ADVERTISEMENT

வெசை என்பது என்ன சொல்? -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 21

10:42 AM Sep 25, 2018 | poetmagudeswaran

ADVERTISEMENT

நாம் பேச்சளவில் சில நூறு சொற்களைத்தாம் பயன்படுத்துகிறோம் என்பது ஒரு கணக்கு. ஒருவர் தம் வாழ்நாளில் சில்லாயிரம் சொற்களை அறிந்திருந்தால் போதும், அம்மொழிப் புலத்தில் எவ்வோர் இடையூறுமில்லாமல் வாழ்ந்து முடித்துவிடலாம். ஒவ்வொரு துறையிலும் இயங்கக்கூடியவர்கள் அத்துறை சார்ந்த சில நூற்றுச் சொற்களைக் கூடுதலாக அறிந்திருப்பார்கள். அவ்வெண்ணிக்கைக்கு மேலான சொற்கள் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவைப்படவில்லை. அவற்றைக் கற்றுத் தேரும் முனைப்பும் வாய்ப்பும் அவர்கட்கு இல்லை.

ADVERTISEMENT

பாமரர்கள் பயன்படுத்தும் எளிய சொற்கள்தாமே, அவற்றில் என்ன மொழிநுட்பம் இருந்துவிடப் போகிறது? பொதுப் பயன்பாட்டில் உள்ளவாறு ஒரு சொல்லினைப் பேச்சில் வழங்குவார்கள் என்று நாம் எளிமையாகக் கருதிவிடுகிறோம். ஆனால், உண்மை அஃதன்று. எளியவர்கள் பயன்படுத்தும் மிக எளிய சொல் ஒவ்வொன்றிலும் தொன்மையான மொழி இலக்கணக் கூறு முறையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. இச்செய்தி எவர்க்கும் வியப்பூட்டுவதாகும். அத்தன்மையால்தான் தமிழ் மொழியானது பன்னூற்றாண்டுகளாக வேற்றாட்சி மொழியாளர்கள் ஆண்ட போதிலும் அழியாமல் நலியாமல் உயிர்ப்போடு வாழ்ந்து வருகிறது. பேச்சு வழக்கில் அருஞ்சொற்களும் இலக்கணக்கூறுகளும் தொடர்ந்து வாழ்கின்றன. அவை என்றென்றும் அழியாது நிலைத்தன.

அத்தன்மைக்கு நான் அடிக்கடி கூறும் எடுத்துக்காட்டு ‘அதற்கு, இதற்கு, எதற்கு’ என்னும் சொற்களாகும். அது + அன் + கு என்பதுதான் அதற்கு என்ற சொல்லின் உருபுப் பகுப்பாகும். அது என்னும் சுட்டு முற்றியலுகரத் தன்மையோடு இருப்பதனால் அச்சுட்டோடு ஓர் வேற்றுமை உருபு சேர்வதற்கு அன் என்ற சாரியை இடையில் தோன்றுகிறது. அதற்கு, இதற்கு, எதற்கு என்பனவற்றைத்தாம் நாம் இன்னும் எழுத்து வழக்கில் பயன்படுத்துகிறோம். அதற்கு, இதற்கு, எதற்கு என்பனவற்றைப் பேச்சு வழக்கில் ‘அதுக்கு, இதுக்கு, எதுக்கு’ என்று கொச்சையாகச் சொல்கிறோம். பேச்சில் ற் என்னும் வல்லின மெய்க்குக் கொச்சைத்தன்மை ஏறுவதால் அதுக்கு என்று சொல்லிவிடுகிறோம். அது + அன் + கு என்பதனை அதனுக்கு என்று நாம் எழுதுவதில்லை. சிலர் அவ்வாறு எழுதினால் அது பிழையாகும். நாமனைவரும் அதற்கு என்றே எழுதுகிறோம், அதுக்கு என்றே வாயால் வழங்குகிறோம்.

இங்கே ன்+கு சேர்ந்தால் ற்கு என்று ஆவது திருக்குறள் தொட்டு வழங்கப்பட்டு வரும் புணர்ச்சி இயல்பாகும். மகன்+கு = மகற்கு என்று ஆள்கிறார் வள்ளுவர். ஆனால், தற்காலத்தில் மகற்கு என்ற வழக்கொழிந்து மகனுக்கு என்று எழுதுகிறோம். அவன்+கு அவற்கு என்பதே சரியானதாகும். ஆனால், அவனுக்கு என்றே எழுதுகிறோம். அவனுக்கு, இவனுக்கு, எவனுக்கு என்பனவற்றை அவற்கு, இவற்கு, எவற்கு என்று ஆள்வதே தெள்ளிய தமிழாகும். அவர்களுக்கு என்று எழுதாமல் அவர்கட்கு என்பதே முறையாகும்.

ற்கு என்று பயன்படுத்துவதை மொழிப்பெரும் புலவர்களின் எழுத்துகளில் தொடர்ந்து காணலாம். சொல்+கு = சொல்லுக்கு என்று நாம் எழுதிக்கொண்டிருக்கிறோம். தமிழ்ப்பெருமக்கள் அதனைச் ‘சொற்கு’ என்று எழுதுவார்கள். அவ்வாறுதான் எழுத வேண்டும். ஆனால், நாம் சொல்லுக்கு என்று எழுதுகின்றோம். ஆனால், அது + அன் + கு = அதன்+கு என்பதனை முறையாக ‘அதற்கு’ என்று பயன்படுத்துகிறோம். அதற்கு, இதற்கு, எதற்கு என்பதனையே பேச்சிலும் பயன்படுத்துகிறோம். ஆக, திருக்குறளில் ஆளப்படும் புணர்ச்சி வழக்கு இன்றைய பேச்சு வரைக்கும் தொடர்ந்து உயிர்ப்போடு விளங்குகிறது. அந்த வழக்கம் பிழையாகப் பயிலப்படும் பலவற்றினை அடையாளம் காட்டிக் களையவும் பயன்படுகிறது.

புணர்ச்சி இலக்கணத்தின் நுண்ணிய வடிவமொன்று பாமர மக்களின் பேச்சளவிலும் ஊடிப் பரவியிருக்கிறது. அவ்வாறே அருஞ்சொற்கள் பலவும் மக்கள் பேச்சினில் கலந்திருக்கின்றன.

“என்ன மெதுவாகப் போறே ? வெசையாப் போ” என்று சொல்வார்கள்.

“ஆடி அசைஞ்சு நடந்தா எப்படி… வெசையாத்தான் நடக்கலாமுல்ல…” என்று கடிவார்கள்.

இந்த வெசை என்ற சொல்லை நம் எழுத்துகளில் எப்போதேனும் ஆண்டிருக்கிறோமா ? இல்லை என்றே கூறலாம்.

வெசை என்பது என்ன சொல் ? விசை என்ற சொல்தான் பேச்சு வழக்கில் ‘வெசை, வெசையாக’ என்று வழங்குகிறது. விசை என்ற சொல்லைப் பயன்படுத்தியே விசைத்தறி போன்ற சொற்றொடர்களை ஆக்கியிருக்கிறோம்.

படிப்பாளர்களைப் பொறுத்தவரையில் விசை என்பது அருஞ்சொல். பாமரர்களைப் பொறுத்தமட்டில் அச்சொல் அவர்களின் அன்றாடப் பயன்பாட்டில் வழங்கும் எளிய சொல். இவ்வாறு பேச்சில் பொதிந்திருக்கும் சொற்கள் ஒன்றிரண்டல்ல, பல்லாயிரம் சொற்களை அகழ்ந்து எடுக்க முடியும்.

முந்தைய பகுதி:


தற்காப்பு, தற்பெருமை தெரியும்... தற்படம் தெரியுமா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 20

அடுத்த பகுதி:

நில் என்பதற்கு எது எதிர்ச்சொல் நட என்பதா, அமர் என்பதா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 22

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT