Advertisment

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #16

sootchama ulagam part 16

Advertisment

"நீ என்னோடு வர வேண்டாம் மாலா. ரதியின் உறவுகள் அங்கே இருப்பார்கள். அவர்கள் கண்ணீல் நீ பட வேண்டாம். ரதி அவர்களிடம் என்ன சொல்லி வைத்திருப்பாள் என்று தெரியாது. அவள் இறந்த துயரத்தில்அவர்கள் உனக்கு கேடு நினைக்கலாம். எட்டு மாதத்தில் பிறந்த குழந்தை பிழைக்குமா... என்ற கேள்விக்குறியோடுதான் நான் போகிறேன். கடவுள் அருள் இருந்தால் குழந்தையோடு வருவோம். எப்படியும் காரியம் முடித்துவிட்டு வர குறைந்தது இருபது நாள் ஆகலாம்.தேவையில்லாமல் பிரச்சனையை நாம் ஏன் வளர்க்கணும் சொல்லு..." என்றாள் விசாலம்.

"என்ன பேசுறீங்க நீங்க.... பச்சிளம் குழந்தையை உங்களால் கவனிக்க முடியுமா... அத்வைத்தை கவனிக்கவே முடியலை.மற்றவர் பற்றி நமக்கென்ன... உங்க பிள்ளை இருக்கும்போது யார் என்ன செய்துவிட முடியும்... தவிர அல்பாயுசில் போயிருக்கா பாவம்! உங்க பிள்ளையைப் பிடித்துக்கொண்டால் என்ன செய்வீர்கள்...? உங்களுக்கு ஆவியை விரட்டும் சக்தி இருக்கா...? என்னால் முடியும்!தாத்தா நிறைய விசயங்களை எழுதியிருக்கார். ஒன்றுவிடாமல் படிச்சுட்டேன். ரதியின் ஆவி தொடர்ந்து வராமல் அங்கேயே விரட்டணும்.அதனால் நான் வருவேன். அங்கிருப்பவர்கள் பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கு ஒன்றும் ஆகாது. உங்கள் பிள்ளையைப் காப்பாற்ற நான் வந்தே ஆகணும்! எனக்காக இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்கு அப்பா வேண்டும்." என்ற தனது மருமகள் மாலாவை கிலியுடன் பார்த்தாள் விசாலம்.

"என்னென்னமோ பேசி பயமுறுத்தாதே மாலா."

"பயமுறுத்தலை! உங்க பிள்ளை உயிரோடு இருக்கணும்னா நான் வரணும்!" என்ற மாலா குழந்தைக்குத் தேவையானவற்றையும், தனக்குத் தேவையானவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். இவர்கள் போனபோது வீட்டின் முன்பு கூட்டமாய் ஜனத்திரளைக் கண்டதும் விசாலம் துணுக்குற்றாள். வாசலின் முகப்புக் கதவு நீளமாகவும், அகலமாகவும் இருந்தது. வராண்டா போன்ற திறந்தவெளியில் நாலாபக்கமும் தேக்கு மரத் தூண்கள் பளபளப்பாய் நிற்க, அதன் மேற்கூரையில் பித்தளைச் சங்கிலியால் இணைக்கப்பட்ட நிலையில் ஒரு அழகான ஊஞ்சலில்ஆறு குழந்தைகள் உட்கார்ந்து ஆடிக்கொண்டிருந்தனர். விசாலமான நடு கூடத்தில் ரதியின் உடல் கண்ணாடிப் பெட்டிக்குள். அரைக்கண் திறந்தபடி இருக்க, வாத்சல்யன் தலைமாட்டில் ரதியைப் பார்த்தபடி நின்றிருந்தான். யார் யாரோ அவன் தோளருகே நின்று ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தனர்.

Advertisment

"வாத்சல்யா"... என்றழைத்த விசாலம் இரு கைகளை நீட்டி நிற்க, "அம்மாஆஆஆ..." என்றழைத்தபடி விசாலத்தை அணைத்துக்கொண்டு விசும்பியவனின் தோளைத் தொட்ட மாலா...

"அழுதது போதும்! ரதியை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம்." என்றாள் மாலா.மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் போல் துரிதமாய் இயங்கினான். அடுத்த மூன்று மணி நேரங்களில் எல்லாம் முடிந்து உறவுகள் அவரவர் வீடுகளுக்குச் சென்ற பிறகு. அத்வைத் - ஐ மாமியாரிடம் கொடுத்துவிட்டு நடு கூடத்தில் அமர்ந்து வாய்க்குள்ளேயே மந்திரத்தை முணுமுணுத்தாள் மாலா.

"என்னம்மா செய்றா...? எல்லோரையும் போல் இவள் இருந்திருந்தால் நான் ஏன் ரதியைத் தேடிப் போறேன். அநியாயமா ஒரு உயிர் போனதுதான் மிச்சம்" என்ற வாத்சல்யனை தனியே அழைத்துச் சென்ற விசாலம்...

"ரதியின் ஆத்மா சாந்தியடைய ஏதோ செய்றா. செய்துட்டு போட்டும் விடுடா. நீ செய்த தவறுக்கு மாலாவைக் காரணம் காட்டாதே. எல்லாம் விதிப்படிதான் நடக்கும் போல. ரதியோட தலையெழுத்து அல்ப ஆயுசில் போகணும்னு இருக்கு."

"அம்மா.... ப்ளீஸ்... எதுவும் பேசாதே. நானே நொந்து போயிருக்கேன். எனக்கு அமைதி வேணும்" என்ற வாத்சல்யன் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொள்ள... அங்கு மோகனமாய் சிரித்தபடி அமர்ந்திருந்த ரதியைப் பார்த்து மிரண்டான். கதவைத் திறக்க முயன்று தோற்றுப் போய், ‘மாலா.... அம்மா...’ என்று அலறி மயங்கி சரிந்தான். கதவைத் திறந்து உள்ளே வந்த மாலா, மயங்கிய நிலையில் இருந்த கணவனின் முகத்தில் நீரைத் தெளித்து எழுப்பி வெளியே அழைத்துச் சென்றாள்.

ஒவ்வொரு நாளும் தூக்கமின்றி கழிந்த நிலையில் பதினாறாம் நாள் காரியம் முடிந்த அன்று மதியம் தன்னை மறந்து தூங்கிய வாத்சல்யன் இரவு ஒன்பது மணிவரை எழுந்துகொள்ளவில்லை. விசாலம் மகனின் தோளைத் தட்டி எழுப்பிய பிறகே எழுந்தான். சுவர் கடிகாரம் ஒன்பது அடித்து ஓய்ந்ததும், "இவ்வளவு நேரமாவா தூங்கினேன்" என்று முணுமுணுத்தபடி முகம் அலம்பியவன், "அம்மா... துண்டு கொண்டுவாயேன்" என்று குரல் கொடுத்தான்.

துண்டுடன் வந்த மாலா,"சசிதரணி குழந்தையைக் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போனாள். அச்சு அசலா உங்க ஜாடை. நான் விரும்பிய மாதிரி" என்ற குரலில் பயந்து துண்டை வாங்காமல் பின்வாங்கினான். பேசியது மாலாதான்! ஆனால்... குரல் ரதியின் குரல்...! மாலா கட்டியிருந்த புடவையும், தொங்க விட்டிருந்தசெண்பகமலர்ச்சரமும், கண்களின் கிறக்கமும், ஈரத்தில் பளபளத்த இதழ்களும் ரதியை நினைவுபடுத்தின. "ரதி என்னை விட்டுடு... மாலாவை ஒன்றும் செய்யாதே...” தன்னை மறந்து அலறினான்.

"ஏன்... ஏன்... உன்னை விடமாட்டேன். நீ எனக்கு சொந்தம்! உன் மனைவி மேல் இத்தனை பாசமா?உனக்கு என் மேல் காதல் இல்லையா? உன் மனைவி கெட்டிக்காரிதான். என்னை உன் அருகேவிடாமல் துரத்த முழு முயற்சியில் இறங்கினாள். அத்தனை எளிதா அது! இது என் வீடு. நீ என் காதலன் மட்டுமல்ல, கணவனும் கூட.... உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன். வா வாத்சல்யா, என் வாசனை உனக்குப் பிடிக்குமல்லவா! வா... என்னை அணைத்துக்கொள். என் ஆத்மா உனக்காக எங்கும் தவிக்கிறது. வா வாத்சல்யா, என் ஏக்கத்தைப் போக்கு. பயப்படாதே!"

"இல்லையில்லை! நீ அருகில் வராதே. மாலாவை தயவுசெய்து விட்டுடு ரதி" என்ற வாத்சல்யன், “அம்மாஆஆஆஆஆ...” என்று அலறினான்.

"ஹா ஹா ஹா...” என்று உரக்கச் சிரித்தபடி, “உன் அம்மாவும் உன் மகனும் மாய மயக்கத்தில் இருக்கிறார்கள். நம் குழந்தையை நீ பார்க்கலையே! கொண்டு வரவா" என்றபடி குழந்தையை மார்போடு அணைத்தபடி வந்தவள் மாலாவா... ரதியா... குழம்பித் தவித்தான் வாத்சல்யன்.

"குழந்தையை ஒன்றும் செய்துவிடாதே" பயத்துடன் மெல்லிய குரலில் கூறியபடி, குழந்தையை வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டதும்...

"பரவாயில்லையே,குழந்தை மேல் அக்கறை இருக்கிறதே..." என்றபடி வாத்சல்யனின் தோளில் தன் முகவாயைப் பதித்தபடி, “உன்னைப் போலவே இருக்கிறது பார்த்தாயா... உன்னை எப்படி பார்க்கிறது பார்” என்றபடி அறைக்குள் அழைத்துக்கொண்டு போக, தன்னையே பார்த்தபடி இருந்த குழந்தை நொடிக்குள் உறங்கிவிட, தொட்டிலில் கிடத்தினாள் மாலாவின் உருவத்திலிருந்த ரதி. மோகனச் சிரிப்புடன் தன்னை நோக்கி வந்தவளைக் கிலியுடன் பார்த்தான் வாத்சல்யன்.

"ஏன் பயப்படுகிறாய் டியர்... உன் குடும்பத்தோடு நீ இங்கேயே மகிழ்வோடு வாழலாம். மாலாவை என் தேவைக்கு மட்டும் உபயோகிப்படுத்திக்கொள்வேன். மற்ற நேரங்களில் சாதாரணமாகத்தான் இருப்பாள். ஆனால்,உன் மனைவியாக நான் மட்டுமே இருக்க வேண்டும். உன்னை வசப்படுத்த நான் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் அனைத்தும் வீணாகிவிட்டது. அனைத்தையும் உன் மனைவி எனக்குத் திருப்பிவிட்டு என்னைக் கொன்றுவிட்டாள். விடுவேனா நான்! மாலாவாக வாழப்போவது இந்த ரதிதான்"என்று தன்மீது சாய்ந்தபடி அமர்ந்தவளைத்தன்முழு பலத்தையும் உபயோகித்து தள்ளிவிட்ட வாத்சல்யன், அறையைவிட்டு வெளியேற முயன்றபோது...

"என்னாச்சு அத்தான்... அத்வைத் எங்கே?” என்ற குரல் வாத்சல்யனைக் கட்டிப் போட்டது.

"மாலா... நீ சரியாகத்தானே இருக்கிறாய்? பதற்றத்துடன் அருகே வந்தவன் மாலாவைதூக்கி நிறுத்தினான். “நாம் இங்கிருந்து சீக்கிரம் கிளம்பிடனும் மாலா."

"இந்த நேரத்திலா.... விடியட்டும் அத்தான்!” என்ற மாலா, வாத்சல்யனின் வியர்த்திருந்த முகத்தை தன் முந்தானையால் துடைத்தாள். குழந்தை அழும் சத்தம் கேட்டுத் திரும்பியவள், “அச்சோ... இதற்கு பசிக்கிறது போலயே” என்று குழந்தையைத் தூக்கி அமுதூட்டத் துவங்க, "மாலா, நீ என்னை மன்னிச்சுட்டியா..." கேவியபடி காலடியில் அமர்ந்தான்.

"நடந்த எதற்கும் நீங்கள் காரணமல்ல அத்தான். ரதியின் தந்திரமும் மாந்த்ரீக செயல்களுமே காரணம். என்னைக் கொல்ல முயன்றாள். விதி அவளைக் கொன்றுவிட்டது. எது எப்படியானாலும் இந்தக் குழந்தை நம்முடையது. அத்வைத்க்குதுணையாக இருப்பாள் என்றெல்லாம் மாலாவைப் போல் பேசியதில் வாத்சல்யன் பயம் தெளிந்து கட்டிலில் அமர்ந்தான். மனைவியைத் தன் தோளோடு சேர்த்து அனைத்துக்கொண்டான். “ஐ லவ் யூ டியர்” காதுகளில் கிசுகிசுப்பாய் உச்சரித்தான். இளநகையை முகத்தில் பரவ விட்டபடி, பசி தீர்ந்து உறங்கிய குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்தாள். வெட்கத்தை முகத்தில் தேக்கி கணவனின் பக்கத்தில் அமர்ந்தாள். ஓராண்டுக்குப் பிறகு கிடைத்த தனிமையும், மனைவியின் வெட்கமும் வாத்சல்யனுக்கு தாபத்தை உண்டாக்க, ஆவலோடு நெருங்கினான். மாலாவைப் போலவே நடந்துகொள்ள மிகவும் பிரயத்தனப்பட்டாள். தன்னை வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தாள் ரதி. அப்படியிருந்தும்வாத்சல்யனுக்கு சிறு சந்தேகப்பொறி பற்றிக்கொண்டதில் சட்டென்று விலகினான்.

வாத்சல்யனின் விலகல் ரதிக்கு பெருத்த ஏமாற்றத்தை தர... “ஏய்ய்பட்டி, ஞான் என்ன பறைஞு,” என்று ஆரம்பித்து தன் தாய்மொழியில் சரமாரியாக சொல்லம்புகளால் துளைக்க, வாத்சல்யனின் மனமும் உடலும் நடுங்க ஆரம்பித்தது. ஓடிவந்து வளைத்துப் பிடிக்க முயன்றவளின் கைகளில் சிக்காமல் கதவைத் திறக்க முயன்று தோற்றுப் போய் மயக்கமடைந்தான்.

(திகில் தொடரும்)

-இளமதி பத்மா

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #15

sootchama ulagam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe