ADVERTISEMENT

கியூபாவின் வெளிச்சம்! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 13

09:47 AM Apr 17, 2019 | Anonymous (not verified)

கியூபாவில் நடைபெறும் நிகழ்வுகள் லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது இயற்கையானதுதான். ஏனெனில் இவர்கள் அன்னியர்கள் அல்ல. வெவ்வேறு வீடுகளில் வசிக்கும் உறவினர்கள்தான். ஆனால், அந்த வீடுகள் அதில் வசிக்கும் குடும்பங்களுக்கே சொந்தமானதாக இருப்பதில்லை. அவை வாடகை வீடுகளாக இருக்கும். ஒவ்வொரு நாடும் விரைவாக தங்கள் வீட்டை சொந்தமாக்குவோம் என்றும் அதன் உண்மையான தலைவர்களாக தாங்கள் மாறுவோம் என்றும் நம்பிக்கையோடு இருக்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

லத்தீன் அமெரிக்க தேசத்தில் இதுவரை சொந்த வீடு பெற்ற நாடாக கியூபா ஆகியிருக்கிறது. அதனால்தான், கியூபாவுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள லத்தீன் அமெரிக்காவின் மற்ற நாடுகள் ஆர்வமாய் இருக்கின்றன. இது வெறுமனே ஆர்வமோ, அனுதாபமோ, நம்பிக்கை பகிர்தலோ மட்டும் அல்ல. இவற்றையெல்லாம் தாண்டி ஏதோ இருக்கிறது. அதனால்தான், கியூபாவின் நிகழ்வுகள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு வேகமாக கடத்தப்படுகிறது. வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கும் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கும் அந்தச் செய்திகள் பகிரப்படுகின்றன. அந்த நாடுகள் அனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட மனிதர்கள் வாழ்வது உண்மைதான். ஒவ்வொரு நாட்டையும் வாடைகைக்கும் குத்தகைக்கும் எடுத்திருப்போர் கியூபா விவகாரத்தைப் பற்றி தங்களுடைய சொந்த பார்வையில்தான் பார்ப்பார்கள். பெரும்பான்மையான மக்கள் காரணத்தோடும், இதயசுத்தியோடும் கியூபாவைப் பற்றி யோசிக்கிறார்கள். மீதமுள்ளோர், தங்களுடைய பொருளாதார நிலையிலிருந்து யோசிக்கிறார்கள்.

லத்தீன் அமெரிக்க அரசுகள் தங்கள் மக்களைக் காட்டிலும் கீழ்நிலையிலேயே இருக்கின்றன. ஆனால், இப்போது தங்கள் அரசுகள் எப்படி சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அடுத்த சில ஆண்டுகள் கழித்து எப்படி செய்ய வேண்டும் என்பதை அரசுகள் கற்றுக்கொள்ளக்கூடும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலையைக் காட்டிலும் காலனியாதிக்க அடிமைத்தனம்தான் அதிகமாக இருக்கிறது. உண்மையில் லத்தீன் அமெரிக்க அரசுகளுக்கு முக்கியமான பங்கேதுமில்லை. அவை அமெரிக்கா உதவி செய்யும் என்று நம்பி இருக்கின்றன. ஆனால், அந்த உதவி நிச்சயமாக கிடைக்காது. ஆனால், அதை எதிர்பார்க்கும் அரசுகள் அமெரிக்காவுக்காக அன்றாடம் செயல்படும் நிலை உருவாகிறது. இது எப்படியென்றால் நட்சத்திரம் ஜொலிக்கும் சட்டையும், கோடுபோட்ட பேண்ட்டும் அணிந்து, அவற்றை நீண்ட அங்கியால் மறைத்து சர்ச்சுக்கு ஒருவர் போவதாக ஸ்பானிஷ் கதை ஒன்று வரும். தேவாலய வாசலில் வரிசையாக அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் அவர் தங்களுக்கு ஏதேனும் உதவி செய்வார் என்று அவரை நோக்கி கைகைகளை ஏந்துவார்கள். ஆனால் அவர் ஏதேனும் கொடுப்பாரா என்பது அவர்களுக்கும் தெரியாது. அவருக்கும் தெரியாது. எனினும் அவரை எதிர்பார்த்து அவருடைய கருணைக்காக ஏங்கி நிற்பார்கள்.

கியூபாவை முடக்க அமெரிக்கா இன்னொரு முயற்சி மேற்கொள்ளும்போதும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசுகள் அமெரிக்காவை நோக்கி நீட்டிய கைகளோடுதான் நிற்கிறார்கள். அவர்களுக்கு கியூபாவைப் பற்றி கவலையே இல்லை. ஆனால், கியூபாவை காப்பாற்றுவதற்காக சோவியத் யூனியன் உற்சாகமூட்டும், கவுரவமான நடவடிக்கையை எடுத்தது. லத்தீன் அமெரிக்காவில் உள்ள சில ஜனாதிபதிகளும், அமைச்சர்களும் தங்கள் நாடுகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலையே இல்லாமல் இருக்கிறார்கள்.

கியூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு முயற்சியைக் கண்டித்து லத்தீன் அமெரிக்காவில் மக்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள். மாணவர்களும், தொழிலாளர்களும் அந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கிறார்கள். இதுவரை அமைதியாக இருந்த எழுத்தாளர்களும் கவிஞர்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். தன்னலக் குழுக்களும், நிலப்பிரபுத்துவ அரசியல்வாதிகளும் பயப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்குள்ளேயே “இன்னொரு கியூபா உருவாக அனுமதிக்கக்கூடாது. கம்யூனிஸம் பரவுவதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

மக்கள் பெருங்கடலின் கோபப் பேரலை வீதிகளிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், பள்ளிகள், தொழிற்சாலைகள் மட்டுமின்றி புத்தகங்களிலும் கூட மோதி தெறிப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் புதிய சட்டங்களை இயற்ற விரும்புகிறார்கள். தேர்தல்களை முறையை மாற்ற விரும்புகிறார்கள். புள்ளிவிவரங்களை திருத்துகிறார்கள். புதிய சகாப்தம் மொட்டு விடுவதற்குள் கிள்ளி எறியத் துடிக்கிறார்கள்.


இவை அனைத்தும் அவர்களுடைய ஏராளமான நேரத்தையும் கவனத்தையும் எடுத்துக்கொள்கிறது. இருந்தாலும், அவர்கள் அமெரிக்காவின் கைகளை விட்டுவிட தயாராக இல்லை. அமெரிக்காவின் கற்பனைத் தங்கள் அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை. இவற்றுக்கிடையே, லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் தொலைதூர பகுதிகளுக்கும் கியூபாவின் வெளிச்சம் பரவி அடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

ப்ராவ்தா, டிசம்பர் 17, 1962

முந்தைய பகுதி:


மலைத்தொடர்களின் மீதொரு விடியல்! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 12

அடுத்த பகுதி:

மரக்குதிரை! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 14


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT