்ட்டாங்க. இப்ப திருப்தியா உனக்கு. ஊர் உலகத்தில் யாரும் செய்யாத தவறையா எங்கண்ணன் செஞ்சான். எவளோ பெத்துப் போட்டக்  குழந்தையைக் கொண்டாடினால்... நீ நல்லவளா....?! உங்கம்மா மாதிரி ராங்கிப் பிடிச்சவள்தான் நீயும்." என்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு சங்கரி சென்ற பிறகு, ஆற்றாமையில் குமைந்து போனாள் மாலா. அத்தை விசாலத்தின் மேல் அன்பும் அக்கறையும் இல்லையோ.... இருந்திருந்தால் அவரின் கெஞ்சுதலுக்கு செவி சாய்த்திருப்போமோ...அத்தை வீட்டை விட்டுப் போனதற்கு தான்தான் காரணமோ... என்ற குற்ற உணர்வில் உறக்கமின்றி தவித்தாள். 

 

சங்கரி தன் தாய் விசாலத்தைத் தேடி இண்டு இடுக்கில் இருக்கும்  முதியோர் இல்லம் ஒன்று விடாமல் தேடி, அம்மாவை கண்டு பிடித்து தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்த இரண்டு நாட்களில்  விசயம் அறிந்த வாத்சல்யன் தங்கையின் வீட்டிற்கு விரைந்தான். விசாலம் மகனை அணைத்துக் கொண்டு அழுதாள். "உன் வாழ்க்கை என்னால்தான் வீணாய் போச்சு வாத்சல்யா... என்னை மன்னிச்சுடு டா."

"அம்மா... என்னம்மா இது குழந்தை மாதிரி... எனக்கென்னம்மா குறை...? இரண்டு குழந்தைகள்!  தேவதை மாதரி மனைவி! "

" க்க்கும்! இவனெல்லாம் எதுக்கும் லாயக்கில்லை. பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு டா. ஆம்பளையா லட்சணமா ஒரு அதட்டல் போட்டு அடுத்தக் குழந்தைக்கு ஏற்பாடு பண்ணிட்டு, அப்புறம் வந்து உன் அம்மாவை அழைச்சுட்டுப் போ." என்றதும் மனவருத்தத்தோடு வீடு வந்து சேர்ந்தான். ஓரளவு என்ன நடந்திருக்கும் என்று யூகித்த மாலா... "ரேணு, அத்வைத் இரண்டு பேரும் சமத்தா அப்பா  கூட. இருங்க. அம்மா போய் பாட்டியை அழைச்சுட்டு வரேன்" என்றபடி விரைந்தாள்.

 

மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிய நிலையில் வந்து நின்ற மாலாவைப் பார்த்த சங்கரி,  "  எதுக்குடி வந்தே....எங்கம்மாவை அனுப்புறதா இல்லை! " என்றாள் குரலில் கோபம் கொப்பளித்தது

" அதை அத்தை சொல்லட்டும்!  என் குடும்ப விசயத்தில் தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்லை!"

" ஏனில்லை... அது என் பிறந்த வீடு."  

" யார் இல்லேனா...? நீ  இப்ப வேற வீட்டு பெண்! வரலாம், போகலாம். அவ்வளவுதான் உன் உரிமை! மூக்கை நுழைத்து அறிவுரை சொல்லக் கூடாது! அதை முதலில் தெரிஞ்சுக்கோ."

" எங்கண்ணன் ஒரு அப்பாவி. அவனுக்குப் பேசத் தெரியலை. அதற்காக அவன் தலையில் நீ  ஏறி மிதிப்பதை பார்த்துட்டு சும்மா இருக்கனுமா."..?!

" எவ பின்னாடியோ ஓடிப்போன போது பார்த்துட்டு சும்மாதானே இருந்தே. இப்பவும் அதே மாதிரி இரு! வீணா வம்பு பண்ணாதே. எனக்கும் என் புருசனுக்கும் ஆயிரம் இருக்கும்! மூன்றாம் மனிதரெல்லாம் தலையிடக் கூடாது. உன் லங்கிணி ஆட்டத்தை உன் வீட்டோடு வச்சுக்க என்றவள், விசாலத்தை பார்த்து...

" பெண்ணை பேச விட்டு வேடிக்கைப் பார்க்கிறீங்களா... மருமகள்னா உங்களுக்கு இளப்பம்தானே" என்று  சாட...

" ஏன்டி கத்துற... வாங்க அத்தைனா... வந்துடப் போறேன்  அவளோட ஏன் மல்லுக்குக்கு நிற்கிறே... சம்பந்தக்கார வீடு சாஸ்வதமாய்டுமா... வா போவோம்" என்ற விசாலத்தை எரித்து விடுவது போல் பார்த்தாள் சங்கரி.

"என்னதான் வசியம் வச்சிருக்காளோ தெரியலை. அண்ணனும் நீயும் தலையில் வச்சுகிட்டு ஆடுறீங்க. யப்பா... உங்க வீட்டு சம்பந்தமே எனக்கு வேண்டாம் கிளம்புங்க தாயிங்களா"...என்றவள் மறந்து கூட என் மகனுக்கு உன் பெண்ணை எடுக்க மாட்டேன்" என்றதும்...

" அப்படி ஒரு கனவு இருந்தால்... மறந்துடு!  என் பெண்ணை மருமகளாக்க வேற ஒருத்தி தவமிருக்கா தெரிஞ்சுக்கோ"  என்ற மாலா, மாமியாரின் கையை அழுத்தமாகப் பிடித்தபடி வெளியேற.. திகைப்புடன் நின்றாள் சங்கரி.

 

பாட்டியைப் பார்த்த சந்தோசத்தில் இரண்டு குழந்தைகளும் விசாலத்தை சோஃபாவில் தள்ளி மேலே விழுந்து புரள, வாத்சல்யன் அதை ரசித்தபடி நின்றிருந்தான். " போதும் ரசித்தது. சாப்பிட வாங்க" என்று குரல் கொடுத்த மாலாவை வியப்போடு பார்த்தான். தயங்கி தயங்கி டைனிங் ஹாலுக்கு வந்து அமர்ந்த வாத்சல்யன்... " என்னை மன்னிச்சுடு மாலா" என்ற வாத்சல்யன் மனசு நிறைவா  இருக்கு. பசியே இல்லை!  என்று சொல்ல...

" என் கையால் உங்களுக்குப் பரிமாறி நாலு வருசமாச்சு!  ஆனால்... அதுக்காக மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். ஒழுங்கா சாப்பிடுங்க. நடுராத்தியில் பசிக்குதுனு  எழுப்பினீங்க... நான் பொல்லாதவளா மாறிடுவேன்." என்றவள் இன்று நம் கல்யாண நாள் என்று கிசுகிசுப்பாய் கூறியதும், வாத்சல்யன் மனைவியை நிமிர்ந்து பார்த்தான். மனைவியின் கண்களில் தெரிந்த காதலில் உருகிப் போய், கையை உதறிக்  கொண்டு  எழந்தவனின் தோளை அழுத்தி அமர வைத்தாள். தன் கைகளால் ஊட்டினாள். வாயைத் துடைத்து அழைத்துக் கொண்டு போனாள். மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் பின்தொடர்ந்து சென்றான்.

 

கட்டிலில் ஒய்யாரமாய் சாய்ந்த மாலாவின் தலையில் தொங்கிய மல்லிகைச் சரம் ரதியை நினைவுபடுத்த,  திகைத்துப் போய் சற்று விலகி நின்றான். "வாடா... வாத்சல்யா... என்று ரதியைப் போல் தன்னிரு  கைகளை நீட்டி அழைக்க... அச்சத்துடன் நீ... நீ... ரதியா மாலாவா....  என்று வாய்  குழற...மூர்ச்சையானான்.

 

தள்ளாடிய கணவனைத் தன் கைகளால் தாங்கி  படுக்க வைத்த மாலா, முகத்தில் தண்ணீர் தெளிக்க மிக மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தான். எதிரில் அமர்ந்திருப்பது மாலாவா... ரதியின் ஆவியா... என்ற ஐயத்திலும், பயத்திலும் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டதும், கணவனின் மார்பில் மெதுவாக சரிந்தாள். தாறுமாய் இயங்கிய இதயத்துடிப்பை உணர்ந்தாள். " அத்தான் இவ்வளவு பயம் கூடாது. நான் உங்கள் மாலாதான். சும்மா பயமுறுத்தினேன் என்று சொல்லியும் வாத்சல்யனின் இதயத் துடிப்பு சீராக ஐந்து நிமிடங்களானது. பயம் தெளிந்து எழுந்து அமர்ந்தவனின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். 

"  உங்களை ஒன்று கேட்கலாமா...."

" ம்ம்ம்"  அன்று ரதியின் வீட்டில் என்ன நடந்தது."..?

" சொன்னால் கோபப்படுவாய். வேண்டாமே..."

" என்னை அவள் ஆவி உபயோகப்படுத்திக் கொள்ளத் துடித்தது. ஆனால் நான் உன் நினைவாகத்தான் இருந்தேன். என்னை நீ நம்பனும் மாலா."

" உங்கள் ஆத்மா என்னோடு பேசியதை உணர்ந்தேன்.  என் ஆத்மா விழிப்புடன் இருந்ததால் உங்களை என்னால் காப்பாற்ற முடிந்தது.
ரதி உங்களை மந்திரத்தால் வசப்படுத்தி வைத்திருப்பதை சசிதரணிதான் சொன்னாள். அதற்காக அவள் கொடுத்த விலை அதிகம்! அது தெரிந்த பின்தான் உங்களை அவளிடமிருந்து மீட்க நினைத்தேன்."

" எவ்வளவு கொடுத்தாளாம்..". ?

" பணத்தைக் கொடுத்திருந்தால் பிரச்சனை இல்லையே..."

" வேறென்ன கொடுத்தாளாம்..."?

" சொன்னால் நம்புவீர்களா... உங்கள் மனம் நம்ப மறுத்தாலும் அதுதான் உண்மை!  ரதி தன்னையே கொடுத்திருக்கிறாள். காலப் போக்கில் உங்கள் மேல் வெறுப்பை உண்டாக்கி, தற்கொலை செய்யும் அளவிற்கு உங்களைத் தூண்டி  ரதியோடு வாழ திட்டம் தீட்டியிருக்கிறான். ஆனால் அதற்குள் ரேணு வயிற்றில் உருவாகி விட்டாள்"

 

அதிர்ந்து போன வாத்சல்யன் எங்கோ பார்வையை செலுத்த,

"ஆனால்....ரதி இதற்கு சம்மதிக்கவில்லை. அதனால்தான் குழந்தை பிறந்ததும் அவளை கொன்று விட்டதாக சசிதரணி சொன்னாள்.

" ரேணு என் குழந்தைதானே... குரலில் பிசிறு தட்டியது"

" ஆமாம்! உங்களை உரித்து வைத்திருக்காளே... தெரியலையா..."

" மாலா... இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லாதே. அவர்களால் தாங்க முடியாது" என்ற வாத்சல்யன் மனைவியின் மடியில் படுத்து துக்கம் தீரும் வரை  அழுதான். மாலா கணவனின் முதுகை வருடியபடியே இருந்தாள். இருவருக்குள்ளும் கனத்த மெளனம் நிலவியது!

 

இருண்மை விலகி விடியலுக்கான அடையாளமாய்...  சரசரவென சூரியன் கிழக்கே உதயமானான்...!!!


                                                                         --  முற்றும்  --

 

- இளமதி பத்மா

 

 

‘சூட்சும உலகம்’  முந்தைய பகுதிகள்

 

 

Next Story

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #18

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

sootchama ulagam part 18

 

சசிதரணியின் உடல் அச்சத்தால் நடுங்கியதை கவனித்த வாத்சல்யன்,  "சசி திரும்பி பார்க்காமல் ஓடு" என சத்தமிட்ட அடுத்த நிமிடம் சசியை கீழே தள்ளி தனது காலால் எட்டி உதைத்தாள். சப்த நாடியும் அடங்க, பேசவும் சக்தியற்ற நிலையில் கண்களில் நீர் வழிய கை கூப்பினாள் சசிதரணி.

"ஓடிப்போ..." என்றவாறு உள்ளே ஓடிய மாலாவை எதிர்கொண்டு அரவணைத்த வாத்சல்யன், "உனக்கு என்ன வேணும் ரதி? உன் செய்கை என்னை அச்சுறுத்துகிறது. மாலாவை விட்டுடு ப்ளீஸ்.”

"மாலாவை விட்டுவிட்டால் என் நிலைமை? நீ அவளோடு சந்தோசமாய் வாழ்வாய். நான் ஏக்கத்தோடு அலையணுமாடா? உன் மனைவியைப் பைத்தியமாக்கித் தெருவில் அலையவிட்டுடுவேன் ஜாக்கிரதை!  மாலா என்ற வார்த்தையை நீ இனி உச்சரித்தால், உன் குழந்தையைக் கொன்றுவிடுவேன். உங்கம்மாவை ஊருக்கு அனுப்பப் போகிறாயா இல்லையா...?”

"உனக்குப் புண்ணியமாகப் போகட்டும் என்னைக் கொன்றுவிடு. மாலாவை விட்டுடு."

"மறுபடி மறுபடி அவள் பெயரைச் சொல்கிறாயா...?” என்று ஆவேசத்துடன் உள்ளே ஓடிச்சென்று அத்வத்தைத் தூக்கிக்கொண்டு பின்புறம் ஓடியவளைத் துரத்திப் பிடித்த வாத்சல்யன், அங்கேயே மண்டியிட்டான். “நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் ரதி. குழந்தையை ஒன்றும் செய்யாதே...”

"போ... போய் உங்கம்மாவிடம் பேசு. ஊருக்குப் போகச்சொல். என் குழந்தை இங்கேதான் இருக்கணும். சம்மதமா.?”

"சரி சொல்கிறேன். குழந்தையைக் கொடு" என்று கேட்ட வாத்சல்யனின் கைகளில் கொடுக்காமல் வேக வேகமாய் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாட, அத்வைத் கலகலவென சிரித்தான். இடையிடையே, “ம்மா... ம்மா...” என்று சொல்ல, ரதி விலகி நிற்க, மாலா அத்வைத்தை அணைத்தபடி உள்ளே செல்ல... பின் தொடர்ந்த வாத்சல்யன், தன் அம்மாவிடம்...

"அம்மா, நீ நாளையே ஊருக்குப் புறப்படுமா. அத்வைத்தை அழைச்சுட்டுப் போய்டு. இவள் குழந்தையை என்ன வேண்டுமானாலும் செய்வாள்" என்று பதற்றப்பட, கணவனை முறைத்த மாலா, "அத்தை... நாளை அமாவாசை!  ரதியின் ஆவியை இன்று விரட்டியே ஆகணும். நடு வீட்டில் நெருப்பை வளர்த்து உட்காருங்க. முதலில் மந்திரத்தால் அவள் ஆவியைக் கட்டுங்க. நான் குலதெய்வத்தின் கட்டுகளை அவிழ்க்கிறேன். கவனமா தவறில்லாமல் மந்திரத்தை உச்சரிக்கணும். அவளை வீட்டுக்கு வெளியே நிறுத்துங்க. அப்பதான் குலதெய்வம் உள்ளே வரும். உங்கப் பிள்ளையைக் குழந்தைகளைப் பார்த்துக்கச் சொல்லுங்க. என்ன சத்தம் கேட்டாலும் வெளியே வரக் கூடாதுனு சொல்லுங்க." என்றபடி விரைவாக இயங்கினாள். விசாலம் நெருப்பை வளர்க்க, மாலா குலதெய்வத்தின் கட்டுகளை ஒவ்வொரு மந்திரமாகச் சொல்லி அவிழ்க்க, அவிழ்க்க... குலதெய்வம் கண்விழித்து சிரித்தது! விசாலம் மந்திரத்தால் ரதியை கட்டி வெளியே நிற்க வைத்தாள். ரதியின் அலறலும், அழுகையும், கெஞ்சலும் வாத்சல்யனின் காதில் விழ, கலங்கினான்! ‘ரதி என்னை மன்னிச்சுடு.’ மானசீகமாய் வேண்டினான்.

 

விசாலம்  மந்திரங்கள் உச்சரித்து முடிக்கும் நேரத்தில் சாம்பிராணி தூபத்துடன் வெண்கடுகு பொடியைத் தூவி வீட்டின் மூலை முடுக்கு அனைத்திலும் எடுத்துச் சென்றாள். வீடு முழுவதும் வெண்கடுகு பொடியின் நறுமணம் நாசியில் சுகமாய் ஏறியதில்... நிம்மதி பெருமூச்சை வெளியிட்டபடி வாசலுக்கு வந்தாள் மாலா. ரதியின் ஆத்மா சாந்தியடைய உதவுமாறு பிரபஞ்சத்திடம் வேண்டினாள். விசாலம் மருமகளை அணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றாள்.

 

குழந்தைகள் இருவரும் வாத்சல்யனின் மடியில் தூங்கிக்கொண்டிருக்க, கண்மூடி கலக்கத்தோடு அமர்ந்திருந்த மகனின் தலையை வருடிக்கொடுத்த விசாலம்,  "நடந்தெல்லாம் கெட்டக் கனவா நினைச்சு மறந்துடுப்பா."

"முயற்சி செய்றேன் மா. முதலில் இங்கிருந்து கிளம்பணும்! அதற்கு முன் சசிதரணியை பார்க்கணும்! மூன்றுமாத விடுமுறைக்கும், மாற்றல் வேண்டியும் அப்ளை செய்யணும்!" என்றவன்  மாலாவிடம்...

"என்னை மன்னிச்சுடு மாலா. என்னால் உனக்கு எத்தனை கஷ்டம்..? இப்படியெல்லாம் ஆகும்னு நான் எதிர்பார்க்கலை." குரலில் வருத்தம் இழையோடியது.

"அத்தை... உங்கப் பிள்ளையை மன்னிக்க நான் யாரு... குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கச் சொல்லுங்க அது போதும்! ரதியின் குழந்தைக்கும் நல்ல அம்மாவா இருப்பேன். அத்வைத்தும் இவளும் என்னிரு கண்கள் மாதிரிதான்! எனக்கும் அவருக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லைனு தெளிவான சொல்லி வைங்க".

"ஏன்டி, திமிரா உனக்கு? காலத்துக்கும் எனக்குக் கவலையைக் கொடுத்துகிட்டே இருப்பியா? என் பிள்ளை என்னடி தப்பு செய்தான். காதலிச்சவளோடு கொஞ்ச நாள் வாழ்ந்தான். அது தப்பா? ஆ... ஊன்னா முறுக்கிக்கிட்டு நிற்கிறே. அவள்தான் ஒரேயடியா போய்ட்டாளே, இன்னும் என்ன? ரொம்ப இடக்கு பண்ணாதே. அப்புறம் நடக்குறதே வேற.... ஆமா..."

"சும்மா கத்தாதீங்க. உங்கள் பிள்ளைக்கு வக்கலாத்து வாங்குறதை இன்னியோட நிறுத்திக்கங்க." என்றவள், “இவளுக்கு ஒரு நல்லப் பெயரா வைக்கணும். அதை யோசிங்க மிஸ்டர் வாத்சல்யன்” என்றபடி குழந்தையோடு அறையைவிட்டு வெளியேறினாள்.

 

வாத்சல்யனின் வாடிய முகம் விசாலத்தை உருக வைத்தது. "காலம் எல்லா மனப்புண்களையும் ஆற்றும் வாத்சல்யா... நீ கவலைப்படாதே..." என்றவள் மருமகளைத் தேடிப் போனாள்.

"மாலா... எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாதே. ஒட்டிக்கிட்டு வந்தவள் எப்படி போராடினாள்னு பார்த்தேல்ல. அதுதான்டி அன்பு. நீ செய்வது அநியாயம்! அவன் துக்கத்தில் இருக்கான். இப்போதுதான் நீ அவனுக்கு அணுசரனையா இருக்கணும்.! ரதி உன்னைப் பிடித்துக்கொண்டிருந்தபோது எப்படித் துடிச்சுப் போனான் தெரியுமா?”

"ஆ... தெரியும்! நல்லாவே தெரியும்" என்ற குரலில் உள்ள ஏளனம் விசாலத்திற்கு சினத்தை மூட்டியது.

"தெரிந்தும் தெரியாத செய்த தவறையெல்லாம் மன்னிக்கக் கற்றுக்கொள் மாலா. நூற்றுக்கு நூறு சரியாக யாராலும் இருக்க முடியாது."

"உங்க பிரசங்கத்தைத் தயவுசெய்து நிறுத்துங்க. மன்னிச்சதால்தான் இதோ இந்தப் பிள்ளை என் மார்பில் பால் குடிக்குது. மறக்கச் சொல்றீங்களே, அதுதான் கஷ்டமா இருக்கு". 

 

இதற்கு மேல் பேசக் கூடாது என்ற தீர்மானத்துடன் குழந்தை அத்வைத்தை தூக்கித் தொட்டிலில் இட்டு படுக்கையில் சாய்ந்தால் விசாலம். ஒரு வாரத்திற்கு அலைச்சலும் வேலைப் பளுவும் உடலை சோர்வுற செய்ததில் ஒருநாள் முழுவதும் தூங்கிக் கழித்த வாத்சல்யன், சசிதரணியை பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லி  புறப்பட....

"அத்தை உங்கப் பிள்ளையைப் போக வேண்டாம்னு சொல்லுங்க. எனக்கு மனசுக்கு சரியா படலை." என்ற மாலாவிடம்...

"எல்லாத்துக்கும் தடை சொன்னால் எப்படி மாலா. குழந்தையை ஒருவாரம் அவள்தான் காப்பாற்றி வச்சிருந்தாள். அதற்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கோம் என்பதை மறந்துடாதே."

"நாளை புறப்படப் போறோம் என்பதை ஃபோன் செய்து சொன்னால் போதாதா.? இந்த ஊரின் எல்லையைக் கடக்கும்வரை உங்கள் பிள்ளை ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.”

"அம்மா... நான் போகலைம்மா" என்ற வாத்சல்யன் குழந்தை அத்வைத் உடன் விளையாடத் துவங்கினான். ஒரு அடிக்கும் குறைவாக, குச்சிக்குச்சியாய் கால்களும், கைகளுமாய் கண்கள் மட்டும் பெரிதாக துறுவென்று இருந்த ரதியின் குழந்தையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மாலா. ரதியின் சாயல் துளியும் இல்லாமல் இருந்ததில், மனம் சற்று லேசானது. வாத்சல்யனின் முக அமைப்போடு அழகாக இருந்தாள். அப்பாவின் சாயலில் பெண் இருப்பது அதிர்ஷ்டம் என்பார்கள் என்று நினைத்தபோது, தன்னை ஒப்பிட்டுப் பார்த்தாள். ஒரு அதிர்ஷ்ட மண்ணுமில்லை. நான் பதினாறு வயதில் தாயை இழந்தேன். நீ பிறந்தவுடன் இழந்துவிட்டாய். வேறொன்றும் நமக்குள் வித்தியாசமில்லை. ஆனால், உன் அப்பாவை உனக்கேற்ற மாதிரி உன் மேல் பாசமுள்ளவராக மாற்றுவேன். உனக்கு எந்தக் குறையுமில்லாமல் வளர்ப்பேன். அத்வைத் போல் நீயும் என் குழந்தைதான் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். மாலாவின் மன ஓட்டம் புரிந்த மாதிரி குழந்தை சிரிக்க, குனிந்து அதன் நெற்றியில் முத்தமிட்டாள்.

 

வழியனுப்ப வந்த சசிதரணியிடம், வீட்டை விற்பதற்கான ஏற்பாட்டை செய்ய சொல்லி சாவியைக் கொடுத்த வாத்சல்யனிடம், "அதற்கு என்ன அவசியம் வந்தது? அவ்வப்போது பராமரித்து வைக்கிறேன். நாளை இவள் வளர்ந்து வரும்போது தேவைப்படலாம். இந்தக் குட்டிக்குக் கல்யாணப் பரிசாகத் தரலாமே. யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் இவளே கூட இங்கு வந்து வசிக்கக் கூடும்” என்ற சசிதரணி குழந்தையின் தலையை வருடினாள். வாத்சல்யன் தன் அம்மாவைப் பார்க்க, விசாலம் மாலாவை பார்க்க, மாலா சசிதரணியிடம்... “ரதிக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்ததென்றால்,  தாராளமாய் செய்யலாம். அம்மாவின் ஆஸ்தி பெண்ணுக்குத்தானே” என்றாள்.

"மிகச்சரியாகச் சொன்னாய் மாலா. ரதியின் ஆசை அதுதான்!  ஆனால், காலம் தீர்மானிப்பதை நாம் ஏற்றுக்கொள்வோம். அதுவரை நாமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாமே என்றுதான் சொன்னேன். ரதி என் மாமன் மகள். நான் ரதிக்கு அத்தை மகள்! நாங்கள் இருவருமே அந்த வீட்டில்தான் பிறந்தோம். என்னைவிட ரதி மூன்று வயது சிறியவள், புத்திசாலி! புத்திசாலிகள்தான் இப்படியான தவறை செய்வார்கள்" என்று வருத்தத்துடன் கூறினாள்.  

 

இரயில் புறப்படுவதற்கான நேரம் வர, மெதுவாக நகர ஆரம்பித்து வேகம் எடுக்கும்வரை பார்த்துக்கொண்டிருந்தாள். 

 

( திகில் தொடரும் )

 

 

-இளமதி பத்மா

 

 

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #17