ADVERTISEMENT

"என்னை விரக்தியிலிருந்து மீட்ட அந்த வாசகம்..." ராகுல் டிராவிட்டின் வெற்றிக்கதை | வென்றோர் சொல் #36

03:25 PM May 26, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

“முதல் 15 நிமிடங்களில் டிராவிட் விக்கெட்டை எடுக்க முயற்சியுங்கள்; முடியவில்லை என்றால் மற்றவர்கள் விக்கெட்டை எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்” - ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக். “சச்சின் சிறந்த வீரர்தான்; ஆனால், டிராவிட் வலுவான வீரர்; குறைவான பந்துகளை மட்டுமே அவர் அடிப்பதால் அவர் தவறு செய்வதும் மிகக்குறைவு; களத்தில் குறைவான தவறு செய்பவரை வீழ்த்துவது மிகமிகக் கடினம்” - பாக். வேகப்புயல் அக்தர். “டிராவிட் இந்தியாவின் சுவராக அறியப்படுகிறார்; அவர் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் அந்தக் கோட்டைச் சுவரை உடைக்க பன்னிரண்டு பீரங்கிகளை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்ய வேண்டும்” - ஆஸி. சுழல் ஷேன் வார்னே. இதுபோல உலகம் முழுவதும் உள்ள வென்றவர்களின் டிராவிட் குறித்த வார்த்தைகளை வைத்து மட்டுமே வென்றோர் சொல் தொடரில் டிராவிட் குறித்து பல கட்டுரைகள் எழுதலாம். டிராவிட்... இந்திய கிரிக்கெட் உலகின் வலுவான கோட்டைச் சுவர். ஒருநாள், இருபது ஓவர், டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் டிராவிட் களம் கண்டிருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தக் கோட்டைச் சுவரின் அஸ்திவாரம் கூடுதல் வலுமிக்கது. டிராவிட் குறித்த மேற்கண்ட உலக வீரர்களின் உச்சி முகர்தலெல்லாம் ஒரே நாளில் கிடைத்தவையல்ல. உள்ளூர், சர்வதேசம் என டெஸ்ட் கிரிக்கெட் களத்தில் 44,152 நிமிடங்கள் களத்தில் நின்று சுழல், வேகம் என 31,258 பந்துகளை எதிர்கொண்ட பின்னரே கிடைக்கப்பெற்றவை.

1973ஆம் ஆண்டு ஷரத் டிராவிட் - புஷ்பா டிராவிட் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ராகுல் டிராவிட். மத்தியப் பிரதேசத்தில் வசித்த டிராவிட் குடும்பம், அவர் இளம் வயதாக இருக்கும்போதே கர்நாடகாவிற்குக் குடிபெயர்கிறது. டிராவிட்டின் மாமா சி.கே. நாயுடு மத்தியப் பிரதேசத்தின் உள்ளூர் கிரிக்கெட் அணியான கோல்கர் அணி வீரர் என்பதாலும், டிராவிட்டின் தந்தை பல்கலைக்கழக அணி வீரர் என்பதாலும் டிராவிட்டிற்கு இளம் வயதிலேயே கிரிக்கெட் அறிமுகமாகிவிடுகிறது. பயணம் செய்யக்கூடிய தொலைவில் உள்ளூர், சர்வதேசம் என எந்தக் கிரிக்கெட் போட்டி நடந்தாலும் மைதானத்திற்கே நேரில் சென்றுவிடுவார் டிராவிட்டின் தந்தை ஷரத் டிராவிட். அத்தகைய நேரங்களில் ராகுல் டிராவிட்டையும் உடன் அழைத்துச் செல்வார். நாட்கள் செல்லச்செல்ல தந்தையின் மிகுதியான கிரிக்கெட் ஆர்வம் ராகுல் டிராவிட்டிற்கும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அவர்கள் குடும்பம், படிப்புதான் முதன்மையானது என்ற கருத்துநிலையில் ஊறிப்போயிருக்கும் வழக்கமான இந்தியக் குடும்பத்தில் ஒரு குடும்பமாக இருந்ததால், ஆரம்பக்காலத்தில் டிராவிட்டின் கிரிக்கெட் வீரானாக வேண்டும் என்ற கனவிற்கு எதிர்ப்பு எழுந்தது. டிராவிட்டின் மாமாவும் தந்தையும் கிரிக்கெட்டில் சொல்லிக்கொள்ளும்படியான உயரத்தை எட்டாததால் டிராவிட்டின் பெற்றோர் இந்த விஷயத்தை மிகக்கவனமாக அணுகினர். அந்த எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்து, வீட்டின் பின்புற கிரிக்கெட், தெரு கிரிக்கெட், மாநில கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் எனச் செங்கல் செங்கலாக வலுவான அஸ்திவாரத்துடன் பின்னாட்களில் எழுந்து நின்றது இந்தச் சுவர்.

"வழக்கமான நடுத்தரக் குடும்பத்தில்தான் நான் பிறந்தேன். என் மாமாவும் அப்பாவும் கிரிக்கெட் வீரர்கள். என் அப்பாவிற்கு இருந்த கிரிக்கெட் மீதான அதீத ஆர்வம் காரணமாக டெஸ்ட் போட்டி நடைபெறும் நாட்களில் எங்கள் வீட்டில் ரேடியோ வர்ணனை முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அருகில் எங்காவது கிரிக்கெட் போட்டி நடந்தால், அப்பா என்னையும் என் சகோதரனையும் மைதானத்திற்கு அழைத்துச் செல்வார். என் தந்தையுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கும். அந்த ஆர்வம், என் வீட்டின் பின்புறமும் தெருக்களிலும் கிரிக்கெட் விளையாடும் ஆசையைத் தூண்டியது. அந்த ஆசைதான் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் என் எதிர்காலம் என்ன என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. அதனால் பள்ளிக் காலங்களிலேயே கிரிக்கெட் உலகத்திற்குள் முழுவதும் மூழ்கிவிட்டேன். கிரிக்கெட் போட்டி காரணமாக நான் அடிக்கடி பல ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் என்னுடைய கல்வி கேள்விக்குறியாகிறது என என்னுடைய பெற்றோர் பள்ளித் தலைமையாசிரியரிடம் முறையிட்டனர். எப்போதும்போல அவன் கிரிக்கெட் விளையாடட்டும்; அவன் படிப்பை என்னுடைய பொறுப்பில் விடுங்கள் எனக் கூறி என்னுடைய பெற்றோருக்கு அவர் நம்பிக்கை அளித்தார். அப்போது நான் எட்டாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தேன். அன்று என் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கை நம்ப முடியாதது. ரஞ்சி போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தபோது சுழற்பந்துவீச்சில் விளையாடத்தான் அதிக வாய்ப்புக் கிடைத்தது. சர்வதேச தரத்திலான வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள சந்தர்ப்பம் வாய்க்காததால், பயிற்சி எடுக்கும்போது டென்னிஸ் பந்தை தண்ணீரில் நனைத்து, அருகிலிருந்து அதிக வேகத்தில் எறியச் சொல்லி பயிற்சி எடுத்தேன். என்னுடன் இருந்தவர்கள் அந்தப் பயிற்சியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதினார்கள். இருப்பினும் நான் அதில் கூடுதல் கவனம் செலுத்தினேன். அதுதான் பின்னாட்களில் அக்தர், மெக்ராத், அக்ரம் போன்றவர்களை எதிர்கொள்ள எனக்கு உதவியது".

சாதிக்க வேண்டும் என்ற லட்சியக்கனவு கொண்ட இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோரிடத்தில் உடனடி வெற்றி குறித்தான எண்ணம் மேலோங்கியுள்ளது. இலக்கை அடைய ஆகும் காலமென அவர்கள் தீர்மானித்துள்ள கால அளவைத் தாண்டி எடுக்கப்படும் கூடுதல் காலம், தன்னம்பிக்கை இழப்பையும் லட்சிய ஓட்டத்தில் அயற்சியையும் ஏற்படுத்தும் காரணியாக அமைந்துவிடுகிறது. இதையும் நம்பிக்கை கொண்டு கடந்து வருபவர்களின் பாதங்களே வெற்றிக்கோட்டைத் தொடுகின்றன. தன்னுடைய வாழ்வில் இது போன்றதொரு தருணத்தை எதிர்கொண்டது குறித்து டிராவிட் ஒரு மேடையில் பேசுகையில், "19 வயதிற்குட்பட்ட இந்திய அணிக்கு கேப்டனாக நான் செயல்பட்ட போதிலும் இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்க 5 ஆண்டுகள் காலமெடுத்தன. நான் எங்கு சென்றாலும் இந்திய அணிக்காக எப்போது விளையாடுவீர்கள் என என்னிடம் கேட்பார்கள். இது எனக்கு விரக்தியை ஏற்படுத்தியது. கடவுள் தாமதிக்கிறார்; மறுக்கவில்லை என்ற வாசகத்தை என்னுடைய பைக்கில் எழுதி ஒட்டினேன். என்னுடைய கிட் பேக்கை எடுத்துக்கொண்டு காலையில் பயிற்சிக்குச் செல்லும்போது இந்த வாசகம்தான் எனக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும். சீன வகை மூங்கில் ஒன்று உள்ளது. அதன் விதையைத் தரையில் விதைத்துவிட்டு நீங்கள் தண்ணீர் ஊற்றினாலும் 5 வருடங்களுக்கு அதில் எந்த வளர்ச்சியையும் காண முடியாது. 5 வருடங்களுக்குப் பிறகு, சிறிய அளவில் முளைவிடும். அடுத்த ஆறு வாரங்களில் 90 அடி உயர வளர்ச்சியை அந்த மூங்கில் எட்டும். நாள் ஒன்றுக்குத் தலா 39 இன்ச் வளருவதைக் கண்கூடாகப் பார்க்க முடியும். அப்படியென்றால் அந்த ஐந்து ஆண்டுகளில் மூங்கில் என்ன செய்துகொண்டிருந்தது? அது, சத்தமில்லாமல் தன்னுடைய வேரை வளர்த்துக்கொண்டிருந்தது. அந்த அளவிற்கு வலுவான வேர் இல்லையென்றால், இவ்வளவு உயர மூங்கிலால் நிற்க முடியுமா? இந்த மூங்கில் 6 வாரங்களில் 90 அடி வளர்ச்சியை எட்டியதாகச் சிலர் சொல்லலாம். ஆனால், இந்த வளர்ச்சி 5 வருடங்கள் 6 வாரங்களில் எட்டப்பட்டது என்றுதான் நான் சொல்வேன்" என்றார். டிராவிட்டின் இந்த வார்த்தைகள் அந்த மூங்கிலின் வேர்களைவிட வலுவானவை என்றால் மறுப்பதிற்கில்லை.

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

செருப்பு போட்டதே காலேஜ் வந்துதான்... இஸ்ரோ சிவன் வெற்றிக்கதை | வென்றோர் சொல் #35

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT