Skip to main content

அனைத்து நாடுகளின் தோழன்! - ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 19

எனது இளமைக்காலத்தில்,  ஆல்பர்ட் வான் சாமிஸ்ஸோவின் தனது நிழலை விற்ற மனிதன் என்ற கதையைப் படித்திருக்கிறேன். அது என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறது. அந்தக் கதையின் கடைசி அத்தியாயத்தில், தனது நிழலை விற்ற மனிதனின் நிழலை, பிசாசு, குனிந்து கவனமாக சுருட்டிக் கொண்டிருக்கும்.

 

paththirikaiyalar pablo neruda part 19

 

நான் எப்போதும் பார்க்கிறேன், சில பெரிய கவிஞர்கள், தங்களைப் பின்தொடரும் நிழலை விற்கிறார்கள். அந்த நிழல், தரையில் விழும்போது வெட்டுப்படுகிறது, சுருண்டுகொள்கிறது, அதன் சொந்தக்காரரின் பல்வேறு தீய உணர்வுகளில் இருந்து தன்னை பிரித்துக் கொள்கிறது. அந்த தீய ஆன்மாக்களில் கடந்தகால நாகரிகம், சுயமாக அமைந்துள்ள சாதாரண திறமைகள் மற்றும் இலக்கியத்தின் மீதான ஆர்வம் ஆகியவை அடங்கும். அத்துடன், பூர்ஷ்வா முதலாளிகளால் அவ்வப்போது கொடுக்கப்படும் லஞ்சமும் உள்ளடங்கும்.

 

மாயாகோவ்ஸ்கியின் பாரம்பரியமானது, அவரது முடிவற்ற கவிதைகளையும், அவரது மாபெரும் நிழலையும் உள்ளடக்கியது. தனது நிழலை ஒருபோதும் விற்காத கவிஞர் அவர். தனது ஓட்டுமொத்த வாழ்வின் இருப்பிடமாக அவர் அதை பயன்படுத்தினார்.

 

முதல் பார்வையில், அவரது கவிதைகள் முடிக்கப்படாததாக தோன்றும். மரணம், அதை, தனது மிகப்பெரிய கத்தரிகளால் பாதியிலேயே வெட்டியது. இந்த உலகவரலாற்றில் வேறு எந்தப் பெண்ணையும் விட மிகமிக உயரத்தில் பயணம் செய்த முதல் விண்வெளி வீராங்கனை வாலண்டினாவைப் பற்றி, மாயாகோவ்ஸ்கி ஒரு கவிதை எழுதவேண்டும் என்று நாம் எவ்வளவு விரும்புகிறோம். மாயாகோவ்ஸ்கியால் மட்டுமே, இந்த மாபெரும் விண்பயணத்தைப் பற்றி, துப்பாக்கிக் குண்டு போல கச்சிதமான வார்த்தைகளால் வர்ணிக்க முடியும். ஒரு விண்வெளி வீரரின் ஆன்மாவாக பெருமிதத்துடன், நிற்கும் அவர், தனது காதல் மற்றும் போராட்டக் கவிதைகளில் கூட விண்வெளி கற்பனைகளை எழுதிய அவருக்கு, எழுதுவதற்கு நேரம் இல்லாமல் போனால், வேறு யாராலும் அந்த வரிகளை எழுத முடியாது. தனது வாழ்விலும் மரணத்திலும் ஒரு பெரும் சூறாவளிபோல கவிதையால் பல கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், சக கவிஞர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் அவர்.

 

paththirikaiyalar pablo neruda part 19

 

அக்டோபர் புரட்சியின் சக்திமிக்க இதயத்துடிப்பை மாயாகோவ்ஸ்கியின் கவிதையில் உணர முடியும். மறக்க முடியாத நிகழ்வுகளைப் பற்றி அவர் பாடினார். தனது ஒட்டுமொத்த வாழ்வையும்,  ஆன்மாவையும், அவர் புரட்சிக்காகவே அர்ப்பணித்தார்; அவரது கம்பீரமான கவிதைகள், சோசலிசக் கட்டுமானத்திற்கு மிகச்சிறந்த கருவியாக இருக்கிறது.

அதனால்தான், காலம் மாறினாலும், மாயாகோவஸ்கியின் புகழ்மாங்காமல் நிலைக்கிறது, மாறாக, அவர் புகழ் ஓங்குகிறது.

 

அவரது நிழல், சமத்துவத்தின் தூதுவனாக, லத்தீன் அமெரிக்க மாகாணங்களின் தொலைதூரப் பிரதேசங்களில் ஒரு வால்நட்சத்திரத்தைப் போல, இளைய எழுத்தாளர்களின் இதயங்களில் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. அது, நூலகங்களில் இருந்து, மொந்தை மொந்தையாக இருந்த பிற்போக்குக் குப்பைகளை பெரும் சத்தத்துடன் தூக்கியெறிந்தது. வீதியில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்றது; மக்களின் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சில நேரங்களில் இந்த நிழல் ஒரு கத்தியைப் போன்று இருந்தது; சில நேரங்களில், ஒரு ஆரஞ்சுப்பழத்தைப் போல, அனைத்து கோடை வெப்பத்தையும் உறிஞ்சிக் கொண்டது.

 

paththirikaiyalar pablo neruda part 19

 

எனது தலைமுறையின் சில கவிஞர்கள், மாயாகோவ்ஸ்கியை ஒரு சிறந்த, பழமையான கவிஞராகக் கருதினார்கள். அவரது புத்தகங்கள் புத்தக அலமாரிகளோடு அடங்கிவிட்டதாக கூறுவார்கள். ஆனால், அவருடைய ”கெட்ட பழக்கங்கள்” அவரை அவருடைய கவுரவமான இடத்திலிருந்து தினமும் விலகும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தன. அவரும் அவருடைய இடத்திலிருந்து விலகி எனது தலைமுறையினரின் போராட்டங்களிலும், வெற்றிகளிலும் பங்கேற்கத் தொடங்கினார். மாயாகோவ்ஸ்கி மிகச்சிறந்த முதன்மையான தோழராக கருதப்படுவதற்கு இதுதான் காரணம்.

உலகின் அனைத்து பகுதி மக்களுக்கும், அனைத்து இனங்களுக்கும், அனைத்து நாடுகளுக்கும், அனைத்து கவிஞர்களுக்கும் அவர் சிறந்த தோழர்.

அனைத்து பகுதிகள், இனங்கள், நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களுக்கும் அவர் ஒரு ஆசிரியரும் கூட!

                                               

(பிராவ்தா, ஜுலை 19, 1963)

 

 

முந்தைய பகுதி:

கியூபாவின் பாடல்கள்... ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 18

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்